யமுனாவின் இயல்பு இந்த வீட்டில் எல்லோரும் அறிந்ததே
எல்லோரும் என்றால்
யமுனாவின் அம்மா
தினமும் வரும் யமுனாவின் தோழி
இரு கைகள் நிறையக் கதைகளை எடுத்துவரும் தோழியின் மகன்
யமுனாவைச் சந்திக்கும் போதெல்லாம் கீச்சென்ற பறவையின் உற்சாகம் தருவாள்
பறவையின் பறந்த திசையெங்கென நானும் தேடிப் பறக்க ஆரம்பித்திருப்பேன்
அந்தநேரம் மகன் இருகைகளை விரித்து யமுனாவிற்கு கடல் கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பான்
இரவின் கடல் அலையென ஆழ்ந்திருப்பாள் யமுனா
மறுநாள் அறையெங்கும் பறவைகள் பறந்தலையும்
மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்
வலைவீசிய மீனவன் துடுப்பு துறந்து படகில் உறங்கியிருப்பான்
வானம் சூரியனைச் சேர்த்திழுக்கும்
கரிக்கோடிட்ட அறைச்சுவரின் ஓரம் யமுனா உறங்கிய பொழுதை யாரும் அறிவார்
நேற்று கதைகளையும் கேட்ட வீடு
இன்று கதைகளைச் சொல்லும் வீடு
யமுனா வீடு.