ஆவச்சி – சிறுகதை

- Advertisement -

ஆவச்சி நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளர் மகனின் செல்லப் பெயர். அவர்கள் மலையாளிகள் ஆனாலும் தமிழ் சரளமாக பேசத் தெரிந்தவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆவச்சி எனக்குத் மலையாளமும் நான் அவனுக்கு தமிழும் கற்றுக்கொடுத்துக் கொள்வோம். நான்கு வயதான ஆவச்சியின் மலையாளம் கலந்த தமிழில் அவன் கிளி மொழியைக் கேட்பதற்காகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன்.

சுருள் முடியும் குண்டு கன்னமும் மலையாளிகளுக்கே உரிய சிவந்த நிறத்துடன் சிறுவயது சச்சின் போலவே இருப்பான். என் அறையை விட்டு வெளியே போன அடுத்த நிமிடம் “அங்கிள் … அங்கிள்…” என்று என் கால்களைச் சுற்றிக்கொண்டே இருப்பான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு முடிந்த அளவு பதிலளிப்பேன் முடியாதபோது தப்பித்து என் அறைக்குள் ஓடிவிடுவேன்.

கொரோனா நோய் தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நேரம் ஆதலால் எங்கும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே தனியாக விளையாடிக் கொண்டிருப்பவனுக்கு அவ்வப்போது கிடைக்கும் மாற்று விளையாட்டுப் பொருள் தான் நான். அவன் நிரந்தர விளையாட்டுப் பொருளான அவன் அம்மாவிற்கு நான் சமைக்கச் செல்லும் நேரம் தான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.

நான் சமைக்க அடுப்படிக்குள் நுழைந்தவுடன் “அங்கிள்… எங்கூட சம்சாரிக்கிரியா…” என அவர் குரலும் என் காதுக்குள் நுழையும். அவன் அறைக்குள் இருந்தாலும் நான் வெளியே வரும் நேரத்தை எப்படித்தான் மோப்பம் பிடிக்கிறான் என்பது இப்போதும் ஒரு புதிர் தான்.

“அங்கிள்… என்னை நோக்கு…” “அங்கிள்…. இவட நோக்கு…” என்று அவன் சாகசங்களை என்னை நோக்கச் சொல்லிக்கொண்டே இருப்பான். நானும் முடிந்தவரை நோக்கிவிட்டு “அப்பா சாமி ஆளை விடுடா” வென என் வேலையைத் தொடர்வேன். அன்று ஒரு நாள் அப்படித் தான் “நோக்கு அங்கிள்… நோக்கு அங்கிள்…” என என்னை நைத்துக்கொண்டிருந்தான்.

“டாய் உன்னை நான் நோக்கனும்ன்னா உங்க அப்பாட்ட போய் காசு வாங்கிட்டு வா. ஒரு தடவை நோக்குரதுக்கு ஒரு டாலர் போ” என்றேன்.

அவன் அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் “அங்கிள் என் கிட்ட பைசா இல்லா… நீ நோக்கு அங்கிள்…” என்று மறுபடியும் அவன் நோக்கு வர்மத்தை தொடங்கினான். நான் அவசர அவசரமாக சமைத்து முடித்து என் அறைக்குள் ஓட எத்தனித்தேன். கதவருகில் வந்து நின்றுகொண்டு “அங்கிள்… வா வந்து என்னோட சம்சாரிச்சுட்டு போ…” என்றான்.

“அங்க்ளுக்கு ஆபீஸ் வேலை இருக்கு அப்பறம் வர்றேன்” என்று கதவை அடைக்கப் போனேன். “அங்கிள் இவட நோக்கு… இவட நோக்கு…” என்று ஒரு கிழிந்து போன காகிதத்தைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

“ஏன்டா எப்பா பார்த்தாலும் உன்னைவே நோக்கிட்டு இருந்தா யாரு சம்பளம் தருவா? நீ தர்ரியா?” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்தேன். அவன் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு அவன் அறைக்குள் சென்று விட்டான்.

இது எப்போதும் நடப்பது தான். ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வேன். ஆனாலும் அவன் என் பாதம் என் அறையை விட்டு வெளியே எட்டிப் பார்க்கும்போது சரியாக எட்டிப் பார்ப்பான்.

ஆனால் இப்போது இரண்டு மூன்று முறை தண்ணீர் பிடிக்க வெளியே சென்று வந்துவிட்டேன் அவன் வரவில்லை. அவன் அம்மா அவன் தூங்குவதாகக் கூறினார். “ரொம்ப நாளா வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறோம் வெளில ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா” என அவன் அப்பா என்னிடம் கேட்டார்.

“சரிப் போகலாம் ஆனால் எல்லா இடமும் பூட்டி இருக்கும். எங்க போனாலும் போலீஸ் கெடுபிடி வேற இருக்குமே” என்றேன்.

“நாம எங்கயும் இறங்க வேண்டாம். அப்படியே மெரீனா பே சான்ட்ஸ் பக்கம் வண்டிய விட்டு ரவுண்டு அடிச்சுட்டு வந்துருவோம்” என்றார்.

பலநாள்கள் கழித்து கொஞ்சம் வெளி உலகம் பார்க்கலாம் என்பதால் எனக்கும் அதில் உடன்பாடு தான். ஆவச்சி எழுந்தவுடன் கிளம்பினோம் எப்போதும் போல உள்ளே ஒரு பனியன் அதற்கு மேலே ஒரு சட்டை அப்பறம் புல் பேன்ட்டுடன் வந்தான் ஆவச்சி. உடை எப்போதும் போல இருந்தாலும் முகத்தில் எப்போதுமிருக்கும் புன்னகை காணாமல் போயிருந்தது. நான் பேச முற்பட்ட போதும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

ஆவச்சியின் அப்பா மகிழுந்தை ஓட்ட அவர் அருகில் நானும் பின் இருக்கையில் ஆவச்சியும் அவன் அம்மாவும் அமர்ந்துகொண்டார்கள். வெளியில் வேடிக்கை பார்த்து துள்ளிக்குதித்த அவன் வெளியே செல்ல வேண்டும் என அடம்பிடித்தான் அவன் அம்மா ஒரு வழியாக சமாளித்தார். நான் பல முறை திரும்பிப்பார்த்ததும் அவன் என்னை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை.

நானும் பேசிப் பார்த்தேன் அவனை அழைத்துப் பார்த்தேன். ம்ம்ஹீம்… என்னை மாட்டும் வம்படியாக தவிர்த்தான். “இவனுக்கு என்ன ஆச்சு..?” என்று அவன் அம்மாவிடம் கேட்டேன். “தெரியல… திடீர்ன்னு உங்கள பார்க்க மாற்றான்” என்றார்கள்.

எங்கள் சுற்றுப்பயணம் முடிந்து வீடு வந்து சேர்ந்தோம். காதுகளுக்குள் ஓயாமல் அடிக்கும் அலைபோல அங்கிள்… அங்கிள்… என கத்திக்கொண்டிருப்பவன் திடீரென ஏன் இப்படி ஆகிவிட்டான். அவனைப் பிடித்து உட்கார வைத்து “டாய்… என்ன டா” என்றேன். அவன் என்னைப் பார்ப்பதை தவிர்த்து திரும்பிகொண்டான்.

“இவனை விடக் கூடாது” என நினைத்துக்கொண்டு அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென “அங்கிள்… என்னை நோக்காத… அங்கிள்… என்னை நோக்காத…” என அழத் தொடங்கினான்.

எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. “ஏண்டா ஏன் நான் உன்னை நோக்க கூடாது?” என்று கேட்டேன்.

“உனக்கு நான் சம்பளம் குடுத்தில்லா… என் கிட்ட பைசா இல்லா… உனக்கு நான் சம்பளம் குடுத்தில்லா” என அழுதுகொண்டே இருந்தான்.

இப்போது நான் சிரிப்பதா? அவனோடு சேர்ந்து அழுவதா? இல்லை அவனை சமாதனப் படுத்துவதா?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -