ஓரணுவாய் உருண்டோடிக் கருவாகிக் கொஞ்சம் கொஞ்சமாய் உருப்பெற்று, உறுப்புகளையும் ஒவ்வொன்றாய்ப் பெற்று வளரத்தொடங்கும்போதே நாம் பனிக்குடத்தினுள் மட்டுமல்ல இசைவெள்ளத்திலும் சேர்த்தேதான் நீந்துகிறோம்.
கருவறைச்சுவரில் ஒட்டிக்கொண்டு வெளியே நடப்பதை ஒற்றுக்கேட்கிறோம். தொடுதல் மற்றும் உடலியக்கத்தினால் உண்டாகும் அதிர்வுகளை நாம் உணரத்தொடங்குகிறோம். அது மட்டுமன்றி நாமும் உள்ளிருந்து கைகால்களை ஆட்டி உதைத்து பதில் அதிர்வுகளைத் தாய்க்கு அனுப்புகிறோம்.
இவையெல்லாமே நமக்கு இசையின் தொடக்க வேர்களாகி நம்முள் பரவிவிடுகின்றன. நம் தாய் நல்ல இதமான மகிழ்வான இசையைக் கேட்கும் போதெல்லாம் அது நம்முடைய இசையின் அதிர்வெண்ணோடு ஒத்துப்போகிறது.
மாறாக ஒரே கூச்சல், இரைச்சல், சண்டைக்காட்சிகள் போன்ற
கடாமுடா இசையுடனே தாய் அடிக்கடி புழங்கினால் அது நம் இசையின் அதிர்வெண்ணோடு ஒத்துப்போகாமல் அடம் பிடித்து நம்மை ஆட்டுவிக்க முயல்கிறது. விளைவு.. நாமும் கொப்பூழ்க்கொடியைச் சற்றே ஓரமாய் விலக்கிவிட்டுக் கோதாவில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கருவிலிருக்கும் நம்மை இன்மனத்தோனாகவோ இல்லை வன்மனத்தோனாகவோ மாற்றும் வல்லமை இசைக்குப் பெரிதும் உண்டு.
ஆக .. பிறப்பால் எல்லாருமே இசைக்குடும்பம்தாம் .. ! பிறப்பால் எல்லாருமே பாடகர்தாம்!
ஒரு கரிக்கோலை அழகாகச் சீவிச்செதுக்கி உள்ளிருக்கும் கரிக்குச்சியை வெளிக்கொணர்ந்து எழுதவும் வரையவும் உதவுகின்ற கூர்ச்செதுக்கியைப்போல, இசையென்பது நம் மனத்தைச் செதுக்கி எண்ணங்களைக் கூராக்கித் தேவையற்ற எண்ணச் சிலும்புகளை வெளித்தள்ளி நம் வாழ்வினை அழகாய் எழுதிடவும் வரைந்திடவும் உதவுகின்றது.
பனிக்குடத்தில் கும்மிருட்டில் குத்தாட்டம் போட்டுவிட்டு ஒருவழியாக இம்மாய உலகினில் வந்து நம் வருகையைப் பதிவும் செய்துவிடுகிறோம்.. வந்த களைப்பில் அயர்ந்து தூங்கிக்கொண்டே இருக்கும் நாம் ஒரு கிழமை ஆனதும் தூக்கத்தைத் தள்ளிப்போட எண்ணுகிறோம்.. அது போகமாட்டேன் என அடம்பிடிப்பதால் அழுகிறோம்.. ஆனால் தூக்கம்தான் நமக்கு நல்லது என்றுணர்ந்த நம் தாய் நம்மைத் தூங்க வைப்பதற்காக ஒரு மாயம் செய்கிறாள். ஆம்.. தாலாட்டு எனும் மாயம்தான் அது. அந்தப்பாட்டில் மயங்கி நாமும் தூங்கிவிடுகிறோம்.
குழந்தையாய் இருக்கும்போது நமக்குத் தேவை இரண்டே இரண்டுதான்.. பசியெடுத்தால் விழிக்கிறோம். அப்போது நமக்கு வயிற்றுக்குணவு ஈயப்படும். அவ்வுணவு செரிக்க நாம் மீண்டும் தூங்க வேண்டும்.. அப்போது நமக்கு செவிக்குணவு ஈயப்படும்.. சாப்பிடுவதும் தாலாட்டு கேட்பதும் உறங்குவதுமாக எல்லையில்லாக் களிப்பினில் மூழ்கித் திளைத்திருந்த நம்மை வளரவைத்து வளரவைத்து ” வச்சு செய்கிறான்” ஆண்டவன்……
ஆக இப்பிடித்தான் நாம் எல்லோரும் பண்ணோடும் பண்போடும் பிறந்திருக்கிறோம். தாலாட்டில் கிறங்கி உறங்கிப் பழகிய நமக்கு வளர வளர இயல்பாகவே பாடல்களில் ஓர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. நிலா நிலா ஓடி வா என்று பாடல் மூலமாகத்தான் நிலாவே நமக்கு அறிமுகம் ஆகிறது. அப்பாடா .. ஒருவழியாக பாட்டையும் நிலாவையும் இணைத்தாயிற்று. ஆம்.. பாட்டும் நிலாவும் நம் கூடவே வருவதைப்போலவே ஒரு பாடும் நிலாவும் நம் கூடவே வந்தது. அது நமக்காகப் பாடியது.. நம்மைப்போலவே பாடியது.. அதனாலேயே நமக்கு நெருக்கமான உறவாய் மாறிப்போனது.
பாட்டு என்பது ஒரு வலை.. அதை மாயவலையாக்கும் வித்தை ஒரு சிலர்க்கே கைகூடும். எல்லா நிகழ்வுகளுக்கும் நம் மொழியில் பாட்டு இருக்கிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பதில் பாட்டு இல்லாமல் ஆட்டமோ கொண்டாட்டமோ கட்டாயம் இருக்க முடியாது. வாழ்க்கையைக் கொண்டாடும் மனிதர்கள் எல்லாருமே பாட்டாளி இனம்தான்.. ஆம் பாடுபடுபவர் மட்டுமல்ல பாட்டுகளால் ஆளப்படுபவரும் பாடல்களை ஆள்பவரும்கூடப் பாட்டாளி இனமே! பாட்டாளிகள் என்றுமே நம் கூட்டாளிகள்தாம்.!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று வாழ்ந்து காட்டியது ஒரு பாடும்நிலா. ஆம் பாட்டு என்ற மூன்றெழுத்தைத்தான் இறுதிவரை தன் மூச்சாகக்கொண்டு வாழ்ந்த அந்நிலாவின் பெயரும் எஸ்.பி.பி என்றே அன்பான மூன்றெழுத்தாய் நம் மனத்தில் வேரூன்றியிருக்கிறது.
“இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என்று அவர் பாடிய வரிகள் அவர்க்கு முழுவதும் பொருந்தியிருப்பது சால்பு.
அன்பிலும் பண்பிலும் பணிவிலும் பளீர்ப்புன்னகையிலும் நிறைந்து சிறந்த அப்பாடும்நிலாவை எழுத்தில் ஏற்றிப்போற்றும் ஒரு சின்ன முயற்சிதான் இது. அவர் பாடிய பாடல்களோடு நம் பயணம் எவ்வாறு இருந்தது, இருக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பாடும் நிலாவின் உலா நீளும்…
பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி -2
இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.