இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
பாட்டுத்தான் மூச்சு என்று வாழ்ந்த எஸ்.பி.பி ஒருமுறை ” பாட்ட நிப்பாட்டு” என்று சொல்லிவிட்டார்.. அப்படிச்சொல்ல யார் காரணமென்றால் நம் கங்கைஅமரன்தான்.. ஏன் ஏன் ஏன் ? என பலப்பல ஏன் உங்கள் மூளைக்குள் கேள்விக்குறியாய்த் தொக்கி நிற்கலாம். கேள்விக்குப் பதிலை இப்போதே பார்த்துவிடுவோமே!
தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவே ஒரு பாட்டுச்சண்டை… அவர்கள்பாட்டுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிட , நம் பாடோ திண்டாட்டத்திற்குப் பதில் கொண்டாட்டமானது. அழகான பாட்டு ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறதே!
காதலைச் சொல்வதில் இத்தனை முறைகள்தாம் இருக்கின்றன என்று எண்ணிவிட முடியாத அளவுக்கு நொடிக்கொருவிதமாகக் காதலைச் சொல்வதில் வல்லவர்கள் நம் தமிழர். அதிலும் குறிப்பாக இந்த முறைப்பெண், முறைப்பையன் காதலைச்சொல்லும் முறையில் கொஞ்சம் கிளுகிளுப்பு தூக்கலாகவே இருக்கும்.. என்ன, அந்தக் கிளுகிளுப்பு ஒருநேரம் சிணுங்கலாகவும் ஒருநேரம் சீண்டலாகவும் வெளிப்படும். சிணுங்கலைவிடவும் சீண்டலில் வரும் காதல்தான் சும்மா கலக்கலாக இருக்கும். இஞ்சிமொரப்பாபோல முறைத்துக்கொண்டும் சிலிர்த்துக்கொண்டும் செல்லச்சண்டைகள் போட்டுக்கொண்டும் அவர்கள் பின்னிடும் காதல்வலை அத்துணை அழகாகவும் வலிமையாகவும் இளமைத்துள்ளலுடனும் இருக்கும்.
இங்கேயும் தலைவனும் தலைவியும் மாறி மாறி சீண்டிக் கொள்கிறார்கள்.
” என்ன பூட்டிப் புடிச்சு வெக்க
கூட்டுக் கிளியுமில்ல
காட்டுக் குயிலுமில்ல
கேட்டாக் கிறங்குதில்ல” என்று சிலிர்த்துக்கொள்ளும் தலைவியைப் பார்த்து
” கூட்டிப் புடிச்சு வெப்பேன் வீட்டுக் கிளியே உன்னை
காட்டில் தொரத்தி ரெண்டு போட்டுக் கிறங்க வெப்பேன் ” என்று சீறும் புலியாய்ப் பாடுகிறான் தலைவன்.. மெய்யாகவே கேட்கும் நம்மையெல்லாம் ஒருவிதமான துள்ளலும் எள்ளலும் கலந்த குரலில் பாடிக் கிறங்கடித்து விடுகிறார் எஸ்.பி.பி.
வெளியிலிருந்து பார்ப்போர்க்குச் சீண்டல்தான் தெரியும். அந்தச் சீண்டலுக்குள்ளே புதைந்து கிடைக்கும் காதலானது அவர்கள் இருவர்க்கு மட்டுமே தெரியும். சீண்டலுக்குள்ளே காதலைப் பொதிந்து சொற்களைப் பலுக்க வேண்டுமே.. ம்க்கும் என்றெண்ணியவாறே முகவாய்க்கட்டையை அங்கும் இங்கும் வெட்டித்திருப்பும்போது, அச்செயலுக்கு ஏற்றவாறு குரல்வளையும் சொற்களை வெட்டித்திருப்ப வேண்டுமே. இந்தப்பாட்டில் அதைச் செவ்வனே வியனழகுடன் பாடி அயர்த்தியிருப்பர் ஜானகியம்மாவும் எஸ்.பி.பியும்.
” மாறாத வாக்கு சொல்லும் சீரானவ
மறுத்து எவரும் சொன்னா வேறானவ ” என்று தலைவியவள் பாடும்போது ” இந்தாப்பாரு மச்சான், உன்மேல நான் வச்சிருக்க காதல் மாறவே மாறாது.. நீ மட்டும் என்னோட காதலை மறுத்துச் சொன்ன… அட, சொல்லித்தான் பாரேன்..அயித்த மவனே, அயிரமீன ஆயுறாப்புல ஆய்ஞ்சுப்புடுவேன் ஆமா” என்று சொல்வதுபோலவே உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே..!
இந்தப்புள்ள ஆயுறேன்னு சொன்னா அந்தாளு பாயுறேன்னு சொல்லிட்டு, “ஏன்டி.. நீ அயிரமீனு மாதிரி ஆயுறவரைக்கும் நான் என்ன அப்பளப்பூ தின்னுகிட்டு இருப்பேனாடி? அப்பிடியே அப்பளம் மாதிரி உன்ன நொறுக்குறேனா இல்லையானு பாரு” என்று விரால்மீனாய்த் துள்ளிக்கொண்டு,
” நீயென்ன தென்மதுரை அரசாணியா?
நெசமாக வந்திருக்கும் அல்லிராணியா?
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா
நடந்தா தங்கய்யாக்கிட்டே நடக்காதம்மா ” என்று பதிலடி கொடுக்கும் வரிகளாய் அமைந்தவை இவை.. இதில் எஸ்.பி.பி கூடுதல் அழுத்தம் கொடுத்துக் குரலில் கிண்டலையும் செல்லமிரட்டலையும் ஒருங்கே வெளிப்படுத்திப் பாடியிருப்பார்.
” கத்தாழ முள்ளுதானா இல்ல கொட்டாத சிறு தேளா ” என்று பாடும்போது ழகரம், ளகரம்,லகரம் எல்லாம் அத்துணைத் துல்லியமாய்ப் பாடியிருக்கிறார். எஸ்.பி.பியின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டாலே தமிழைச் சரியாகப் பேசப் பழகிக்கொள்ளலாம்..
தலைவியைக் கிண்டல்செய்யும் நோக்கில்தான்
” பாட்டு படிக்கும் குயிலே
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே” என்று பாடுகிறார் எஸ்.பி.பி. இல்லையென்றால் எஸ்.பி.பியாவது “பாட்ட நிப்பாட்டு” என்று சொல்வதாவது…!
பிரபு கனகா இணையாக நடித்து, கங்கை அமரன் பாடல்களுமெழுதி இயக்கிய கும்பக்கரை தங்கையா படத்தில் வந்த ” பாட்டு உன்ன இழுக்குதா? ஆமா ஆமா.. அதைக்கேட்டு நெஞ்சம் மயங்குதா? ஆமா ஆமா ..” என்ற பாடலைப்பற்றித்தான் இவ்வளவுநேரமும் நீங்கள் படித்துக்கொண்டிருந்தீர்கள். இதைப்படித்து முடித்த கையோடு அந்தப்பாட்டையும் ஒருமுறை காணொளியில் கண்டு சுவைத்து மகிழுங்கள். மகிழுங்கள். உங்கள் முறைப்பையனோ, முறைப்பெண்ணோ, அல்லது முறைத்துக்கொண்டு கேலியும் கிண்டலுமாய் உங்கள் மனத்தை நிறைத்த பெண்ணோ, ஆணோ உங்கள் நினைவில் வந்து செல்வார்கள் என நான் உறுதியளிக்கிறேன். வரவில்லையென்றால்? என்று என்னிடம் முறைக்கக்கூடாது .. மனத்தினில் காதல் குடியிருக்கும் எல்லார்க்கும் வருவார்கள் கட்டாயம்..! எத்தனைபேர் வருகின்றனர் என்பது அவரவர் தனித்திறமை..!
தான் எத்தனை ஊக்கத்துடன் பாடுகிறாரோ அதேயளவு மற்றவரையும் பாடுவதற்கு ஊக்கப்படுத்துபவர் எஸ்.பி.பி. அன்பிலே தோய்ந்து தோய்ந்து மிளிர்ந்ததால்தான் அந்நிலாவுக்குத் தேய்பிறையென்பதே இல்லை.
” ஒரு மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன?” என்று நாமெல்லாரும் எஸ்.பி.பியைக் கேட்டுக்கொண்டிருக்கையில் இதே கேள்வியை அவர் யாரைப்பார்த்துக் கேட்கிறார்? இதோ அவரிடமே கேட்டுவிட்டு வந்து உங்களிடம் சொல்கிறேன்.. அதுவரை காத்திருங்களேன்..
கங்கையின் நிலாத்தீண்டல் தொட்டுத்தொடரும்…!