அழுக்குக்கண்ணாடி – 7

- Advertisement -

நீங்கள் செய்ய ஆசைப்பட்டு ஆனால் முடியாமல் போன விஷயங்களின் பட்டியல் தயாராக இருக்கிறதா? அதில் எவையெல்லாம் பணத்தாலோ, அல்லது வேறு ஒருவர் உதவியுடனோ அடைய முடியுமோ, அவற்றையெல்லாம் நீக்கி விடுங்கள். எவற்றை செய்துமுடிக்க நீங்கள் மட்டுமே போதுமோ அவைதான் உங்கள் சந்தோஷத்தை நிர்ணயிக்கவல்லது. நீங்கள் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பதை தடுப்பதற்கு உங்களைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. நீங்கள் அதிகம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதும் நிறுத்தாததும் உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் ஆசையாக வாங்கிவைத்த புத்தகம் படிக்க முடியாமல் போனது யாரால்? இப்படி நீங்களே ஆசைப்பட்டாலும் உங்களால் செய்ய முடியாமல் போகும் விஷயங்கள் ஏராளமாக இருக்கும். அவற்றில்தான் உங்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒளிந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அந்த விஷயங்கள் அனைத்தும் உள்ளார்ந்த விருப்பத்தை பிரதிபலிப்பவை. அவை “நாம்” யார் என்பதை கண்டுபிடிக்க உதவும் வரைபடம்.

“நான்” என்று சொல்லும்போது நாம் அனைவரும் நம்முடைய மனதையே அடையாளப்படுத்தி பொதுவாக பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் “நான்” என்ற போர்வையில் அமர்ந்துகொண்டு நம்மை ஆட்டிப்படைப்பது மனதுதான். மனம் எப்போதும் எண்ணங்களையும், உணர்வுகளையும் உருவாக்குவதால் அதுதான் நாம் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அது நாம் பயன்படுத்தும் கருவியே தவிர வேறல்ல. கை, கால்களை உறுப்புகளாக உணரும் நாம் மனதை கண்ணுக்குத் தெரியாத உறுப்பாக நினைப்பதில்லை. ஒரு உடல் உறுப்பு உங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தால் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாய் இருக்கும். கை, கால்கள் நீங்கள் நினைப்பதை செய்யாமல் அதன் இஷ்டத்திற்கு உங்களை நடக்கச் செய்வதுபோல் கற்பனை செய்து பாருங்கள். நாம் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது, கை திடீரென்று தனக்கு போதும் என்று முடிவெடுத்தால் நாம் என்னாவோம். அப்படிப்பட்ட ஆபத்தில்தான் நாம் தினம் தினம் இருக்கிறோம். ஆனால் அதன் விளைவுகள் உடனடியாக வெளியே தெரியாததால் அதனை உணராமல் இருக்கிறோம். 

மனம் எப்படியெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். ஐந்து நிமிடம் கிடைத்தால்கூட உடனே செல்போனை எடுத்துப் பார்க்கச் சொல்லி தூண்டிவிடுவது, வெளியே இருக்கும் யாரோ ஒருவர் அல்ல. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு சிகரெட்டை எடுத்துப பற்றவைக்கச் சொல்வது வெளியே இருக்கும் நண்பன் அல்ல. எதிரிகள் வெளியே இல்லை என்பது நிதர்சனமாக தெரிகிறதா. உள்ளே இருந்து கொண்டு நமக்கு நல்லது தரும் விஷயங்களை தடுத்தும், நம்மை திசைதிருப்பியும் அலைக்கழிக்கும் மனதைவிட மிகப்பெரிய எதிரி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. இவற்றிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது. உள்ளே இருந்துகொண்டு நல்ல விஷயங்களை விரும்புபவன் ஒருவன் இருக்கிறான். ஏதேனும் தவறாகச் சென்றால் வேண்டாமென்று எச்சரிக்கிறான். ஆனால் அவன் சொல்வதை மனம் கேட்க மறுக்கிறது. அவன் குரலை நாளடைவில் முற்றிலுமாக நசுக்குகிறது. அதனால்தான் ஆரம்பத்தில் ஒரு தவறை செய்யும்போது ஏற்படும் பதற்றம் நாளடைவில் இயல்பான ஒன்றாக மாறுகிறது. மீண்டும் மீண்டும் அதே விஷயத்தைச் செய்யச் செய்ய ஒரு வழித்தடம் உருவாகிறது. அதைத் தான் பழக்கம் என்கிறோம். அந்தப் பழக்கப்பட்ட பாதையில் பயணம் செய்து செய்து மீளவே முடியாமல் மனதிற்கு அடிமையாகிறோம். மனம் வேறு நாம் வேறு என்று பிரித்துப் பார்க்கும் தன்மைகூட பல காலங்களாய் மழுங்கடிக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்துவிட்டது.

மனம் வேறு நாம் வேறு என்பதை தூக்கம் என்ற நிலை அழகாகப் பிரித்துக்காட்டுகிறது. நல்ல ஆழ்ந்த கனவுகளற்ற உறக்கத்தில் நாம் இருக்கிறோம் ஆனால் மனது அங்கே சுத்தமாக இல்லை. மனம் இல்லாமல் மனிதன் நிம்மதியாக இருக்கிறான் என்பதற்கு அந்தத் தூக்கமே சாட்சி. அவன் தூங்குவது சிறைச்சாலையாக இருந்தாலும் மாளிகையானாலும் அந்தக் கணத்தில், அந்த ஏற்றத்தாழ்வை உணர்த்த அங்கே மனம் இல்லை என்பதே அவன் நிம்மதிக்குக் காரணம். தன்னை மறந்து இருப்பதால்தான் தூக்கம்கூட சுகமானதாய் இருக்கிறது. இங்கே தன்னை மறத்தல் என்பது மனம் இல்லாமல் இருக்கும் நிலையையே குறிக்கிறது. போதை வஸ்துக்கள் அனைத்துமே இந்த நிலையில் ஏற்படும் சுகத்திற்காகத்தான் உலகம் முழுவதும் அமோகமாக விற்பனையாகின்றன. அதனால்தான் உடலுக்கு ஆபத்து என்றாலும்கூட அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதுதான் காரணம் என்று தெரியாமல் அதைச் செய்கிறார்கள்.

மனதினால்தான் பிரச்சனை என்றால் அதை முற்றிலுமாக அழித்துவிட வேண்டுமா என்றால் அது தேவையில்லாதது மட்டுமல்ல சாத்தியமில்லாததும் கூட. மற்ற புலன்களைப் போல் மனமும் ஒரு அற்புதமான கருவி. ஆனால் மனம் என்ற இந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு உறுப்பு, சர்வாதிகாரியாக செயல்பட்டு அனைத்துப் புலன்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போதுதான் பிரச்சனைகளை உருவாக்குகிறது. மனம் ஆசைப்படும் அனைத்தையும், புலன்களைத் தூண்டி செய்ய வைக்கிறது. அவைகள் நம் உண்மையான விருப்பங்களாக இருக்காது. இன்னும் சொல்லப் போனால் நிறைய சமயங்களில் அவை நமக்குப் பிடிக்காததாய்க்கூட இருக்கும். ஆனாலும் வேறு வழியில்லாமல் மனதின் தூண்டுதலால் நாம் செய்ய உந்தப்படுவோம். பிறகு அதை எண்ணி குற்ற உணர்ச்சியடைவோம். மீண்டும் தூண்டுதல் ஆரம்பிக்கும்போது பழக்கப்பட்ட பாதையில் மனம் நம்மைத் தரதரவென்று இழுத்துச் செல்லும். இதற்கு விதிவிலக்கான மனிதர்களே கிடையாது. இந்த காட்டாற்று சுழற்சியில் இருந்து எவ்வாறு தப்பிப்பது….?

-தொடரும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -