ஊழ் (11)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

தூரத்தில் உயிரற்றுக் கிடந்த அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். அவன் நண்பர்கள் யாருக்காவது அழைக்கலாம் என்று தோன்றியது இப்போது அவனுக்கு யாருடைய உதவியாவது நிச்சயம் தேவை.

அலைபேசியை கையில் எடுத்தான் அழுத்திப் பிடித்து உயிர்பெறச் செய்தான். ரகு என்று அடித்து அவன் எண்ணை அழைப்பதற்கு தேடினான். அவன் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அவன் மாமா சீனு, அக்காவின் கணவர்.

எடுப்போமா? வேண்டாமா? சில நொடிகள் அதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு எடுத்தான்.

“ஹலோ… ஹலோ… மாப்ள…. அமுதா…. லைன்ல இருக்கியா…. ஹலோ….” எதுவும் பதில் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

‘என்னங்க எடுத்துட்டானா? அவன் தான் பேசுறானா?’ பின்னால் அமுதனின் அக்காவின் குரலும் கேட்டது.

மிகவும் தாழ்ந்த குரலில் “மாமா…. சொல்லுங்க மாமா…” என்றான்.

“என்னப்பா என்னாச்சு? காலைல இருந்து உன் போனுக்கு அடிச்சுக்கிட்டே இருக்கோம் போகவே இல்லை”

“ஸ்விட்ச் ஆப் ஆகிருச்சு மாமா.”

“உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே நல்லாத் தானே இருக்க?”

“ம்ம்ம்…. இருக்கேன் மாமா…”

“என்னய்யா என்ன நடந்துச்சு? அந்த புள்ளை கோவிச்சுகிட்டு இங்க வந்துருச்சாம்” அவர் இரகசியம் பேசுவது போல் கேட்டார். அமுதன் பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருந்தான்.

“அந்தப் புள்ளையோட அண்ணன் காலைல வந்து இங்க உங்க வீட்ல ஒரே ஆட்டம் போட்டுட்டு போயிருக்கான். அப்பறம் தான் நாங்க எல்லாம் வந்தோம்”

நடக்க கூடாது என்று நினைத்திருந்த ஒவ்வொருன்றாக அமுதனின் வாழ்வில் அரங்கேற தொடங்கியது.

‘அவன் இங்கு வந்து என்ன கத்தினானோ? என் தாய் தந்தையை ஏதாவது தாக்கி இருப்பானா?’ மனதிற்குள் முட்டிய வார்த்தைகள் வெளிவரவில்லை. அழுகை தான் முட்டிக்கொண்டு வந்தது. அதை அடக்கும் முயற்சியில் மூக்கை மீண்டும் மீண்டும் உறிஞ்சினான்.

“ஏய் அழுகாதையா… எல்லா குடும்பத்துலயும் இப்படி பிரச்சனை எல்லாம் வரத்தான் செய்யும். கவலைப்படாத பாத்துக்கலாம்.”

நடுங்கும் குரலில் அழுகையை அடக்கிக்கொண்டு “அம்மா அப்பாவுக்கு ஒன்னும் இல்லைல மாமா…” என்று சொல்லி முடிக்கும்முன் மீண்டும் நெஞ்சைப் பிளந்துகொண்டு அழுகை வெளியே வந்தது.

“இல்லப்பா இல்லை அதெல்லாம் ஒண்ணுமில்லை… அப்பா அம்மாலாம் நல்லாத்தான் இருக்காங்க… நீ முடிஞ்சா உடனே இங்க கிளம்பி வந்திரு” என்றார். பின்னால் ‘அதென்ன முடிஞ்சா அவனை உடனே வரச் சொல்லுங்க’ என்று அவன் அக்காவின் குரல் கேட்டது.

கண்களைத் துடைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டான். “மாமா அங்க என்ன நடந்துச்சு சொல்லுங்க… வந்து ரொம்ப பிரச்சனை பண்ணுனாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை சும்மா அந்த சண்டியரு வந்து கத்திட்டு போயிருக்கான். அந்தக் கட்சில இருக்கவனே அவனை எவனும் மதிக்க மாட்டான். இங்க வந்து சண்டியர்தனத்தை காமிச்சுட்டு போயிருக்கான். அதைப்பத்தி எல்லாம் நீ ஒன்னும் கவலைப்படாத. நீ ஊருக்கு வர்றதுக்கு முதல்ல ஏற்பாடு பண்ணு. நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன்”. ‘அப்பறம் பேசுறேன்’ என்று சொல்லிய அந்த விதத்திலேயே சொல்வதற்கு நிறைய விசயங்கள் ஒளிந்துகொண்டிருந்தன.

“ம்ம்ம்… சரி மாமா….” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

‘ஏதோ நடந்திருக்கிறது இன்னும் என்னென்னுமோ நடக்கப்போகிறது. தொடங்கிய வேகத்தில் முடிவைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என் மணவாழ்க்கையின் பயணம். நிச்சயமாக இதில் என் பிழை நிறையவே இருக்கிறது. ஆனால் எப்படிச் சரி செய்யப்போகிறேன்?’ தனிமையின் தாக்குதல் அவன் மண்டையைப் பிளந்தது. ரகுவின் அலைபேசிக்கு அழைத்தான்.

“டேய் என்னடா ஆச்சு? உடம்புக்கு என்ன? ஆபீஸ் போகலையாம்? சிஸ்ட்டர் எப்படி இருக்காங்க?” அமுதன் பேசத் திணறிக்கொண்டிருக்கையில் ரகு கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தான்.

“அவ போய்ட்டா டா….” என்று கூறிவிட்டு இடைவெளி விட்டான்.

“எங்க டா?”

“இந்தியாவுக்கு… அவ அம்மா வீட்டுக்கு….”

“ஏன்டா? என்னடா ஆச்சு?”

“கொஞ்சம் வீட்டுக்கு வர்றியா?” ஒரு இடைவெளி விட்டு “நான் நேத்து நைட்ல இருந்து சாப்பிடவே இல்லை” என்றான்.

“ஏன்டா இப்படி கெடக்க? ஏதாவது சாப்பிட வேண்டியதானே? சரி இரு இன்னும் ஒரு அரைமணி நேரத்துல நான் வந்துருவேன்”

கதவை திறந்துவைத்துவிட்டு அவனுக்காக காத்திருந்தான்.

கையில் பொட்டலத்துடன் உள்ளே நுழைந்தான் ரகு. சோபாவில் அமர்ந்திருந்த அமுதன் முன் அதைப் பிரித்துவைத்து “முதல்ல சாப்பிடு” என்றான்.

உள்ளே இரண்டு தோசைகளும் ஒரு ஆம்லெட்டும் இருந்தன. பையிலிருந்த சாம்பாரை ரகுவே பிரித்து தோசைமீது ஊற்றினான்.

“சாப்புடுடா… ஏன் வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்க?”

“ம்ம்ம்….” என்று தலை அசைத்துவிட்டு. தோசையைப் பிட்டு சாம்பாரில் நனைத்து வாயில் போட்டான். அது தொண்டையைத் தாண்டி உள்ளே இறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டது. ரகு ஒரு போத்தலில் தண்ணீர் பிடித்து வந்து வைத்தான். அதை எடுத்துக்குடித்துத் தோசையை உள்ளே தள்ளினான் அமுதன். ஒரு தோசையை உண்டு முடிக்கும் போதே ஒரு பெரிய அயற்சி ஏற்பட்டு மீண்டும் சோபாவில் சாய்ந்துகொண்டான். ரகு எதுவும் பேசாமல் அவன் உண்டு முடிப்பதற்காகக் காத்திருந்தான்.

ஒரு தோசையும் ஆம்லேட்டையும் உண்டு முடித்து “போதும்” என்றான்.

அமுதன் கைகழுவி வரும்வரையில் அவன் என் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தான் ரகு. அமுதனை நன்கு புரிந்துகொண்ட நல்ல நண்பன் அவன். அவனை நம்பி எதுவும் சொல்லலாம். நடந்தவைகளை ஒவ்வொன்றாக அமுதன் கூறினான். ஒன்றுவிடாமல் முழுவதும் கூறினான். அதில் பாதிக்குமேல் ரகுவிற்கு ஏற்கனவே தெரிந்த செய்தி தான். இடையில் அவன் எதுவும் பேசவில்லை அமுதனின் கண்கள் அவனையறியாமல் கலங்கியபோது கூட ரகு அவனைத் தேற்றவில்லை. அமுதன் பேசுவதை மட்டும் கவனமாகக் கேட்டான். அப்படி ஒருவன் அமுதனுக்கு தேவையாகத்தான் இருந்தான் அவனிடம் தன் பாரத்தை இறக்கிவைக்க முடிந்தது. இவ்வளவு நேரம் சுமந்துகொண்டிருந்த பாரத்தின் எடை இப்போது குறைந்திருந்தது போல் உணர்ந்தான் அமுதன். அவன் பேசிமுடித்து ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்.

“சாரிடா….” என்று மன்னிப்புக்கோரினான் ரகு.

தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி அமுதன் அமைதியாகவே இருந்தான். சின்னமுள் ஏழிலும் பெரியமுள் பத்திலும் இருந்தது. நடுமுள் நிலையில்லாமல் சுத்திக்கொண்டிருந்தது.

“ஊருக்குப் போக டிக்கெட் போட்டுட்டியா?” ரகுவே தொடர்ந்தான். அமுதன் இல்லை என்று தலையை மட்டும் அசைத்தான்.

அலைபேசியை குனிந்து நோண்டிகொண்டிருந்த ரகு.

“சரி நாளைக்கு காலைல திருச்சிக்கு டைகர்ல டிக்கெட் இருக்கு 8.40 க்கு சிங்கப்பூர்ல எடுக்குறான் இந்தியா டைம் காலைல 10.10 க்கெல்லாம் திருச்சில போய் இறங்கிடுவ. டிக்கெட் போட்றவா?”

மேசை மீது கிடந்த கடனட்டையை எடுத்து அவனிடம் நீட்டினான் அமுதன்.

“பரவாயில்லடா நான் போட்டுக்கிறேன் அப்பறம் பார்த்துக்கலாம்” என்று வாங்க மறுத்த ரகுவுடன் “டேய் பிடிடா” என்று கையில் திணித்தான்.

அமுதனுடைய பாஸ்போர்ட்டையும் ரகுவின் கையில் கொடுத்தான். என்னதான் நம்மால் எளிதாக செய்யக்கூடிய காரியமானாலும் இப்படி ஒரு சூழலில் ஒரு நண்பன் உடனிருந்து அதைச் செய்வது நம் கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்வது போலத்தான்.

பாஸ்போர்ட்டையும் கடன் அட்டையையும் வைத்து நாளைய அமுதனின் பயணத்திற்கான விமான முன்பதிவைச் செய்து முடித்தான்.

“வீட்டுக்குள்ளயே ஏன் அடைஞ்சு கிடக்க வா வெளில கொஞ்சம் போயிட்டு வருவோம்” என்று ரகு அமுதனை இழுத்துச் சென்றான்.

அந்தப் பகுதியில் அவர்கள் நடந்து செல்லும் எல்லா இடத்திலும் மதுவே நின்றுகொண்டிருந்தாள். இந்தப் பகுதியில் அவர்கள் பாதங்கள் படாத இடமேயில்லை எனும் அளவிற்கு எல்லா இடங்களுக்கும் ஜோடியாக கைகோர்த்துக்கொண்டு சுற்றித் திரிந்திருக்கிறார்கள். அமுதனின் நினைவலைகள் அவனை மேலும் மேலும் துன்பத்திற்குள் தள்ளியது. ஒரு நாற்பது நிமிட நடைக்குப் பின் வீடு வந்து சேர்ந்தார்கள்.

பயணத்திற்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு. சீனு மாமாவை அழைத்து நாளை காலை இந்தியா செல்வதைப் பற்றிக் கூறினான்.

ஊழ் மொழி இனம் நாடு என்று எந்தப் பிரிவினையும் பார்ப்பதில்லை. அது எங்கு சென்றாலும் துரத்தி வந்துகொண்டே தானிருக்கும். அமுதனின் பயணத்திற்காக அது காத்துக்கொண்டிருந்தது.

************************************** 

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

************************************** 

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 12 (11/02/2021 அன்று பதிவேற்றப்படும்)

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -