நிழல்களைக் கடந்து செல்லும் வெயில்
கனவுகள் சுரந்து கொண்டிருக்கின்றன
காட்டாற்று வெள்ளமாய் பெருக்கெடுக்கின்றன
நிலமெல்லாம் பீதிகொண்டு நடுங்குகின்றன
என் உலகம்
எனக்கான உலகம்
எனக்குள் அந்த உலகம்
எழுதலாமென நினைக்கிறேன்
எழுத்துக்களில்லாமல் எப்படி எழுதுவது ?
என் சொற்கள் அவள் வசமிருக்கிறது.
உடலை அடைய முயற்சிக்கிறேன்
உடல் தூரதூரமாகவே விலகுகிறது
உடலைக் கைப்பற்றி விட்டால் போதுமென்றிருக்கிறது.
உதிர்ந்த பூ
உன் வாழ்வு
உன் கனவு.
தோசை துண்டு ஒன்று கிடந்தது
ஆயிரம் எறும்புகள் தின்று கொண்டிருந்தன
நாயொன்று எறும்புகளிடமிருந்து தோசையைப் பறித்துப் போனது.
??????????????????????????
காட்சிகளுக்குள் அமிழ்ந்த பூமி
இதயம் என்னும் சின்ன
சிட்டுக் குருவி
கூடு தேடி அலைகிறது
அடைக்கலம் இன்னும் அகப்படவில்லை
நல்லதோர் ஆனந்த யாழ்
நலங்கெட
புழுதியில்
எறியுண்டதே ?
தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது
இருளைத் தாண்டித்தாண்டி நடக்கிறேன்
மனசுக்குள் வெளிச்சம் துளிர்க்கிறது
இறந்து போனாய்
பிறந்த தினம் வந்து போகிறது
நினைவுகளால் நிரந்தரமாக வாழ்கிறாய்
அலைகள் கரையைத் தேடி வருகின்றன
கரைகள் நெருங்க விடாமல் துரத்துகின்றன
காட்சிகள் மாறாமல் தொடர்கின்றன.
??????????????????????????
அலைகளின் அலைவரிசை
பயந்து ஓடித்தானாகணும்
பாவத்தில் கை வைத்திருக்கிறாய்
தண்டனைகள் துரத்தத்தான் செய்யும்
இத் தருணம் கொதி நிலையில் உள்ளது
தப்பிக்க நினைக்காதே
எதிர் கொள்
விருந்தினர்களை வரவேற்கலாம்
விருந்தினர்களை எதிர்பார்க்கலாம்
வேரோடு எம் வம்சமழிக்கும்
வெறி நாயை ஏன் வரவேற்கணும் ?
சண்டையிடுவதால் யாருக்கும் பிரயோசனமில்லை என்கிறீர்கள்
நீங்கள் எம் உடமையை திருடியுள்ளீர்கள்
உம்மோடு சண்டையிடாமல் நீங்கள் திருடியதை எப்படி திரும்பப் பெறுவது ?
பலூனாய் பறக்கிறேன்
பறவைகள் கடந்து செல்கின்றன
நானும் பறக்கிறேன்
குரைக்கும்
பசிக்கு ரொட்டி திருடியவனைப்பார்த்து குரைக்கும் நாய்
கட்டுக்கட்டாய் ஊழல் செய்து திருடுபவனை பார்த்து குரைப்பதில்லை
சிற்றலைகள் சுமந்து போகிறு நதி
பேரலைகளோடு வரவேற்கிறது சமுத்ரம்
தீராத அலைகளோடு யாவரும்
குளம் நிறைய மீன்கள் மிதக்கின்றன
ஆகாயதாமரை அடர்ந்திருக்கிறது
பிண நாற்றம் ஊரைச் சுற்றி வளைக்கிறது
கடவுள் மனிதனை படைத்தாராம்
மனிதன் சாதி, மதங்களை கட்டியமைத்திருக்கிறான்
சாதி, மதங்கள் சண்டை சச்சரவுகளை மரணத்தை தருவிக்கின்றன.