அழுக்குக்கண்ணாடி – 11

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

தியானம் மிகக் கடினமான முறை என்பதால் வெகு சிலரே பயணிக்கும் பாதையானது. அப்போது பெரும்பாலான மக்கள், தங்களுடைய மனதை வசப்படுத்த ஏதாவது எளிமையான வழிகள் இருக்கிறதா என்று பார்த்தால், அவரவர் பிறந்த மதத்தில் உள்ள வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலே போதும் என்பதுதான் எதார்த்தமான பதில். மத வழிபாடுகளை மூட நம்பிக்கைகளாக ஒதுக்கித் தள்ளுபவர்கள்கூட, மதம் ஏன் உருவாக்கப்பட்டது என்ற அடிப்படை உண்மையை பொறுமையாக ஆராய்ந்தால், அதை ஆரம்பித்தவர்களின் உயர்ந்த நோக்கம் புரியும். மனதை அறுவை சிகிச்சை செய்வதற்காக உண்டான ஒரு கத்திதான் மதம். ஆனால் அதை ஒருவர் மீது ஒருவர் பாய்ச்சிக்கொள்ளும் செயல் தனி மனிதனுடைய பிரச்சனையே அன்றி மதத்துடையது அல்ல. கத்தியை பிடித்திருப்பவரின் நோக்கம்தான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டுமே தவிர, கத்தியை அல்ல. மருத்துவரின் கையில் இருக்கும் கத்திக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவரின் கையில் இருக்கும் கத்திக்கும், பொருள் அளவில் ஒன்றாகத் தோன்றினாலும் வித்யாசம் மலைக்கும் மடுவுக்குமானது. அகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக உருவாக்கப்பட்ட அழகான மரபுதான் மதமே தவிர புறத்தோடு அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. எந்தவொரு விஷயமும் நோக்கத்தைப் பொருத்தே விளைவுகளைத் தருகின்றன. மதம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன..?

செயல்கள் எத்தகையதாக இருந்தாலும் சரி, நோக்கம் சரியான புரிதலோடு இருந்தால்தான், அதற்கான பலன்களும் மிகத் துல்லியமாக இருக்கும். இங்கே பிரச்சனை மதங்களால் அல்ல, மதத்தைப் பற்றிய சரியான புரிதலின்மையால். மனதை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு மதத்தை அணுகுவதே விஞ்ஞானப்பூர்வமான வழிமுறை. அவ்வாறு மிகச் சரியான முறையில் புரிந்துகொண்டு பின்பற்றும்போது வீணான சச்சரவுகளும் எழாது, அதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கித்தள்ள வேண்டிய அவசியமும் ஏற்படாது. சரி மனதை ஏன் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்?

மனிதனாகப் பிறந்த யாரானாலும் தன் மனதை வெல்லாமல் எதையும் வெல்ல முடியாது. மகிழ்ச்சி என்பதை பணத்தாலும், புகழாலும், மற்ற புறச் சின்னங்களாலும் மதிப்பீடு செய்யும்வரை, மனம் எதன் பின்னாலோ அலைந்து அல்லல் பட்டுக்கொண்டேதான் இருக்கும். உண்மையில் பணம் புகழால் மனம் நிறைவடைய வாய்ப்பிருந்தால், மைக்கேல் ஜாக்ஸன் போன்ற ஆட்கள் மிக ஆனந்தமாக அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும்? ஆனால் மிகப் பெரும் செல்வந்தர்களும், புகழ் அடைந்தவர்களும்கூட அதற்கு நேர்மாறாகவே வாழ்ந்து சாகிறார்கள் என்றுதான் வரலாறு சொல்கிறது. சொல்லப்போனால் சாமானியர்களைவிட விரக்தியாக வாழ்கிறார்கள். மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வாழ்வைப் பெற்றவர்கள்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது ஏன்?

99 சதவீத (சாமானிய) மக்கள், 1 சதவீத பெரும் பணக்காரர்கள், புகழடைந்தவர்களைவிட நிம்மதியாக இருப்பதுபோல் தோன்றுவதன் காரணம் மிக எளிமையானது. சாமானியர்கள் ஒருவித நம்பிக்கையில் வாழ்நாளை கழிக்கிறார்கள். எதிர்காலம் என்று எங்கோ ஒன்று ஒளிமயமாக இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் அதே சாமானியனுக்கு, அவன் தேடும் அனைத்தும் கிடைத்தவுடன், சிறிது நாட்கள் மட்டுமே எல்லாம் அடைந்துவிட்ட இன்பத்தில் திளைக்கும் அவனது மனம், அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் சூன்யமாகிறது. அவன் தனக்குள்ளே ஒரு மிகப்பெரிய வெறுமையை உணர்கிறான். அவன் தேடியது, ஏங்கியதெல்லாம் கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாமென்ற அவன் கனவில் பெரும் பாறாங்கல் விழுந்தது போன்று உணர்கிறான். எதையெல்லாம் அடைந்தால், தான் மகிழ்ச்சியாக இருப்போமென்று நினைத்தானோ, அது கிடைத்த பிறகும் ஏன் நிம்மதி இல்லையென்று குழம்புகிறான்.

இத்தகைய சூழ்நிலையில், மனம் உடனே வேறு ஒரு இலக்கை நிர்ணயித்து இதை அடையாததால்தான் பிரச்சனை என்று புதிதாகக் கிளப்பிவிடும். அப்படியே அதன் பின்னர் ஓடும் வரை சிறிது காலம் ஏதோ ஒன்றை அடையும் ஆர்வம் இருக்கும். அதையும் அடைந்தவுடன் மீண்டும் அவனுக்கு அதே பழைய நிலை திரும்புவதை உணர்வான். வெளியே ஆரவாரமாக காட்டிக்கொண்டாலும் உள்ளே பைத்தியம் பிடிக்கும். மனநல மருத்துவர்களிடம் எந்த ஏழையோ சாமானியனோ செல்வதைவிட, மிகப் பெரும் பணக்காரர்களின் கூட்டமே நிறைந்து வழிவதன் காரணம் இதுதான். அதனால் சாமானியனாக வாழ்வதே நல்லதென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தப் பதிவு பணம், புகழ் சம்பாதிப்பதற்கு எதிரானதல்ல, மாறாக வெற்றிகரமான வாழ்க்கை என்று உலகத்தால் போற்றப்படும் விஷயங்களை வைத்து, மனதை நிரப்பும் முயற்சியால் வரும் ஏமாற்றத்தை தவிற்பதற்கே. உலக கோடிஸ்வரனாக ஆக வேண்டுமென்றுகூட இலக்கை வைத்துக்கொண்டு முயற்சிக்கலாம் தவறில்லை, ஆனால் மகிழ்ச்சியை அதோடு முடிச்சுப் போடும்போதுதான் வருகிறது பிரச்சனை. அதை அடைந்த பிறகு பெரிய ஏமாற்றம் காத்திருக்கும். எவ்வளவு கடினமான முயற்சியோ அவ்வளவு பெரிய ஏமாற்றம். ஏனென்றால் மகிழ்ச்சி என்கிற உணர்வு எதிர்காலத்தில் எங்கோ இல்லை. அதன் உயிர்துடிப்பு “இங்கே” , “இப்போது” என்ற நிகழ்காலத்தில்தான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையிலேயே இதற்கான உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒன்றை அடைந்தால்தான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எத்தனையோ முறை உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை நினைத்திருப்பீர்கள், அதை அடைந்தும் இருப்பீர்கள், ஆனால் அதன் பின்னர் நிரந்தர மகிழ்ச்சியோடு இருக்க முடிந்ததா?

ஏன் முடியவில்லையென்றால், மகிழ்ச்சி இங்கிருக்கிறது, அங்கிருக்கிறது என்று சொல்லி, மனம் மீண்டும் மீண்டும் பொய்யான இலக்குகளை வைத்து மனிதனை ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னை தற்காத்துக்கொள்வதற்காக மனிதனை பலிகடாவாக்குகிறது. உண்மையில் மகிழ்ச்சி என்பது “மனமற்ற” நிலையில்தான் இருக்கிறது. “மனமற்ற நிலை” என்பதை எண்ணங்களற்று என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாலைவனத்தின் நடுவே, அருமையான நீர் சுரக்கும் ஒரு  கிணற்றை மூடி மறைத்து அதன் மேல் அமர்ந்து கொள்ளும் ஒருவன், நீங்கள் தாகத்தோடு வரும்போதெல்லாம், தவறான வழி சொல்லி திசை திருப்பிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் அது உங்களுக்காகவே காத்திருக்கும் உங்கள் சொந்தக் கிணறு, பரம்பரை சொத்து என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் இந்த உண்மை தெரிய வரும் நேரம் அவனை என்ன செய்வீர்கள்?

– தொடரும்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -