இசையானவள்

சிறுகதை

- Advertisement -

கிளமண்டி வட்டார  நூலகத்தில்  அவளை மீண்டும்  சந்திப்பேன்  என்று  சற்றும் நினைக்கவில்லை. என்  நண்பனுக்காகக்  காத்துக்  கொண்டிருந்தபோதுதான் அவளைப்  பார்த்தேன். முகக்கவசம் அணிந்திருந்ததால் அவள்தானா என்ற சந்தேகம் எழும்ப உற்றுப் பார்த்தேன். அகன்ற விழியும், ஆலம் விழுதுபோல நீண்டு கிடந்த கரிய கூந்தலும், அளவான உயரமும்  அவளை எனக்கு அடையாளம் காட்டின. 

காலம்  அவளின்  தோற்றத்தில்  பெரிதான  மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை.  அவளைக்  கண்டதும்  எட்டு  ஆண்டுகளாகச் மனச்சிறைக்குள் அடைப்பட்டுக்  கிடந்த காதல் என்னும் பட்டாம்பூச்சி மெல்லத் தன் சிறகுகளை அசைக்க  அடக்கிக்கொண்டேன்.

அவளிடம்  சென்று  பேசுவதா? வேண்டாமா? என்று  மனம்  பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கப் பழக்க தோஷத்தில் கால்கள்  அன்னிச்சையாக  அவளை  நோக்கிச்  சென்றன. அதற்குள்  அவள்  புத்தகங்களை இரவல் பெற்றுக்கொண்டு நூலகத்தை  விட்டு  வெளியேறிக்கொண்டிருந்தாள்.

வேகமாக அவளருகில்  சென்று  ‘ஹாய் இசை’  என்றேன்.

சற்றே குழப்பத்தோடு புருவத்தைச்  சுருக்கி  என்னைப்  பார்த்தவள்  பிறகு  என்னை அடையாளம் கண்டுகொண்ட பின்பு அவள் கண்களில் தெரிந்த மலர்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது.

‘ஹாய் அசோக்’

‘பராவாயில்லையே இன்னும் என் பெயரை மறக்காம ஞாபகம் வெச்சிருக்க. எங்க என்னைப்  பார்த்ததும்  பேசாம போயிடுவியோன்னு  பயந்துட்டேன்’ என்றதும் அதுவரை அவள் கண்களில் தெரிந்த மலர்ச்சி மின்சாரம் இல்லா விளக்குபோலச் சட்டென்று மறைந்தது.

அவளின் முக மாற்றம் என்னைச் சற்றே இம்சிக்க நான் பேச்சை மாற்றினேன். 

‘எப்படியிருக்க இசை? இது  யாரு  உன்  பொண்ணா? பேரு  என்ன? என்ன  படிக்கிறாங்க?

“ம்ம்…. நான்  நல்லாயிருக்கேன்.  பொண்ணு  பேரு மதிவதனா. பாலர்  பள்ளியில படிக்கிறாங்க”

“அப்புறம் சொல்லு இசை. எங்கே இருக்கே? என்ன பண்ணுற?” 

“அசோக் இப்போ நான் அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். மதியோட அப்பா காத்திட்டு இருக்காரு. அடுத்த முறை சந்திச்சோம்ன்னா அப்போ பேசலாம். நான் வர்றேன்”  என்று  பட்டென்று  பதிலளித்துவிட்டு செல்பவளைப்  பார்த்துக்கொண்டே நின்றேன்.

காலம் அவளிடம் மாற்றத்தைக்கொண்டு வந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால்  என்னுடைய எண்ணத்தை அவளின் செயல் நிர்மூலமாக்கியது.

‘ஒரு காதல், முடிஞ்சா முடிஞ்சதா இருக்கணும். பல வருஷங்களுக்குப் பிறகு, எதிர்பாராத இடத்தில் தற்செயலா பார்த்து, அதிர்ந்துபோய் நிற்கிறதெல்லாம் பெரிய வலி’ என்று சொன்ன நண்பனின் வரிகள் ஏனோ அப்போது என் நினைவுக்கு வந்தன.  கனத்த மனத்துடன் மெல்ல நடந்து மீண்டும் நூலகத்தினுள் நுழைந்து வாகான ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டேன். நூலகத்தின் அமைதியும், குளிரூட்டப்பட்ட அறையின் குளிர்ச்சியும் என் மனத்தின் வெப்பத்தைச் சற்றுத் தணித்தது. இசை என் மனம் முழுவதும் இசைத்துக்கொண்டிருந்தாள். இசையின் நினைவுகளை இசைத்துப் பார்க்க மனம் விழைய நினைவிடுக்களில் படிந்து கிடந்த இசையுடனான காலங்களில் மூழ்கி போனேன்.

இசை பெயருக்கேற்றாப்போல் இனிமையானவள். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில்  இரண்டாம் ஆண்டுப் படித்துக்கொண்டிருந்தபோதுதான் இசையைச் சந்தித்தேன். இந்தியாவிலிருந்து  சிங்கப்பூருக்குப் படிக்க வந்திருந்தாள். அவளுடைய துறை தாவிரவியல். ஆனால், நாங்கள் இருவரும் ஒரே விடுதியில் தங்கியிருந்ததோம். அந்தச் சமயத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வயது முதிர்ந்த மூத்தோர்களைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்துடன் அந்தத் தொண்டு நிறுவனத்திற்குக் குழுவாக இணைந்து வார இறுதியில் சென்று அவர்களுக்கு உதவி செய்ய  வேண்டும். அந்த நிகழ்வில்தான் இசையை முதன் முதலாகச் சந்தித்தேன். வீட்டில் வயதான அப்பத்தாவுக்குத் தேவையான வேலைகளைச் செய்து பழகியிருந்தால் அங்கேயிருந்த மூத்தவர்களுக்கு உணவு ஊட்டி விடுவது, அவர்களைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது என்று அசூசையில்லாமல் என்னால் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முடிந்தது. இதைக் கவனித்த அவள் எப்படி அவனால் மூத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முடிகிறது என்பதை அவனிடம் கேட்டாள். சிறு வயது முதல் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதால் அப்பத்தாவிடம்தான் வளர்ந்தேன். அப்பத்தாவுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் நான்தான் பார்த்துக் கொள்வேன். ஆகையால் என்னால் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றேன். இப்படித்தான் எங்களுக்கிடையேயான நட்பு தொடங்கியது.  ஆரம்பத்தில் தற்செயலாகச் சந்தித்தபோது சிற்சில உரையாடல்களோடு ஆரம்பித்த பழக்கம் பின்னர் நெருங்கிய நட்பாக மலர்ந்து. அதன் பின்பு இணைந்து உணவருந்துவது, கடைக்குப் போவது  என்று எங்களின் நட்பு மெல்ல வளர்ந்தது. இசை என்பது அவள் பெயரில் மட்டுமல்ல அவளின் குரலிலும் கலந்திருந்தது. சின்னக் குயில் சித்ராவின் சாயல் அவளின் குரலில் இழையோடும். மனம் சோர்வாக உணரும் தருணத்தில் அவளை இரண்டு வரிகள் பாட கேட்பேன். அவளின் குரல் இனிமையில் சோக ராகம் பாடிக்கொண்டிருக்கும் என் மனம் ஆனந்த ராகத்தை இசைக்கத் தொடங்கும். உனக்கு இசைன்னு பேரு வச்சதால பாட ஆரம்பிச்சியா இல்ல நீ இனிமையா பாடுறதுனால உனக்கு இசைன்னு பேரு வச்சாங்களா என்று அப்பொழுதெல்லாம் கேட்பேன். அதற்கு அவள் சிறு புன்னகையை மட்டும் பதிலாக அளிப்பாள்.

அவள் படிக்கும் தாவிரவியல் துறை என்பது இயற்கையோடு கலந்த ஒரு கல்வி. எப்பொழும் மண், செடி, கொடி, மலர் என்று உயிர்ப்போடு இருப்பாள். ஆனால் நானோ எப்போழுதும் இயந்திரங்களைப்பற்றியும், தொழில்நுட்பத்தைப்பற்றியும் என்று அதற்கு எதிராகப் பயணிப்பவன். அத்துடன்  உணவு, உடை, பழக்கம் என்று பல விதங்களில் அவளுடைய  இரசனைக்கு எதிராக இருந்தது என்னுடையது. ஆனாலும், எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும், சண்டையும் வந்ததில்லை. அவரவர் கருத்துச் சுதந்திரத்திற்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து எங்களுக்கான பாதையில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

அதுமட்டுமல்ல நான் ஓர் இராக்கோழி. அதிகாலையில் விழிப்பது என்பது என்னால் இயலாத ஒன்று. ஆனால், அவளுடைய வேலையே அதிகாலையில்தான் தொடங்கும். அடர்ந்த மரங்கள், செடி கொடிகள் என்று கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்ற வகையில் இயற்கை அரண்களால் சூழப்பட்டது எங்களுடைய பல்கலைக்கழகம். ஏரி, பூங்கா என்று பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி  இயற்கை வளம் கொஞ்சும். ஒரு நாள் அதிகாலை வேளையில் என்னைக் கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றாள். சாலையில் மெல்லிய பனித்திரை படர்ந்திருக்கச் சில்லென்று வீசிய காற்று ஊசிபோல உடலைத் தைக்கச் சிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகள் பிறந்து வளர்ந்தாலும் அத்தகைய காட்சியை அப்பொழுதுதான் முதன் முதலில் நான் பார்க்கிறேன். சில்வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின்  கீச்சிடும் ஒலி, மண் வாசனை, மலர்ந்து மணம் வீசும் மலர்களின் மணம், இலைகளின்மேல் படர்ந்திருந்த பனித்துளிகள் என்று அற்புதமான இயற்கை உலகத்தை எனக்கு அடையாளம் காட்டினாள். அதிகாலையில் மெதுவோட்டம் ஓடிக்கொண்டே படர்ந்து கிடக்கும் செடிகளில் ஒவ்வொன்றாய் அடையாளம் காட்டுவாள்.

‘இதுதான்  கொடி வேலி. கால் ஆணி இருக்குறவங்க இதன் வேர்ப்பட்டையை அரைச்சுத் தூங்கப்போறதுக்கு முன்னாடி பூசி வந்தா கால் ஆணி குணமாயிடும். இது தூதுவளை. இதன் இலையைப் பறிச்சு நல்லா சுத்தம் செஞ்சு துவையல் செய்து சாப்பிட்டு வந்தா உடலுக்கு வலு கொடுப்பதோட இருமல், இரைப்பு, சளி எல்லாம் வராது’ என்று பார்க்கும் செடிகளுக்கு எல்லாம்  விளக்கம் கொடுப்பாள்.

‘எப்படி? உனக்குத் தாவரங்களின் மேல் இத்தனை ஆர்வம்’ என்று அவளிடம் கேட்டேன்

‘என்னுடைய தாத்தா ஒரு மூலிகை மருத்துவர். அவரு கோயம்புத்துர் பக்கத்துல ஒரு கிராமத்துல நாட்டு வைத்தியம் பார்த்துகிட்டு இருந்தாரு. தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர் என்னையும் மூலிகை பறிக்கக் கூடக் கூட்டிட்டுப் போவாரு. அப்போ அதைப்பத்தி சொல்லிக் கொடுப்பாரு. சின்ன வயசுல விளையாட்டா கத்துகிட்டேன். ஒருநாளு மலைக்குப் போனவரை பாம்பு கடிச்சதால இறந்துட்டாரு. அவரு இருந்திருந்தா இன்னும் நிறையக் கத்துக்கிட்டுயிருப்பேன். அதுலயிருந்து எனக்குத் தாவரங்கள் மேல ஒரு காதல். அம்மாவுக்கு நான் மருத்துவரா ஆகனும்னு ஆசை. ஆனா எனக்கு இயற்கை மேல ஆர்வம் அதிகமாயிருந்ததால தாவரவியில் ஆராய்ச்சில ஈடுபடனும்னு விருப்பம்’ என்று தாவரங்களின்மேல் அவளுக்கு உள்ள உறவினை விவரிக்கும்போது அகன்று விரிந்திருக்கும் அவள் கண்கள் மேலும் விரிந்து மலருவதை அவன் ரசிப்பான். அவளின் அருகாமை அந்தத் தாவரங்களைப் போலவே அவனுக்குள் குளிர்ச்சியைத் தந்தது.

சில நேரங்களில் படிப்புச் சுமை அவர்களைச் சந்திக்க இயலாத அளவு செய்யும். அப்போது வாழ்க்கை இயந்திரத்தனமாக இயங்குவதாகத் தோன்றும். இப்படி அவளுடனான நட்பு காதலாக மலர்வதை அவனால் உணர முடிந்தது.

இத்தகைய சூழலில் ஒரு சமயம் அவனுடைய பெற்றோர் இந்தியாவிற்குச் சென்றிருந்தனர். நன்றாக இருந்த அப்பத்தா குளியலறையில் வழுக்கி விழுந்ததால் கால் எழும்பு முறிந்துவிட்டது.  ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது மருத்துவமனையில் இருக்கும் அப்பத்தாவைச் சென்று பார்த்து அவருக்குத் தேவையானதைச் செய்வது என்று அவனுக்குத் துணையாக நின்று அந்தச் சூழலை அவள்  சமாளித்தாள். மூலிகை இலைகளின் சாறுகளைக்கொண்டு அவள் செய்த கை வைத்தியத்தால் பாட்டியின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டது. வீட்டிலிருப்பவர்களுக்கும் இசையைப் பிடித்துப்போனது. அதன் பிறகுதான் அவன் தன் விருப்பத்தை அவளிடம் சொன்னான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,

‘அசோக் உங்க அப்பத்தா உங்களை எப்படி வளர்த்தாங்களோ அப்படித்தான் என்னையும் என் அத்தைதான் வளர்த்தாங்க. என் பெற்றோர்கிட்ட அவ்வளவு வசதியில்லை. அதனால என் அத்தைதான் என்னைப் படிக்க வெச்சாங்க. இப்பவும் சிங்கப்பூருக்கு அனுப்பி அவங்கதான் என்னைப் படிக்க வெச்சுகிட்டு இருக்காங்க. எனக்கு என்ன தேவையோ அத நான் கேக்காமயே அவங்க செய்வாங்க. அவங்களோட ஒரே ஆசை நான் அவங்களுக்கு மருமகளா வர்றதுதான். என் பெற்றோருக்கும் அதுதான் விருப்பம். எனக்கும் என்னோட அத்தை மகன்கிட்ட குறை சொல்ற மாதிரி எதுவும் இல்ல. சின்ன வயசுலேயே இந்த முடிவு  எடுத்தால எனக்கும் படிப்பைத் தவிர எதிலையும் சிந்தனை வந்தது இல்ல. எப்போ நட்பாயிருந்த நம்ம உறவு காதலா மாறிச்சோ அதன் பிறகு இந்த நட்பைத் தொடர்றதுல எனக்கு விருப்பமில்ல. இதன் பிறகு நீங்க சாதாரணமா செய்யுற சின்ன விஷயங்களைக் கூட எனக்குத் தப்பா தோணும். அதுக்கு ஒரே வழி நாம இனிமே சந்திக்காம இருக்குறதுதான். படிப்பு முடிய இன்னும் ஆறுமாசம்தான் இருக்கு. என் மேலே நீங்க மதிப்பு வெச்சிருந்தீங்கன்னா இனிமேல் வாழ்க்கையில எப்பவும் என்னைப் பார்க்கவோ, சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ முயற்சிக்காதீங்க. இது உங்களுக்கு நான் கொடுக்குற தண்டனையில்ல. எனக்கு நான் கொடுத்துகிற தண்டனை.  காரணம் எனக்கும் உங்க மேல ஈர்ப்பு வர ஆரம்பிச்சிருச்சு. அதுமட்டுமில்லாம உங்களோட பண்பும், அன்பும் என்னைக் கோழையாக்கி நானும் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சுடுவேனோன்னு பயமாயிருக்கு.  என்ன நம்பி இருக்குறவங்களுக்கு நான் துரோகம் செய்ய விரும்பல. அதே சமயம் உங்களையும் என்னால ஏமாத்த முடியாது. ஆகையால, நாம இதோட நிறுத்திக்கிறதுதான் நமக்கு நல்லது என்று கண்ணீருடன்  விடைபெற்று சென்றவளின் முகம் இன்றும் அவன் மனத்திரையில் நிழலாடிக்கொண்டிருந்தது.

அதன் பின் சிறகுகள் பிய்த்து எறியப்பட்ட பட்டாம்பூச்சியாய் அவன் துடித்துப்  போனான். அவளின் நினைவுகளிலிருந்து விடுபட அவனுக்கு வெகு காலம் ஆனது. அதன் பின் அவனும் அவளைச் சந்திக்க முயற்சி செய்யவில்லை. படிப்பு முடிந்ததும் அவனும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டான். அவளை அவன் மறக்கவும் இல்லை. அதே சமயத்தில் அவளைப்பற்றி நண்பர்களிடம் விசாரிக்கவும் விரும்பவில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் வருடங்கள் உருண்டோடின. வருடத்திற்கு ஒரு முறை சிங்கப்பூருக்கு வருவான். அப்பத்தாதான் ‘ஐயா! நான் கண்ணை மூடுறதுக்கு முன்னாடி உன்னைக் கல்யாணகோலத்துல பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு’ என்று நச்சரிப்பார். இவனும் பிடிகொடுக்காமல் நழுவி வந்தான். ஆனால், இந்த முறை அவர்களின் விருப்பத்தை அவனால் மறுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவன் இசையைச் சந்தித்தான். நினைவுலகில் மூழ்கி கிடந்தவனின் தோளைத் தொட்டு யாரோ உலுக்குவதை உணர்ந்த பிறகே அவன் நனவுலகிற்குத் திரும்பினான்.

அவன் நண்பன் கவின் நின்று கொண்டிருந்தான்.

என்னாச்சு? என்று சைகையில் கேட்டவன் அவனைக் கூட்டிக்கொண்டு நூலகத்தைவிட்டு வெளியே வந்தான்.

‘என்னாச்சு அசோக்? இரண்டு தடவை கால் பண்ணினேன். எடுக்கல. உள்ள வந்து பார்த்தா ஏதோ நினைவுல உன்னை மறந்து இருக்க”

“ஒன்னுமில்ல கவின். ஏதோ யோசனையில அப்படியே உட்கார்ந்துட்டேன்”

“சரி. புத்தகம் எடுக்கனும்னு வந்தியே. புத்தகம் எடுத்துட்டியா?”

“எடுத்துட்டேன்”

“அப்புறம் உடம்பு சரியில்லையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“ஒன்னுமில்லை. லேசா தலைவலி அதான்?”

“உனக்குத் தலைவலின்னா நீ வீட்டுக்குப்போயி ஓய்வு எடு. நான் உன்னை வீட்டுல டிராப் பண்ணுறேன். வேணும்னா நாம இன்னொரு நாள் வெளியே போய்ச் சாப்பிட போகலாம்”

‘பரவாயில்ல கவின் என்னால சமாளிக்க முடியும். நாம இப்போ சாப்பிட போகலாம்’

அதன்பிறகு வண்டியில் ஏறும்வரை கவினும் அசோக்கிடம் ஏதுவும் கேட்கவில்லை.

வண்டியை இயக்கியதும் வானொலியில் ஒலி96.8ல், ‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை’ என்று சித்ரா காதலை இழைத்துப் பாடிக்கொண்டிருந்தார். உடனே, இசையின் குரலும் அவன் மனத்தில் ஒலிக்கத் தொடங்கியது.

‘சரி அசோக். தேக்காவுல எந்தக் கடையில் போயி சாப்பிடலாம்ன்னு சொல்லு’ என்று வண்டியை ஓட்டிக்கொண்டே கவின் கேட்டபோது அசோக் அமைதியாக இருந்தான். உடனே கவின் அவனின் தோளைத்தொட்டு

‘’அசோக் என்னாச்சு. தலைவலி அதிகமாயிருக்கா?” என்று கேட்ட பிறகே சுயவுணர்வுக்கு வந்தான்

‘ஓ! சாரி. அதெல்லாம் ஒன்னுமில்லை. பாட்டுல லயிச்சுட்டேன்’

‘இதுக்குதான் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு சொல்றது. அப்புறம் உன் கல்யாணம் விஷயம் என்னாச்சு?’

‘பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. இந்தத் தடவை ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நிச்சயம் பண்ணிடனும்னு வீட்டுல முடிவா இருக்காங்க’

‘இப்பெல்லாம் பள்ளில படிக்கிற பசங்களே லவ் பண்ணிட்டு திரியுறாங்க. நீ என்னடான்னா லவ்வும் பண்ணாம கல்யாணமும் பண்ணாம இன்னும் சுத்திகிட்டு இருக்க. சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடுற வழியப்பாரு. இப்போ தேக்கால எந்தக் கடைக்குச் சாப்பிட போகலாம்ன்னு சொல்லு’   

‘ஏன்? இங்கே எங்கயாவது பக்கத்துல சாப்பிடலாமே? இதுக்காக எதுக்குத் தேக்கா போகனும்?’

‘இல்ல தேக்காவுக்குப் போனா வீட்டுக்குத் தேவையான காய்கறி வாங்கிட்டு அப்படியே நாட்டு மருந்து கொஞ்சம் வாங்கனும் அதான்’

‘என்ன மருந்து? யாருக்கு என்னாச்சு?’

‘நீ பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல அசோக். ஆவாரம்பூவைத் தினமும் கொஞ்சமா சுடுதண்ணில குடிச்சிட்டு வந்தா சளி, இருமல் அண்டவே அண்டாதாம். இப்போ கொரோனா காலகட்டத்துல நம்மள ஆரோக்கியமா வச்சிக்கனும். அதே சமயத்துல  நாட்டு மருந்தா இருந்தா பக்க விளைவும் இருக்காது இல்லையா அதான்’

‘பரவாயில்லையே! உனக்கு நாட்டு மருத்துவத்துல இவ்வளவு நம்பிக்கை இருக்கா?’

‘ஆரம்பத்துல இத பத்தி பெரிய ஈடுபாடு இல்ல. ஆனா, என் மனைவியோட தோழி இசைன்னு ஒருத்தவங்க இருக்காங்க அவங்க இந்த மூலிகை மருத்துவத்தைப் பத்தி நிறையா படிச்சிருக்காங்க. நடைமுறை வாழ்க்கையில நம்மைச் சுத்தி இயற்கையில கிடைக்கிற  மூலிகைகளை வைத்து எப்படி ஆரோக்கியமா வாழ்றது அப்படிங்கிறத பத்தி நிறையச் சொல்லுவாங்க.  அவங்க சொன்னதைக் கடைபிடிச்சுகிட்டு வர்றோம். இந்த இரண்டு வருஷமா நாங்க யாரும் மருத்துவர்கிட்டயே போகலையே’

இசையின் பெயரைக் கேட்டதும் அவனுக்குள் இசைவெள்ளம் பரவத் தொடங்கியது. அவளைப்பற்றி  அறியும் ஆவலில் படபடப்பை முகத்தில் காட்டாது மறைத்துக்கொண்டு

‘இசையா? பேரே நல்லா இருக்கே?’

‘பெயர் மட்டுமல்ல அவங்களும் அழகா இருப்பாங்க. நல்ல பொண்ணு. தாவரங்கள் மேலே ஆர்வம் அதிகம். இயற்கையை அதிகமா நேசிக்கிறதால என்னவோ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க’

‘இதைக் கேட்டதும் அசோக்கிற்கு ஆச்சரியமும் படபடப்பும் ஒரு சேர என்னாச்சு? ஏன் கல்யாணம் பண்ணிக்கல? என்று கேட்கும்போதே அவன் குரலே அவனுக்குக் கேட்கவில்லை’

‘அதுவா? அத்தை பையனைக் கல்யாணம் செய்யுறதுக்குப் பேசி  வச்சியிருக்காங்க. ஆனா அவன் என்னடான்னா படிக்கிறப்போ பணக்கார பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான். அதுக்குப் பொறவு இவங்களும் கல்யாணமே வேணாம்னுட்டு மேற்படிப்புக்கு வந்தவங்க இங்கயே வேலையில சேர்ந்துட்டாங்க. இப்போ அவங்க அண்ணன் வீட்டுலதான் தங்கி இருக்காங்க. நீயும் பொண்ணு தேடிகிட்டு இருக்கே. நான் வேணா இசைகிட்ட பேசி பார்க்கவா?’

‘பார்க்கலாமே’ என்னும்போதே அவன் மனத்தில் பட்டாம்பூச்சி தன் சிறகினை விரித்துப் பறக்கத் தொடங்கியது. அப்போது ஒலி96.8ல்

‘வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்

தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்’ என்று  சித்ராவின் தேன் குரல் ஒலிக்க அவன் மனத்திலும் இசை மழை பொழியத் தொடங்கியது.

பிரதீபா
பிரதீபாhttps://minkirukkal.com/author/pradeebhav/
நான் தற்பொழுது தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். கதை, கட்டுரை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -