மின்கிறுக்கல்

Myindia.sg கவிதைப்போட்டி 2021

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

கோவிலுக்குக் குடமுழுக்கு
கொற்றவைக்குப் பட்டுடுப்பு
பிறப்பையும் இறப்பையும்
பிணைத்திடும் வாழ்வின்
பல நிலைகளிலும் வளமேற்றிட
ஆசைத்தீயில் ஆயிரம் வேள்விகள்..
இன்னார் இன்னார் இதனை
ஆண்டவனுக்குச் செய்ததாகப்
பெயர் பொறிப்பு..
முற்பகல் செய்த தீவினை
அடர்வுகள் குறைத்து அழிக்க
பிற்பகல் கோவிலில் இறைமுன்
விதவிதமாய் விருந்தளித்துப்
படைத்தவனுக்கே படம்காட்டிப்
பகட்டினைப் பறைசாற்றும்
போலிப்பக்தர்க் கூட்டம்..
பட்டினியில் ஒட்டிய வயிற்றுடன்
கையேந்தி நிற்கிறது அறம்…
அதன் வயிற்றுக்குச் சோறிடுபவனுக்காய்க்
காத்திருக்கிறது இறை.

Exit mobile version