உன்னதப் பாட்டு

மூன்று கவிதைகள்....

- Advertisement -

உன்னதப் பாட்டு

எந்தன் லீலி புஷ்பமே !
என் பரிமளத்தைலமே !
எந்தன் கந்தவர்க்கமே !
அந்திவானக் காட்டில் ஆடு மேய்கிறாள்
அவள் யாரென்று அடையாளம் தெரியவில்லை
ஆண்டாளாகவோ மீராவாகவோ இருக்கலாம்.
மலர்கண்காட்சியாய் கண்களில் காட்சிபடுகிறாள்
பழக்குவியலாய் கொட்டிக் கிடக்கிறாள்
பசியூற பார்வையால் புசித்துக் கொண்டிருக்கிறேன்
நெருங்கிப் போகிறேன் விலகிச் செல்கிறாள்
விலகிப் போகிறேன் நெருங்கி வருகிறாள்
போதும் ஊடலின் இந்த விளையாட்டு
நோகடிக்க உன்னைக் கூப்பிடவில்லை
மனதைக் கிளறி என்னை விதைக்க விரும்பவில்லை
அன்பின் நிமித்தம் உனக்கு ஒரு புன்முறுவலை பரிசளிக்கப்போகிறேன்.

??????????????????????????

புத்தம் புது பயணம்

உழவுக் கரிசல் காடு

வெண் கொக்குகள்

கருங் கூந்தலில் மல்லிகை

நேசிக்கிறேன் என்கிறாய்

நெஞ்சில் குடிவர இடம் கேட்கிறாய்

யோசிக்கிறேன் என்று மட்டும் சொல்லமாட்டேன்

முகத்தில் பாற்கடலைப் பார்க்கிறேன்

முழுவடிவான உடலை அலைகளாக உருவகிக்கிறேன்

அகத்தில் நீந்தும் மீன்களைப் பிடிக்க முயல்கிறேன்

உன் புருவங்களுக்கிடையில் குடியேறுகிறேன்

இமைகளால் துரத்தி விடாதே

உன் அழகை ரசித்தபடி கண்காணிக்கிறேன்

ஒற்றை வரிகளில் பதிலளிக்கிறாய்

மற்றவைகளை நமட்டுச் சிரிப்பில் மறைக்கிறாய்

அற்றைத் திங்களாய் அனுதினமும் தேய்கிறேன்

பூத்த மலரின் வேதனை பீறிடுகிறது

வண்டு தெரிய விரும்பவில்லை

அறிவதல்ல நுகர்வதே வண்டின் குறி

என்னுடன் பிறந்தது அந்த மிருகம்

எப்போதும் என்னைத் தின்கிறது

அதற்கு என்னை தின்னக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன்

தனிமை புல்லாய் விளைந்திருக்கிறது

தனியாக மேய்ந்து கொண்டிருக்கிறேன்

தின்றிட தருணம் பார்க்கிறது காலம்

வருகின்றன

போகின்றன

கனவுகள் மட்டுமல்ல.

??????????????????????????

காய்ந்த பூவொன்றின் உசாவல்

அன்பு அற்புதமான வஸ்து

விற்கவோ வாங்கவோ முடியாது

அன்பை அன்பால் பகிர்ந்திடலாம்

நேற்று எதுவும் சொல்லவில்லை

இன்று அப்படியே போகணுமா?

நாளையாவது தெரிஞ்சுருவேனா?

உன் வார்த்தைகள் கவிதை

உன் மனசு அகராதி

உன் நினைவுகள் மொழி

நதிக்கரையில் ரோஜாச்செடி

காட்டுப் பூக்களைத் தேடுகிறேன்

காடுகளைக் காணவில்லை

புழுதி முகத்தில் அறைகிறது.

ஒன்று வெளியரங்கமானது

மற்றொன்று ரகசியமானது

நினைவுகளுக்கு இரண்டு வாசல்கள்

பனிக்குடம் வயிற்றில் சுமந்தாள்

தண்ணீர்க்குடம் இடுப்பில் சுமந்தாள்

குடும்பத்தை தினம்

நெஞ்சில் சுமக்கிறாள்

துளித்துளியாய் வடிந்து கொண்டிருக்கிறாள்

அகல்விளக்கு புயற்காற்றிலும்

எரிந்து கொண்டிருக்கிறது

ஒவ்வொரு பொழுதையும் அழகூட்டு

ஒவ்வொரு கனவிற்கும் வர்ணம் தீட்டு

உன் வாழ்நாளில் கூடும் மெருகு

காமத்தைத் தாண்டியே காதல் மலரும்

காதலின் கனவுகள் தீராத சுனை

நீண்ட துயரங்களை… கசப்புகளை…

நேசத்தின் ஆழ்ந்த தழுவலில்

நீர்த்துப் போக… கடந்து போக

நதியின் போக்கில்

உதிர்ந்த பூவும் இலையும் யாவும்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -