ஊர்வலத்தின் முணுமுணுப்பு

கவிதை

- Advertisement -

சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
அவரவர் எண்ணங்களை புலம்பித் தீர்க்கின்றனர்.
என்னுடைய ஆசைப் பூனைக்குட்டி
எப்பொழுதும் போல் என் மேல் உரசி
என்னை உசுப்ப முயற்சிக்கிறது.
அக்கம் பக்கத்தினர் வருவதும் போவதுமாய்
சலசலப்பு மட்டும் குறையவேயில்லை.
கண்ணீர் மலரால் நெய்த உடையுடுத்தி
நான் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளிவருகிறேன்.
யாரென்றே அறியாத
நான்கு பேர் என்னைத் தோளில் சுமக்கின்றனர்.
வழியில் எனக்குப் பிடித்தமான பாடல் கேட்டும்
முணுமுணுக்கவேயில்லை என் உதடுகள்.
தெருவின் கடைசியில்
என்னைப் பார்த்தவுடன்
இன்றும் அழுதுகொண்டு தாவும்
அந்தக் குழந்தையை வாங்கத்
தயாராகவில்லை என் கைகள்.
இவ்வளவு பேரிரைச்சலெனும் சாலையிலிருந்து
சப்தமில்லாமல் நகர்ந்து செல்லும் நான்
மயானத்தின் நுழைவாயிலை அடைந்துவிட்டேன்.
இன்னும் சில நொடிகளில்
எந்த சப்தமுமில்லாமல்
நான் மட்டுமே இங்கு தனித்துக் கிடப்பேன்.
பாவம் அந்தப் பூனைக்குட்டிதான்
எதுவும் புரியாமல் என்னைத் தேடித்திரியும்!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -