அந்தரக் கடல்

மூன்று கவிதைகள்

- Advertisement -

அந்தரக் கடல்

போதும் நிறுத்து
என் கோப்பை நிரம்பி விட்டது
நான் மூழ்கிப் போய்விடுவேன்
உன்னுள் நான்
என்னுள் நீ
சுடருள் தீ
தாமிரபரணித் துயரம்..
பெருக்கெடுக்கிறது
தலைமுறை தலைமுறையாக… சீற்றமெடுத்துப் பாயும்
புதினங்களுக்குள் பயணிக்கிறேன்
அடர்ந்த காடு…கும்மிருட்டு…மிருக ஒலிகள்…
வெளியேற வழி சொல்லுங்கள்.
வீணையின் தந்தியைத் தொட்டுவிட்டாள்
அதிர்ந்து கொண்டேயிருக்கிறது
மனசெல்லாம் மெல்லிசைக் கச்சேரி
உள்ளம் எங்கும் பேரலைகள்
உணர்வுகள் தோணியில் பயணிக்கிறது
கடக்கும் இடங்களில் பூக்கள் விழிகள்காட்டி அழைக்கின்றன
இதயம் கனவு காண்கிறது
இதழ்கள் மெளனம் காக்கின்றன
இனிமை பறந்து திரிகிறது.

??????????????????????????

நழுவும் கருணை மிகு கனிந்த சிரிப்பு

நிறைய பேர் அழுது கொண்டிருக்கிறார்கள்
நிறைய பேர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்
நிலவும் சூரியனும் போய் கொண்டிருக்கின்றன
வட்டி வாங்குபவன் கை அழுகணும்
கட்டப்பஞ்சாயத்து பேசுபவன்

வாய் அழுகணும்

அநியாயமாய் சொத்து சம்பாரிப்பவன் வம்சம்
சாம்பலாகணும்
அவன் 100 ரூபாய் இழந்தான்
இவன் 10 ரூபாய் இழந்தான்
அவனவன் இழப்பு அவனவனுக்கு பெரிசு
நடைபாதைகள் தோறும் குடும்பங்கள்
நாயினும் கேடான பொழப்பு
நாங்களும் இந்திய பிரஜைகள்
நிற்க நிழலில்லை
ஆந்து சோந்து போனா ஆதரிக்க யாருமில்லை
நாதியத்த ஜனங்களடி கிளியே
யாரும் வரலாம்
யாரும் போகலாம்
நல்ல காரியங்கள் செய்வது தான் முக்கியம்
பாவம் எம்.எல்.ஏ. க்கள்
பட்டினி கிடக்கிறார்கள்
சட்டென்று விலகிப் போனாய்
பட்டென்று உதிர்ந்து வீழ்ந்தேன்
மண்ணாவதைத் தவிர வேறு வழியில்லை.
உன் சமாதானங்கள் ஆறுதலாயில்லை
உன் தேற்றல்கள் வலியை தீர்க்கவில்லை
முறிந்த கிளையாய் துவள்கிறேன்.

??????????????????????????

புலர் காலையின் முன்னோட்டம்

பஞ்சு மிட்டாய்காரனின் மணியோசை
தேய்ந்து மறைகிறது
கனவு மணலில் வண்டியோட்டிப் போகிறேன்
அரிக்கேன் விளக்கின் வெளிச்சம் வழிகாட்டிப் போகிறது
இலைகள் குலுங்க பெரு மகிழமரம் வீற்றிருந்தது
இதயம் குளிர்ந்திட நிழலில் அமர்ந்தேன்
புத்தன் நேரில் நின்றிருந்தான்
கனிந்து கொண்டிருக்கிறது
கண்கள் பறிக்க எத்தனிக்கிறது
கவிதை கை நழுவிப்போகிறது
மனசு வார்த்தைகளின் சுனை
ஊற்றெடுத்து பீறிட்டடிக்கும்
அன்பின் நதி பெருக்கெடுத்தோடும்
ஒரு அழகான கவிதை சொல்
வாழ்க்கை ரம்மியமாகட்டும்
பூந்தோட்டம் காத்திருக்கிறது
குறை சொல்லவில்லை
ஒதுக்கி தள்ளி விட்டார்கள்
விலகி நிற்கிறேன்
சனிக்கிழமையும் பள்ளிக்கூடம்
போய் வருவதில் ஒரு வார கஷ்டம் குவிகிறது
பரவாயில்லை பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது ஆறுதல்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -