இறுதிச் சொற்பொழிவு

ஆசிரியர்: ரேன்டி பாஷ்

- Advertisement -

ஆசிரியர்: ரேன்டி பாஷ்
இணையாசிரியர்: ஜெஃப்ரி ஜாஸ்லோ
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை : ₹199

இன்றே நமது கடைசி நாள் எனும் போது இந்த உலகிற்கு நாம் எத்தகைய ஞானத்தை விட்டுச் செல்ல விரும்புகிறோம் என்பதைப் பல பேராசிரியர்கள், ‘ இறுதிச் சொற்பொழிவு ‘ என்ற தலைப்பில் பேசியுள்ளனர். கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் கணினிப் பேராசிரியர் ரேண்டி பாஷுக்கும் அத்தகைய ஒரு உரையை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டது. தனது கடைசி உரை எனக் கற்பனை செய்ய அவசியமில்லாமல் செய்துவிட்டது, அவரைத் தாக்கிய கணையப் புற்றுநோய். தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ரேன்டி, ” உங்களது குழந்தைப்பருவக் கனவுகளை உண்மையிலேயே சாதிப்பது” என்கிற தலைப்பில் தனது இறுதி சொற்பொழிவை ஆற்றினார். அந்த உரையை இணையதளத்தில் ஒரே மாதத்தில் பத்து லட்சம் பேர் பார்த்தனர். அதன் தொடர்ச்சியாக தனது குழந்தைகளுக்கு தன் வாழ்வின் மூலம் சொல்ல விரும்பியவற்றை ரேன்டி புத்தகமாக்கியுள்ளார் .

புத்தகத்தின் இணையாசிரியர் ஜெஃப்ரி ஜாஸ்லோ, ” வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ” பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர். ரேன்டியின் சொற்பொழிவைப் பற்றித் தனது பத்திரிக்கையில் எழுதினார். அது உலகளாவிய ஆர்வத்தைத் தோற்றுவித்தது. பின்னர் அவர் ரேன்டியுடன் இணைந்து எழுதிய இப்புத்தகம், 46 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 50 லட்சம் ( இப்போது இன்னும் அதிகரித்திருக்கலாம்) பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது.

நாற்பத்தி ஆறு வருட வாழ்கையில் தனது அனைத்துக் கனவுகளையும் வாழ்ந்து முடித்திருப்பதாகவே ரேன்டி கருதினார். எப்போதும் நேர்மறையான எண்ணப்போக்கு கொண்டவாரகவே இருந்துள்ளார். தான் விரைவில் இறக்கவிருக்கும் செய்தியைத் தெரிந்து கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் தன் மனைவி ஜேயிடம் ரேன்டி கூறிய வார்த்தைகள் இவை, ” ஸ்கேன் முடிவுகள் மோசமாக இருந்தாலும்கூட, உயிர்வாழ்வது அதிகக் குதூகலமளிக்கிறது என்பதையும், இன்று உன்னுடன் இருப்பது இன்னும் அதிக உற்சாகமாக இருக்கிறது என்பதையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஸ்கேன் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, அதைக் கேட்ட உடனேயே நான் இறந்து போகப் போவதில்லை. அடுத்த நாளோ, அதற்கு அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோகூட நான் இறக்கப் போவதில்லை. எனவே, இன்று இக்கணத்தில், இது ஓர் அற்புதமான நாள். நான் இதை எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் “.

எல்லாக் கனவுகளும் நனவாகி விட்டன என ரேன்டி கூறுவதால் அவை சாதாரணமானவை என்று நாம் எண்ண முடியாது. அவரது சிறுவயது கனவுகளை அவரே பட்டியலிடுகிறார்.

  1. புவியீர்ப்பு அற்ற நிலையில் இருப்பது
  2. தேசிய கால்பந்து போட்டியில் விளையாடுவது
  3. உலகப் புத்தகக் கலைக்களஞ்சியத்தில் எனது கட்டுரை ஒன்றை இடம்பெறச் செய்வது
  4. ‘ கேப்டன் கெர்க் ‘ என்ற கதாபாத்திரமாக இருப்பது
  5. பஞ்சடைக்கப்பட்ட விலங்கு பொம்மைகளைப் பரிசாகப் பெறுவது
  6. டிஸ்னி கற்பனையாளராக ஆவது

இவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து கனவுகளும் அவருக்கு சாத்தியமாகி உள்ளன. தனது விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் அதனைச் சாதித்துள்ளார் ரேன்டி. அதற்காக தான் கையாண்ட சிறு சிறு உபாயங்களையும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விர்ச்சுவல் ரியாலிட்டி துறையில் வல்லுனராக இருந்த அவர், தனது குழந்தைப் பருவ கனவுகளை நனவாக்கியதோடு, தனது மாணவர்கள் பலருக்கும் அதனைச் சாத்தியமாக்கினார்.

1983 ஆம் ஆண்டு வந்த ஸ்டார் வார்ஸ் படத்திற்குப் பிறகு அந்த வரிசையில் வேறொரு படத்தைத் தயாரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. அந்நிலையில், 1993 ஆம் ஆண்டு ரேன்டியிடம் டாமி என்கிற மாணவர் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் கண்டிப்பாக தான் பணியாற்ற வேண்டும் என்ற சிறுவயது கனவோடு வந்தார். அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது தெரிந்தாலும், தனது முன் அனுபவங்களை நினைத்துப் பார்த்த ரேன்டி அவரைச் சேர்த்துக் கொண்டார். பிறகு 1999, 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் மூன்று ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. டாமி அந்த மூன்று படங்களிலும் பணியாற்றினார்.

அவரின் நோய் பரவிவிட்ட விஷயத்தை டாக்டர் கூறும் முன்பே தெரிந்து வைத்திருந்தார் ரேன்டி. அவர் அந்தத் தகவலை அவரிடமும் அவர் மனைவியிடமும் பக்குவமாக எடுத்துக் கூறும்போது அவரது ஒவ்வொரு உடல் அசைவையும் கூர்ந்து கவனிக்கும் ரேன்டி, ” அவர் இதை எப்படிச் செய்கிறார் என்று பார். அவர் இதைப் பலமுறை செய்திருக்கிறார் என்பது உண்மைதான். இதில் அவர் கைதேர்ந்தவராக இருக்கிறார். அவர் தன் வசனங்களைக் கவனமாக ஒத்திகை செய்திருக்கிறார். ஆனாலும் அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்
இதயப்பூர்வமானவையாகவும் தங்குதடையின்றியும் வருகின்றன ” என்று தனக்குத் தானே வியந்து போகிறார். மேலும் புற்றுநோய் வல்லுனராக விரும்பும் எந்தவொரு மாணவரும் நான் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறார். ஒவ்வொரு நொடியையும் உற்சாகத்தோடு ஆக்கப் பூர்வமாக வாழ விரும்பினார் அவர். கற்பதை இறுதிவரை நிறுத்தவேயில்லை.

ரேன்டியின் மருத்துவர்களில் ஒருவர், ” நீங்கள் இன்னும் பல காலம் உயிரோடு இருக்கப் போவதைப் போல் நடந்து கொள்வது முக்கியம் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் கொடுத்த பதில், ” சமீபத்தில்தான் நான் ஒரு புதிய காரை வாங்கினேன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். இதற்கு மேல் நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ” என்பதுதான்.

// இறுதிக்கட்டப் புற்றுநோயிலிருந்து மீண்ட அதிசய நபர்களில் ஒருவனாக ஆவதற்கான ஒரு வழியை நான் கண்டுபிடிக்கக்கூடும் என்று நினைப்பதை நான் விரும்புகிறேன். அப்படி அந்த நோயை வெற்றி கொள்ளாவிட்டாலும்கூட, ஒவ்வொரு நாளையும் சமாளிப்பதற்கு அந்த மனப்போக்கு உதவும் // என்கிறார் ரேன்டி.

ரேன்டி அந்த நோயை வெற்றி கொள்ளாவிட்டாலும் இந்தப் புத்தகத்தின் மூலம் பல கோடி மக்களின் இதயத்தை வென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

நாகலட்சுமி சண்முகம் அவர்களின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல் சிலவற்றை ஆங்கிலத்திலேயே விட்டிருப்பது படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது.

தான் இல்லாத ஒரு எதிர்காலத்தைத் தன் குடும்பம் எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய இந்த நோய் தனக்கு வாய்ப்பளித்ததாக நன்றியோடு குறிப்பிடும் ரேன்டி, வாழ்க்கை குறித்த சில முக்கியமான பாடங்களை நமக்கு இந்தப் புத்தகத்தில் கற்றுத் தருகிறார். எந்தச் சூழலிலும் நன்னம்பிக்கையைக் கைவிடாமல் இருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக உரைக்கிறது இந்நூல். அவசியம் அனைவராலும் படிக்கப் பட வேண்டும்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -