அறியப்படாத தமிழ் மொழி

நூலாசிரியர் : Dr. கண்ணபிரான் இரவிசங்கர்

- Advertisement -

புத்தகத்தின் தலைப்பிலேயே நமக்கு அதன் பொருளடக்கம் விளங்கும். தமிழர்களாக நாம் அறிந்திராத, அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் திரு. கண்ணபிரான் அவர்கள். நூலின் துவக்கமான மடல் உரையிலேயே நம்மை யோசிக்க வைக்கிறார். உதாரணமாக, “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி” – இதன் விளக்கம் என்ன என்று ஒரு புதிர்க் கேள்வியை எழுப்புகிறார். இது போன்ற சில கேள்விகளால் அதன் விடையை / விளக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. இன்னும் இவை போன்று என்னென்ன உள்ளன என்ற தேடலும் தொடங்குகிறது.

திருக்குறள், கம்பராமாயணம், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திரு முருகாற்றுப்படை – இது போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தெளிவுபடுத்துகிறார். இதன்பிறகு இந்த நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது.

ஐவகை நிலங்களின் தெய்வங்கள் மற்றும் ஆதிகுடிகளின் தெய்வங்கள் பற்றிய விளக்கங்கள் மிக அருமை.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

– தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

மாயோன் (முருகன்) – குறிஞ்சி

சேயோன் (திருமால்) – முல்லை

வேந்தன் – மருதம்

வருணன் (வருள்நன்) – நெய்தல்

தமிழ் சொற்கள் மறைப்பு, தமிழ் பொருள் மறைப்பு, தமிழ்க் கலை மறைப்பு, ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் மறைப்பு – அப்பப்பா இன்னும் இன்னும்…!

இவை போக, “துக்கடா” என்ற தலைப்பில் ஆசிரியர் கூறியிருக்கும் அனைத்துத் தகவல்களும் ஆகா! ரகம். 

புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் என்றால் தமிழின் பல சொற்கள் ஒரு பொருள் அல்ல பல பொருள் என்று உணர்ந்தது / உணர்த்தியது, ஊர்களின் விகுதிகள். இரண்டுமே காரணப்பெயர்களாக ஆகி நின்ற தமிழ்!

பூ என்பது பொதுவான பெயர்

* அரும்பும் போது = அரும்பு 

* அரும்பி, பனியில் நனையும் போது = நனை

* நனைந்து முத்தாகும் போது = முகை

* வெடிக்க ஆயத்தமாக இருக்கும் போது = மொக்குள்

* அரும்பி விரிந்து கொண்டே இருக்கும்போது = போது

* மணம் வீசத் தொடங்கும்போது = முகிழ்

* மலரும்போது = மலர்

* நன்றாக விரித்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது = அலர்

* கூட்டமாய் மலர்ந்தால் = பொதும்பர்

* வீழும்போது = வீ

* உதிர்ந்து கிடக்கும் பூக்கள் = பொம்மல்

* பழுப்பாய் வாடிய பின் = செம்மலர் (செம்மல்)

அடடே! என்னே தமிழின் அழகு!

தமிழனின் பேச்சுக்களைப் பாருங்கள்! பேசு, பகர், செப்பு, கூறு, உரை, நவில், இயம்பு, பறை, சாற்று, நுவல், ஓது, கழறு, கரை, விளம்பு…

இது போல் மொத்தம் 25 பேசுதல்களை தொல்காப்பியர் பேசுகிறார்! ஒவ்வொன்றிற்கும் நுட்ப வேறுபாடுகளே உள்ளன. அதாவது தமிழில் காரணப் பெயர்களே அதிகம். சும்மா இடும், இடுகுறிப் பெயர்கள் குறைவே. இவற்றைத் தெளிவாக விளக்குகிறார் முனைவர்.

ஊர்களின் விகுதிக்கு வருவோம். இவற்றிலும் காரணப்பெயர்கள் தான்! பொதுவாக தமிழகத்தில் ஊர்களின் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஊர்களின் விகுதிகள் பட்டி, கல், பாளையம், குடி, பாக்கம், பட்டினம் என்று வருவதைக் காணலாம். இதைவைத்தே அந்த ஊர் நம் ஐவகை நிலங்களுக்குள் எதன் கீழ் வரும் என்பதையும் பார்க்கலாம்.

* முல்லை (காடு சார்ந்த நிலம்)

      ஆர்க்காடு, ஏர்க்காடு, ஆலங்காடு, களக்காடு…

      பட்டி – கோயில்பட்டி, ஆண்டிபட்டி, வாடிப்பட்டி, கல்லுப்பட்டி (ஆநிரைகளை மேய்ப்பதால் பட்டி)

இதேபோல் ஒவ்வொரு நிலத்திற்கும்…

தமிழ் வேளாண்மையின் காரணப் பெயர்கள் அழகு!

* நீரைத் தாங்கி (பெரிதாக) நிற்பதால் தாங்கல்

* நீரை ஏந்தி (சிறிதாக) நிற்பதால் ஏந்தல்

* இயற்கையாக அமைவன கண்மாய், பொய்கை

* செயற்கையாய் மனிதன் வெட்டுவது ஏரி, குளம்

* ஓடுவதால் ஓடை

* மடுப்பதால் மடை

* குளப்பதால் (சிறு பரப்பு) குளம்

* கேண்பதால் (ஊறுவதால்) கேணி

* ஊர் உண்ணும் நீர்நிலை ஊருணி

* மக்கள் குளிக்கும் நீர்நிலை குளம்

* விலங்கு குளிக்கும் நீர்நிலை குட்டை

புத்தகத்தை முடிக்கும்போது தொல்காப்பியத்தைக் கண்டிப்பாக படித்தே ஆகவேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. தமிழின் பல நுண்ணிய விதிமுறைகளையும் நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தமிழால் வளர்வோம்!

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?

புவனேஸ்வரி
புவனேஸ்வரிhttps://ennathuligal826330077.wordpress.com/
இவரின் சொந்த ஊர் திருவில்லிபுத்தூர் பக்கம். சென்னையில் வாசம். புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உடையவர். சமீபமாக வலைப்பதிவுகளும், புத்தகங்களுக்கு விமர்சனமும் எழுதிவருகிறார்.

4 COMMENTS

  1. உங்களுடைய விமர்சனம் மிக அருமை.
    இந்தப் புத்தகத்தை இப்போது வாங்கி வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    மிக அருமையாகவும் எளிமையாகவும் எழுதியுள்ளீர்கள். நன்றி

  2. தமிழ் மொழி பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  3. அருமையான முன்னுரை… அனைவரும் கண்டிப்பாக படிக்க, நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள, தெளிந்து கொள்ள பல செய்திகள் உள்ளன.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -