மின்கிறுக்கல்

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 18

வான்நிலாவின் வாட்டத்தைப் போக்கிவிட்டுத்தான் அடுத்தவேலை என்று உறுதிமொழிபோல சொல்லிவிட்டுச் சென்ற எஸ்.பி.பி வாட்டத்தைப் போக்கிவிட்டாரா? என்ன செய்து வான் நிலாவைத் தேற்றினார்?

மனிதவாழ்வின் அடிப்படைத்தேவைகள் மூன்றுதான். உணவு உடை உறைவிடம். இதில் முதலிடம் வகிக்கும் உணவுக்கும் நிலாவுக்கும் பெருந்தொடர்பு உண்டு. நிலாவைக்காட்டிச் சோறூட்டாத தாயும், நிலாவைப்பார்த்துச் சோறுண்ணாத சேயும் இவ்வுலகத்தில் இருக்க வாய்ப்பேயில்லை. நம் வாழ்வில் நாம் எல்லோருமே கண்ணால் காண்கின்ற ஒரே தேவதை நிலாதான். வீட்டுக்குள் அமர்ந்து உண்கின்ற அதே சோற்றினை நிலாவைப் பார்த்துக்கொண்டே நிலாச்சோறாக உண்ணும்போது சுவை கூடுகிறது.. ஒருவாய்ச்சோறு கூடுதலாய் வயிற்றுக்குள் போகிறது. வானின்று நமக்கு வரமருளும் தேவதை அவள்.

பாட்டுலகின் விடிவெள்ளியான நம் பாடும்நிலா இன்று நிலாப்பாட்டு பாடுகிறார். இந்தப்பாட்டின் சிறப்பு என்னவென்றால் நாயகியின் சோகத்தைப் பார்த்து நாயகனும் மனம் நொந்துபோனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளின் சோகத்தைப் போக்குவதற்காக நாயகன் பாடுவதாக அமைந்திருக்கிறது.

விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே

உன்னைப்  பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே

நிலாச் சோறு நிலாச் சோறு தரவா நாளும் பசியாற

குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக

என்று முதல் சரணத்தில் பாடத்தொடங்கும் நம் எஸ்.பி.பியின் குரல் அடிக்குரலாக இருக்கிறது.. அதேவேளையில் அது கனத்த குரலாகவும் இல்லாது கிசுகிசுக்கும் குரலாகவும் இல்லாது இடைப்பட்ட மென்மையான குரலாக இருக்கிறது.. கூடுதல் சிறப்பாக சிறுசிறு அதிர்வுகளுடன் அவர் குரல் ஒலிக்கிறது. இசைஞானியின் இசையும் பாடும்நிலாவின் குரலும் சேர்ந்து செய்யும் மாயம் அது.

அதிலும் அந்த நிலாச்சோறு நிலாச்சோறு என்று சொல்லும்போது வாய்க்குள்ளேயே மெலிதாய்ச் சிரித்துக்கொண்டே பாடுவதுபோல் இருக்கும். நிலாச்சோற்றின் மகிழ்வினைத் தன் குரலிலும் வெளிப்படுத்திப் பாடியிருப்பது அழகோ அழகு.

அடிக்குரலில் பாடிக்கொண்டிருந்தவர் சட்டென்று அடுத்த வரியைப்பாடும்போது இயல்பான மென்குரலுக்கு மாறிவிடுகிறார்.

வானவில்லும் தானிறங்கிப் பாய் போடுமே  நீயும் தூங்க

ஆடும் மயில் தோகை எல்லாம் தாலாட்டியே காற்று வீச

என்று சோகமாய் நிற்கும் நாயகியை மகிழ்ச்சியில் இழுத்துவிடுவதற்காகப் பாடுகிறார். வானவில்லே கீழிறங்கி வந்து என்னைப் பாயாகப் பயன்படுத்திக்கொள் என்று சொல்வதும் மயில் வந்து தன் தோகையை அசைத்து அசைத்து மென்மையாய்க் காற்று வீசித் தாலாட்டுவதும் காதலிக்காக மட்டுமே ஒருவன் நடத்திவிடக்கூடிய செயல்கள். காதலில் கைகூடாதவற்றையெல்லாம் தத்தம் கவிதைகளில் கைகூடச்செய்து தானும் மகிழ்ந்து காதலர்களையும் மகிழ்த்திவிடுகின்றனர் கவிஞர்கள்.

தேவகன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே?

இவ்வரியில் தனித்துவமான நம் எஸ்.பி.பியின் குரலை நம்மால் அழகாகக் கண்டுகொள்ளமுடியும். தேவகன்னியே என்று குரலை மேலேயுயர்த்தி நீட்டிப் பாடிவிட்டுத் தேய்வதென்ன என்ற சொல்லைப் பாடும்போது அதன் பொருளுக்கேற்ப சட்டென குரலைக் கீழிறக்கிப் பாடுகிறார். கீழிறங்கியதோடு நில்லாமல் நீ என்ற சொல்லில் ஒரு வினாக்குறியைப் புகுத்தி ஓர் இடைவெளிவிட்டுப் பின்னர் தன்னாலே என்று கேள்வியை முடிக்கையில் ஒரு தாய் தன் குழந்தையிடம் மென்மையாக கொஞ்சி வினவிடுவதைப்போலவே இருக்கும் அக்குரல். 

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனைப் பாரு

நெஞ்சில் வாழும் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு

என்ற வரிகளைக் கேட்கும்போது நம் எல்லோரையும் பார்த்து அந்த வரிகளைக் கேட்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அப்படியே பொருந்துகிறது ஒவ்வொரு சொல்லும்.. அதற்குப் பதிலைச் சொல்கையில் நம் வாய் தானாகவே “பாடும் நிலா” என்றுதானே பதிலுரைக்கும். தனிமையும் சோகமும் மனத்தில் பெருஞ்சுமையாய் அழுத்தும்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கனம் குறைத்து  மனத்திற்கு ஆறுதலையும் தேறுதலையும்  தருவதில் அவர் பாடிய பாடல்களுக்குத்தான் முதலிடமும் பேரிடமும் உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனக்கு.

உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு

உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு

எத்தனை அழகான மனவலுவூட்டும் வரிகள் இவை…! ஒரு பெண்ணுக்கு ஆண் செய்யக்கூடிய பெருங்காதல் என்னவாக இருக்க முடியும்? நான் அருகிலிருந்தாலும் அருகாமையிலிருந்தாலும் உனக்குப் பாதுகாப்பாகவும் அரணாகவும் இருப்பேன், உன் மனத்தைத் திடப்படுத்திப் பலமேற்றுவேன் என்று தன் சொல்லிலும் செயலிலும் உணர்த்துவதுதான்.. அவ்வாறு  செய்வதில் தந்தையர்க்கே முதலிடம்.. அடுத்த இடம் அண்ணன்மார்க்கு. அதனால்தான் ஒவ்வொரு பெண்ணும் தன் தகப்பனைப்போல , உடன்பிறந்தவனைப்போல அன்பான ஒருவன் தனக்கு வாழ்க்கைத்துணையாக வரவேண்டுமென்று விரும்புகிறாள்.

இப்போது இப்பாடலின் பல்லவியை நாம் பார்க்கலாம்..  ஒரு குழந்தை நிலாவைக் கூப்பிடுவதைப்போல வெள்ளி நிலவே என்று அழைத்துவிட்டு மீண்டு ஒருமுறை வெள்ளி நிலவே என்று அழைக்கிறார். அடுத்த வரியில்தான் இசையோடு இணைந்து பாடத் தொடங்குகிறார்.

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே …

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட

உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னைச் சீராட்ட

அவர் வெள்ளி நிலவே என்று பாடுவதை நன்கு கவனமாகக் கேட்டுப்பாருங்கள். நிலவே என்பதில் உள்ள வே என்ற எழுத்தை மட்டும் கொஞ்சம் கூடுதல் அழுத்தத்துடன் சொல்கிறார். அதுதான் அச்சொல்லுக்கு ஒரு தனித்துவ இனிமையைக் கொடுக்கிறது. எத்தனைமுறை நிலவே வருகிறதோ அத்தனைமுறையும் அவர் அதேபோலவே பாடுகிறார்.. இம்மாதிரியான சிறுசிறு பலுக்குதல்களில்கூட அவரின் வினைக்கெடல் தான் அவரை வெகு எளிதாக நாற்பதாயிரம் பாடல்களைப் பாட வைத்து மணிமுடி சூட்டியிருக்கிறது.

குறிப்பாக அந்த ” முல்லை மலரே முல்லை மலரே ” என்று பாடுகையில் சட்டென்று நடிகர் கார்த்திக் குரல்போலவே கேட்கும்.. நான் பொதுவாக நடிகர்களுக்கென்று குரல் மாற்றிப் பாடுவதில்லை, இயல்பாகத்தான் பாடுகிறேன் என்று அவர் சொன்னாலும் பலநேரங்களில் அந்தந்த நடிகரின் குரலிலேயே நம் எஸ்.பி.பி பாடியிருப்பதுபோலவே தோன்றும்.  அதுதான் அவர் பெற்றுவந்த பெருவரம்.

இப்பாடலில் அவர் பெரிதாக எந்தவொரு குரல் மாற்றமோ, குறும்புச் சேர்க்கைகளையோ செய்யவில்லை.. தன்னுடைய இயல்பான குரலில்தான் கொஞ்சமாய் அங்குமிங்கும் மாற்றியமைத்துப் பாடியிருக்கிறார். ஆனாலும் கேட்பதற்கு அத்துணை இனிமையான பாடல் இது. பாடல் தொடக்கம் முதல் இரண்டாம் சரணத்தின் முடிவு வரை அவர் ஒவ்வொரு சொல்லையும் பலுக்குகின்ற அழகென்பது ஒவ்வொரு சொட்டாய்ச் சொட்டுகின்ற தேன்துளியைப்போல காதினுள் தேன் பாய்ச்சுகிறது.

நந்தவனத்தேரு என்ற படத்தில் நடிகர் கார்த்திக் பாடுவதாக அமைந்த பாடல் இது. பாடும் நிலா- இசைஞானி- கார்த்திக் என்ற மூவரின் கூட்டணியில் அமைந்த அட்டகாசமான பாடல்களில் இதுவும் ஒன்று.

சரி.. நிலாவைத் தேற்றியதோடு மட்டுமல்ல இறுதியில் அதைப்பாடவும் வைத்துவிட்ட நம் எஸ்.பி.பி அடுத்து என்ன செய்யப் போகிறார்? நிலாவைத்தான் ஏதோ கைக்காட்டிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.. நிலா வட்டமாக இருக்கிறதே என்று சொல்கிறாரோ? அன்னம் மஞ்சள் என்று ஏதேதோ சொல்கிறார். என்னவென்று அடுத்த செவ்வாயில் தெரிந்துவிடப் போகிறது.

உதயகாலத்தில் மஞ்சளும் சிவப்பும் நிலா பூசும்..!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

Exit mobile version