மின்கிறுக்கல்

பெருநகர் கனவுகள் – 7

கவிதை தயாரிப்பவன்

கவிதை தயாரிப்பவனைவிட
அவனுக்கு வாய்க்கும்
கணங்கள் அபூர்வமானவை.

கூர்ந்து கேட்கும்
அவனது செவிகளில்
இரைச்சல்களைவிட
சிலரது மௌனங்களே
கேட்டுவிடுகின்றன.

அலைந்து திரியும்
அவனது பார்வைகளுள்
வெளிச்சத்தைவிட
இருள் பூசிய முகங்களே
தெரிந்துவிடுகின்றன.

கவிதை தயாரிப்பவனின்
கவிதைகளைவிட
அவனது அனுமானங்கள்
அச்சுறுத்துகின்றன.

கவிதை தயாரிப்பவனின்
கவிதைக்குள்ளிருந்து
கேட்கும் குரல்கள்
அலறுகின்றன.

கவிதை தயாரிப்பவன்
பலமுறை கொன்றொழித்த
சம்பவங்கள்
காட்சிகள்
மனிதர்கள்
தருணங்கள்
என அனைத்திற்கும்
அவனே ஒரு கடவுள் போல
நின்றிருந்தான்.

Exit mobile version