அழுக்குக்கண்ணாடி – 2

- Advertisement -

ரம் சரியாகப் பூக்கவில்லையென்றால் வேர்களை கவனியுங்கள். வேர்களை எவ்வாறு கவனிப்பது? மனிதன் மரமென்றால் அவன் மனம்தான் வேர். வேர் எவ்வளவு ஆழமாகச் செல்கிறதோ, மரம் அவ்வளவு வலிமையானதாக இருக்கும் என்பது விதி. இது மனிதனுக்கும் பொருந்தும். மேலோட்டமாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட மனிதனுக்கு ஆழ்ந்து செல்வதென்றால் என்னவென்றே தெரியாது. ஒரு சில நொடிகள் கண்களை மூடிப் பாருங்கள், உள்ளே மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்ற உண்மை புரியும். தயாரா?

10 9 8 7 6 5 4 3 2 1 – கண்களைத் திறக்கலாம்.

நீங்கள் கண்களை மூடிய சில நொடிகளில் ஒன்றை கவனித்திருப்பீர்கள், உங்கள் மனத் திரையில் அடுத்தடுத்து என்னென்னவோ காட்சிகள் வந்து போயிருக்கும். ஒன்றோடு ஒன்று தொடர்பே இல்லாத எத்தனையோ விஷயங்கள் கிளம்புவதை கவனித்திருப்பீர்கள். இவை அனைத்தும் எங்கிருந்து தோன்றுகின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? நான் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இந்த முறை நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காதவரை மட்டும் நினைக்காமல் இருக்க முடிகிறதா பாருங்கள். நீங்கள் வெறுக்கும் நபரைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் நினைக்கலாம். அதிலும் குறிப்பாக, உங்களை சொற்களால் அவமானப்படுத்தியவரை மட்டுமாவது நினைக்காமல் இருக்க முடிகிறதா பாருங்கள்.

10 9 8 7 6 5 4 3 2 1 – கண்களைத் திறக்கலாம்.

என்ன முயன்று பார்த்தீர்களா..? நீங்கள் வெறுக்கும் நபரை நினைக்காமல் இருப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறதல்லவா..? அதிலும் நிச்சயமாக, சொற்களால் உங்களை அவமானப்படுத்தியவரின் முகம் உங்கள் மனதில் தோன்றுவதை தடுக்கமுடியாமல் போயிருக்கும். நீங்கள் சொல்வதை மனம் கேட்கவில்லை என்பது புரிகிறதா. எப்போதும் வாழ்க்கையில் நமக்குப் பிடித்ததையே செய்ய வேண்டும் என்று விரும்பும் நமக்கு, நம் மனமே எதிரியாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. எது நமக்குப் பிடிக்காதோ, எதைப் பற்றி நாம் யோசிக்கவே கூடாது என்று நினைக்கிறோமோ, மனம் அதையேதான் திரும்பத் திரும்ப தந்து, நம்மை நிம்மதியடையவிடாமல் செய்துகொண்டிருக்கும். 

நிம்மதி என்று அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டால் யாரும் சில நொடிகள் யோசித்து, நிறைய சொற்களைப் பயன்படுத்தி, விளக்கம் தர முயல்வார்களே தவிர சட்டென்று பதில் வராது. அப்படியே பதில் சொன்னாலும் பெரும்பாலானவை துல்லியமாக இருக்காது.

யாருமில்லாத ஒரு மலை உச்சியில் அமர்ந்து, இயற்கையின் அழகை ரசிக்கும் போது நாம் ஏன் நிம்மதியை உணர்கிறோம்..? ஆனால் அதுவே போக்குவரத்து நெரிசலில் நாம் சிக்கித் தவிக்கும்போது நாம் ஏன் நிம்மதியை இழக்கிறோம்..? இதில் வெளிப்புறக் காரணிகளால் நம் உணர்வு மாறுகிறது என்கிற பொதுவான பதிலைத் தாண்டி ஆழமாக பார்த்தால் ஒரு உண்மை புரியும். நிம்மதி என்றால் என்ன என்பதற்கான பதிலும் அங்கேதான் ஒளிந்திருக்கிறது.

மலையுச்சியில், தனிமையில் மிக மிகக் குறைவான எண்ணங்கள்தான் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதைவிடக் கூட்ட நெரிசலில் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தது பத்து மடங்காவது அதிகரிக்கிறது. மனம் பரபரக்கிறது. இன்னும் எரிச்சலும், கோபமும், அவசரமும், சேர்ந்தால் போதும் நூறு மடங்கு எண்ணங்களைக் கூட மனம் தோற்றுவிக்கும். நிம்மதியாக வாழ்வதென்றால் மிகக்குறைந்த எண்ணங்களோடு வாழ்வது என்பதுதான் தர்க்க ரீதியான அர்த்தம்.

நீங்கள் நன்றாக ஆழ்ந்து யோசித்தால் நிஜ பிரச்சனையை விட, அதைப் பற்றிய கற்பனைகளும், பயங்களும், யூகங்களுமே நம் நிம்மதியைக் கெடுக்கும். ஏனெனில் இயல்பாகவே பிரச்சனைகள் மிக அதிக எண்ணிக்கையிலான எண்ணங்களைத் தோன்றுவிக்கும் சக்தி படைத்தது. அதனால் தான் நாம் அளவுக்கதிகமாகத் துன்பப்படுகிறோம். அதே போல் இன்பமாக ஆரம்பத்தில் தோன்றும் விஷயங்கள்கூட சிறிது நாட்கள் கழித்து பிரச்சனையாகத் தோன்றுவதன் காரணம் அதைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிப்பதால்தான். மிகப் பெரிய செல்வந்தர்களும், புகழடைந்தவர்களும்கூட நிம்மதி இல்லாமல் தவிப்பதற்கான காரணம் இதுதான். எண்ணங்களின் ரகசியம் புரியாவிட்டால், வாழ்வில் எதை ஜெயித்தாலும் உள்ளுக்குள் சோகமாகவும், வெறுமையாகவுமே தோன்றும். இதனால் தான் மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வாழ்வைப் பெற்றவர்கள்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உண்மையில் ஆயிரம் கோட்டைகளை வென்றவன், ஆயிரம் எதிரிகளை வீழ்த்தியவனைவிட மிகப் பெரிய வீரன் யார் தெரியுமா…? தன் மனதில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தெரிந்தவன் தான்….

-தொடரும்.

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -