ஊழ் (13)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

அமுதனின் அப்பா அவர் அறையில் இருந்து வெளியே வந்தார். வீட்டிற்குள் நுழைந்த அகிலனைப் பார்த்து “வாப்பா….” என்று சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

அமுதனை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்தவர்களில் சிலரும் அவனுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

அந்தப் பின்சீட்டுப் பெரியவர் மச்சக்காளை தன் முறுக்குமீசைக்கு இடையில் காபித்தம்ளரை வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சுவிட்டு. “இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தள்ளிப் போடக்கூடாதுப்பு. சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடுத்துரனும். நாலு பெரிய மனுசங்களை கூட்டிக்கிட்டுப்போய் பேசித் தீத்துரனும்.” என்றார்.

“இல்லை மாமா தப்பு நம்ம பேர்லயும் இருக்கு அதான் யோசிக்கிறேன். பொண்ணப் பெத்தவனுக்கு கோவம் வரத்தானே செய்யும்” என்று அமுதனின் அப்பா அவருக்கு பதில் கூறினார்.

இவர்கள் பேசுவதிலிருந்து இவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. மதுமதியின் அண்ணன் ராஜசேகர் இங்கு வந்து எல்லாம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறான். என்பதை அமுதன் அறிந்துகொண்டான். “ஆனால் அவன் சொன்னதை இவர்கள் எப்படி அப்படியே நம்பினார்கள்?” என்பதை நம்ப அவனுக்கு கொஞ்சம் சிரமாகத் தான் இருந்தது.

“என்ன பெரிய கோவம் வந்துச்சு அந்த வெண்ணைக்கு? அதுக்குன்னு இப்படித்தான் தங்கச்சி புருஷன் எவகூடவோ இருக்க போட்டாவல்லாம் ஊருபூராம் சூரை விட்டுட்டுப் போவானா?” பின்சீட்டுப் பெரியவர் சொல்லி முடித்தபோது அமுதன் மார்பில் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோல் உணர்ந்தான். அவனுக்குள் இருந்த பதட்டம் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவிடாமல் செய்தது. அழுதுவிடக்கூடாது என்று அதிகம் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினான்.

“எதையும் எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்ய முடியாது. தப்பு நம்ம பேர்ல இருக்கதால” என்று தொடங்கினார் சீனு மாமா.

குறுக்கிட்ட பெரியவர் “என்னய்யா தப்பு தப்புன்றீங்க. ஊர்ல உலகத்துல செய்யாததையா செஞ்சுப்புட்டான்?”

சீனு மாமா என்னைப் பார்த்தார். “அமுதா நீதான் சொல்லணும். ஒரு பொண்ணோட நீ இருக்க நிறைய போட்டவ காமிச்சு உனக்கு முன்னமே கல்யாணம் ஆகி பிள்ளை இருக்குன்னு அந்த ராஜசேகர் ஆள்பேரெல்லாம் கூட்டிட்டு வந்து கத்திட்டுப் போயிருக்கான். ஒரு சின்னப்பிள்ளை போட்டாவ காமிச்சு அது உனக்கு பொறந்த பிள்ளைன்னு சொல்றான். எது உண்மை? எது பொய்? நாங்க எல்லாரும் எதை நம்புறதுன்னு குழம்பிப் போய் இருக்கோம்.”

அமுதன் தலையை கவிழ்ந்தபடி எப்படி பேச்சைத் தொடங்கவது என்று யோசித்துகொண்டிருந்தான். “நீ சொல்றத வச்சுதான்ப்பு நாங்க என்ன செய்றதுன்னு யோசிக்க முடியும். எதா இருந்தாலும் தகுரியமா சொல்லு” என்றார் அந்தப் பெரியவர்.

என்னதான் அவன் அந்தரங்கம் ஊர் முழுவதும் சிதறிப் போயிருந்தாலும் அதைப் பொதுவெளியில் அவன் வாயால் அப்படிப் பகிரங்கமாக போட்டுடைக்க அவன் மனம் ஒப்பவில்லை. “மாமா உங்ககிட்ட தனியா பேசலாமா?” என்றான்.

“ஆமாயா சின்னப் பையனப் போட்டு அதைச் சொல்லு இதைச் சொல்லுன்னுன்னா என்னத்தைச் சொல்லுவான். போய் தனியாப் பேசி என்ன ஏதுன்னு தெரிஞ்சுகிட்டு வாயா” என்றார் பெரியவர்.

அமுதனும் அவன் மாமாவும் எழுந்தார்கள். அவன் அக்கா வேகமாக அவர்கள் அருகில் வந்தாள். “மேல உன் ரூமை சுத்தம் பண்ணி வச்சிருக்கேன்டா அங்க போங்க” என்று கூறிவிட்டு அவன் மாமாவிடம் இரகசியம் பேசுவது போல் மெல்லிய குரலில் “ஏங்க இப்படி வந்ததும் வராததுமா ஆரமிக்கணுமா? ஒரு ரெண்டுநாளு பொறுத்து விசாரிக்க கூடாதா?” பேசிக்கொண்டே அவர்களோடு மாடிப்படிகளில் ஏறி அமுதனின் அறைவரை வந்தாள்.

“அந்த ராஜசேகருக்கு இவன் வந்த விஷயம் இந்நேரம் தெரிஞ்சிருக்கும். ஊருக்குள்ளயே பல எதிரிய வச்சுருக்கீங்க நீங்க. அவன் எதுவும் பண்றதுக்குள்ள நம்ம என்ன பண்றதுன்னு முடிவு பண்ண வேணாமா?” என்று அவரும் அவளிடம் இரகசிய குரலிலேயே பதில் கூறினார்.

“அமுதா ரொம்ப குழப்பிக்காதடா. எல்லாம் சரியாகிடும். நீ அவர்ட்ட பேசிட்டுக் குளிச்சிட்டு இங்கயே இரு. நான் சாப்பாடு கொண்டு வர்றேன். அதுக பெருசுக பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்” என்றாள் அமுதனைப் பார்த்து.

“சரிக்கா..” என்று நிறுத்தி பின் “அம்மா எங்கக்கா?” என்றான். “அது கெடக்கு, என்னத்தையாவது பேசிப் புலம்பிக்கிட்டு கிடக்கும். அடுப்ப விட்டு என்னைக்கு வெளில வந்துச்சு. அதப்பத்தி எல்லாம் நீ கவலைப் படாத.” என்று கூறிவிட்டு வேகமாக படியிறங்கி கீழே சென்றுவிட்டாள்.

“சொல்லு மாப்ள.”

“அம்மா என் மேல ரொம்ப கோவமா இருக்கா மாமா?”

“நேத்துல இருந்து அழுதுக்கிட்டே இருந்தாங்க. இன்னைக்கு காலைல நாங்க கிளம்புனப்போ கூட அவங்கதான் வந்து, பாத்துக் கூட்டிட்டு வாங்கப்பான்னு சொல்லி அனுப்பிவிட்டாங்க. இந்த ஆளுகள்லாம் இருக்கதால உன்கூட பேச முடியாதுல்ல அப்பறமா வருவாங்க…”

“ம்ம்ம்….” தனக்குள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். தன மாமாவிடம் எப்படித் தொடங்குவது எந்த உண்மையைச் சொல்வது என அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே.

“யாரு மாப்ள அந்தப் பொண்ணு? உனக்கு தெரிஞ்ச பொண்ணா இல்லை ஏதாவது கிராப்பிக்ஸ் பண்ணிட்டாய்ங்களா?”

ஒரு நொடி அத்தனையும் பொய். அந்தப் பெண் யாரென்றே எனக்குத் தெரியாது. எல்லாம் கிராபிக்ஸ் என சொல்ல அவன் உள்ளம் துடித்தது. மேலும்மேலும் பொய் சொல்லி இவர்களிடம் இருக்கும் கொஞ்சம் நம்பிக்கையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக சில உண்மைகளைக் கூறினான். அவர் “ம்ம்ம்” “ம்ம்ம்” என்று கவனமாகக் கேட்டுக்கொண்டார்.

“நாலு வருசத்துக்கு முன்னால நடந்ததையா அந்தப் பொண்ணு இப்போ தோண்டி எடுத்துட்டு வந்துருக்கு? அப்போ அந்த பிலிப்பைன்ஸ்காரி இப்போ சிங்கப்பூர்ல இல்லையா?”

“ம்ம்ம்… ஆமா மாமா அவள் சிங்கப்பூர விட்டு போயே நாலு வருஷம் ஆச்சு.”

“அந்தக் குழந்தை?”

“அது எனக்குத் தெரியாது மாமா என்கிட்ட காசு வாங்குறதுக்காக அவதான் எனக்குப் பிறந்ததுன்னு சொல்லி ஏமாத்திருக்கா? அவளுக்கு பத்து வயசுல ஒரு பையன் கூட இருக்கானாம். அதையும் அவள்தான் சொன்னாள்.”

இப்போதைக்கு ஆண்ட்ரியாவை அசிங்கப்படுத்துவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் குடும்பம் நான் சொல்வதை கண்டிப்பாக நம்பும் என்று நம்பினான். அதைத்தான் செய்யத் தொடங்கினான்.

“பத்து வயசுல பையன் இருக்கானா? புருஷன் இருக்கானா?”

“அதெல்லாம் இல்லை மாமா அவனுக கல்ச்சர்ல இதெல்லாம் சாதாரணம். எப்படியோ போய் அவகிட்ட சிக்கிக்கிட்டேன் அதுக்கான தண்டனைய இப்போ அனுபவிக்கிறேன்.”

“வெளிநாட்ல இருக்கவன் படிச்சவன் கவனமா இருக்க வேண்டாமா? இப்படித்தான் எவனாவது கிடைப்பானான்னு அலைவாளுக போல”

பல கிராமத்து மனிதர்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் என்றாலே, அவள் குடும்பம் இல்லாதவள், பல ஆண்களுடன் சுற்றித் திரிபவள், புகை பிடிப்பது சாராயம் குடிப்பது போன்ற பழக்கமுள்ளவள், என்ற நினைப்புதான். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அந்த வெளிநாட்டுப் பெண்களுக்காக வாதாடுவதாளல் அமுதனுக்கு எந்த பலனும் இல்லை. அதேநேரம் அவர்களின் அந்த நினைப்பு அவனுக்கு சாதகமாக பயன்பட்டுக் கொண்டிருப்பதில் அவனுக்கு லாபம்தான். அவன் எதுவும் பேசாமல் தலையைக் கவிழ்ந்துகொண்டு அமைதியாக உட்காந்திருந்தான்.

“இன்னுமும் அந்த பிலிப்பைன்ஸ்காரி உனக்கு தொந்தரவு குடுக்குறாளா?”

“வரும்போதே இனிமேல் இந்த மாதிரி தொல்லை குடுத்தா போலிஸ்ல புடிச்சு குடுத்துருவேன்னு வார்ன் பண்ணிட்டுதான் வந்தேன். இனிமேல் அவள் தொல்லையெல்லாம் இல்லை மாமா. ஆனா மதுமதிதான் என்னோட உடைஞ்சுபோய் தூக்கிப் போட்டுருந்த பழைய போன்ல இருந்த போட்டோ எல்லாம் எடுத்துட்டு இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கா? ஒரே ஒருதடவை நான் அவகூட பேசிட்டேன்னா எப்படியும் அவளுக்கு புரிய வச்சுருவேன் மாமா”

“ம்ம்ம்… அந்தப் பொண்ணு பேச ரெடியா இருந்திருந்தாதான் இங்க வரைக்கும் பிரச்சனை வந்திருக்காதே. இந்த பொண்ணுக எப்போ எப்படி மாறுவாங்கன்னு புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம் தான்.”

சிறிது இடைவெளிக்குப் பின் அவரே தொடர்ந்தார். “கீழ பெருசுகட்ட போய் எல்லாத்தையும் சொல்ல வேணாம். உனக்கும் அந்த பிலிப்பைன்ஸ் பொண்ணுக்கும் நாலு வருஷத்துக்கு முன்ன பழக்கம் இருந்தது உண்மை. அப்பறம் அந்த பொண்ணு ஏமாத்துக்காரி ஏற்கனவே அவளுக்கு பிள்ளைக இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு நீ ஒதுங்கிட்ட , காசுக்காக அப்பப்போ அவள் உன்னை தொந்தரவு பண்ணிருக்கா. அவள் சிங்கப்பூர விட்டுப் போயே நாலு வருஷம் ஆச்சு. இதை மட்டும் சொல்லுவோம். அப்போத்தான் அதுக போய் அங்க பேச தோதா இருக்கும்.”

இன்னும் எத்தனை உண்மைகளைச் சொல்வது எதனை மறைப்பது என்று அமுதனும் அறிந்திருக்கவில்லை. அவன் சொல்வதில் எது உண்மை எது பொய் என்பதை அங்கிருப்பவர்களும் அறிந்திருக்கவில்லை.

அவன் ஊழ் மட்டும் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 14

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -