முத்துமணி மாலையோடு எஸ்.பி.பி எங்கே போனார் என்றுதானே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்? அதைக் கண்டுபிடித்து உங்களிடம் வந்து சொல்லத்தான் நானிருக்கிறேனே.. சொல்வது மட்டுமல்ல…உங்களையும் கூடவே கூட்டிச்சென்று அவர் என்ன செய்கிறார் என்று காட்டியே விடுகிறேன் வாருங்கள்.
காதல் என்ற ஒற்றை உணர்வானது நல்வழியில் பல மாயங்கள் செய்யக்கூடியது. வெட்டவெளியில் எந்தவொரு பிடிப்பும் பிணைப்புமின்றி இப்புவிப்பந்து தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறதே… அதுகூட இயற்கையின் காதல்தான்..!
காதல் இல்லாதுபோனால் என்ன ஆகும்? சூரியன் இல்லாதுபோனால் இப்புவி என்னவாகும்? இரண்டிற்கும் ஒரே விடைதான். நாம் இல்லாமல் போய்விடுவோம்.. நிலம் நீர் நெருப்பு காற்று வானம் என்னும் ஐவிரல்கள் கொண்ட கைகளால் வாரிவாரி வழங்கி நம்மை வாழ்விக்கும் இயற்கையென்னும் கொடைவள்ளலுக்குத்தான் நம்மீது எத்துணை காதல்! அடைக்குந்தாழ் இல்லாத அன்பு அது..! காதல் எனும் மாமழையின் நீர்ச்சரங்களில் கட்டுண்டு கிடந்துவிட்டால் இம்மனித இனத்தின் வாழ்க்கைப் புத்தகத்தில் அத்தனை பக்கங்களும் வானவில் பக்கங்களாகவேதான் இருக்கும். தீங்குகளின் நிழல்கூட அங்கே விழாது…
அன்பின் பரிணாமங்களில் ஒன்றுதான் கொஞ்சுதல்… கொஞ்சுதல் எனும்போதே அன்பெனும் நூலில் அழகினைக் கோத்தெடுத்துச் சூட்டுதல்தானே.. மனத்தினில் அன்பை நிறைத்து ஒருவரைக் கொஞ்சும்போது அழகியல் அகராதியின் அத்தனை சொற்களும் நம்முன் வரிசைகட்டி நிற்கும்.. எடுக்கவோ கோக்கவோ என்று நாம்தான் சற்று தடுமாற வேண்டியிருக்கும்..
அதுபோன்றதொரு கொஞ்சும் பாட்டுதான் இப்பாடல். கொஞ்சிக் கொஞ்சிப் பாடுவதில் நம் எஸ்.பி.பியை மிஞ்ச யார் இருக்கிறார்? கொஞ்சுவதில் புகழ்பெற்றது இரண்டு கொஞ்சல்கள்.. முதலாவது குழந்தையைக் கொஞ்சுவது. இரண்டாவது குமரியைக் கொஞ்சுவது.. அது காதலியாகவோ , மனைவியாகவோ இருக்கலாம்.. இங்கே பாடும்நிலா யாரைக் கொஞ்சுகிறார்? குமரியைத்தான்.. காதலில் நிறைந்திருக்கும் மனம் சிலநேரங்களில் ஆழ்கடல்போல அமைதியாய் மகிழ்ந்திருக்கும்.. எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாது கருணையில் ஊறிக்கிடக்கும்.. அந்நேரத்தில் காதலியையோ காதலனையோ கண்கொட்டாமல் பார்க்கத்தோன்றும். சிறுபிள்ளையைக் கொஞ்சுவதுபோலக் கொஞ்சத்தோன்றும்…
பூங்காற்றினைத் தன் குரல்வளைக்குள் நுழைத்தெடுத்துக்கொண்டு சரணத்தில் நுழையும் எஸ்.பி.பி புல்லாங்குழலாய் இசைக்கத் தொடங்குகிறார்.
***** காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட *****
காற்றிலாடும் மலரைக் காணும்போது தொட்டிலில் ஆடும் பிள்ளையின் நினைவுதான் வரும். இரண்டுமே தாலாட்டும் உணர்வைத்தான் தரும். அதைப்போலவே காதலியின் கார்குழலும் ஆடுகிறதாம்.. காதில் மாட்டியிருக்கும் தொங்கட்டான் தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பல இசைக்குறிப்புகளை வெளியிடுகிறதாம்.. காற்றிலாடும் மலர், தொட்டிலிலாடும் பிள்ளை, கார்குழலின் அசைவு, தொங்கட்டானின் அசைவு இந்நான்கிலுமே இருக்கும் ஒற்றுமை மென்மை.. குகனோடும் ஐவரானோம் என்று கம்பன் சொன்னதைப்போல தன் குரலோடு ஐந்தாவதாய் இணைந்து கொள்கிறார் நம் பாடும் நிலா.
***** மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ******
எந்தவொரு செயற்கைப் பூச்சுமின்றி இயல்பாகவே மஞ்சளின் மினுமினுப்பு சிலர்க்கு தேகத்தில் வாய்த்திருக்கும். மஞ்சளோ, சிவப்போ, கறுப்போ – தேகத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் கலை அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தது. அப்படியொரு மஞ்சளழகியைத் தூங்கவைக்கத்தான் நம் எஸ்.பி.பி பாடுகிறார். மேகம் இராகம் கொண்டுவருமாம்.. மேகத்தில் எத்தனை ஈரமிருக்க வேண்டும்! அதில் எத்தனை குளுமை இருக்க வேண்டும்! அதே ஈரமும் குளுமையும் நம் பாடுநிலா தன் குரலில் கொண்டிருப்பார்.
****பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக****
நம் மனத்திற்குப் பிடித்த பாடல்களில் வரும் சில உவமைகள் நம்மைக் காந்தம்போல் ஈர்த்துப்பின் நம் மனத்தோடு ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு உவமைதான் இந்தப் ” பூநாத்து”.. நாத்து என்பதே இளம்பருவத்தைக் குறிக்கின்ற சொல்தான்.. இளம் என்று சொன்னாலே அழகு மென்மை பசுமை என எல்லாமே உள்ளடங்கியதுதான்.. நாற்று பாவியிருக்கும் நேரத்தில் மொத்தமாக அந்த நாற்றுகளை மேலோட்டமாகத் தொட்டுப்பார்த்தால் அந்த அழகான பசுமையான மென்மையை உணர முடியும். அதைப்போல பூ என்றதும் அழகும் மென்மையும் மணமும் நினைவுக்கு வரும். கவிஞர் பூநாத்து என்கிறார். மலரைப்போன்ற மென்மையான நாத்து போன்றவள் என்று உவமைப்படுத்தியிருக்கிறார். இந்த ஓர் உவமைக்காவே கவிஞரைத் தனிச்சிறப்புடன் பாராட்ட வேண்டும்.
அப்படி பூநாத்து போன்ற பெண்ணின் முகத்தைப் பார்த்து , தான் இதுபோல் இல்லையே என்று நாணி மனம் தாளாமல் வந்த வழியே திரும்பிவிட்டதாம் வானத்துநிலா..
***** சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய் *****
வானவில்லில் இருந்து வண்ணவண்ண நூல்களையெடுத்து, வானத்து விண்மீன்களை அதில்வைத்துத் தைத்துச் சேலையாக்கிக் காதலிக்குக் கொடுப்பாராம். இதெல்லாம் நடக்கக்கூடிய செயலா? என்றால் காதலில் நடக்கும். அதுவும் காதலோடு எழுதும் கவிஞர்களால் மட்டுமே நடத்தப்படும்.
உயிரூட்டத்துடன் எழுதப்பட்ட வரிகளுக்கு ஒப்பனைசெய்து தேர்போல ஊர்வலமாய் இழுத்துவரும் வேலையைத்தான் பாடும்நிலா செய்கிறார்.
***** பச்ச மலப்பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் *****–
இதுதான் இப்பாடலின் பல்லவி. காதலியைப்பற்றிச் சொல்லவேண்டுமென்றால் மட்டும் கவிஞர்களுக்குத் தனி கற்பனையுலகம் விரிந்துவிடும்போல. உச்சிமலைத்தேன், மாசுமருவற்ற நந்தவனத்தேர், பொன்மணி, வெள்ளிமணி என்றெல்லாம் உவமைகளை அள்ளித் தூவியிருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். மரத்தாலான தேர், கல்லால் ஆன தேர் , உலோகங்களாலான தேர் எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஓர் அழகான நந்தவனத்தையே தேராக்கினால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அழகும் வளமும் செழிப்பும் மணமும் பசுமையும் கலந்த பல வண்ணக் கலவையான ஒரு தேர் கண்முன்னே தோன்றுகிறது.
கிழக்குவாசல் படத்தில் வரும் பாடல் இது. நடிகர் கார்த்திக் நடிகை ரேவதி நடித்திருப்பர். இந்தப்பாட்டும் இசைஞானி-பாடும் நிலா-ஆர்.வி.உதயகுமார் எனும் முக்கூடலில் விளைந்த முத்து.
சின்னதம்பி படத்தில்வரும் ” அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ” பாடலை இப்பாடலொடு எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். அதுவும் ஒரு பெண்ணைப்பற்றிய பாடல்தான்.. ஆனால் காதல் இல்லாமல் மனமார வாழ்த்திப்பாடுவது. இங்கே காதலோடு தாலாட்டிப் பாடுவது. இரண்டையுமே பாடியிருப்பவர் நம் பாடும்நிலா எஸ்.பி.பி.
இப்பாடலில் ஒரு சிறப்பு என்னவென்றால் இதில் பல்லவியில் பயன்படுத்தியிருக்கும் பொன்னுமணி, நந்தவனத் தேரு என்ற இரு சொற்களைத் தனது அடுத்த படங்களுக்குப் பெயராக வைத்துவிட்டார் ஆர்.வி.உதயகுமார். அவற்றிலும் நடிகர் கார்த்திக்தான் கதாநாயகன்.
இப்பாடலில் இன்னுமொரு வியனழகும் உண்டு. இப்பாடலின் காட்சியிலிருந்து நடிகை ரேவதியை நீக்கிவிட்டுத் தளிர்நடை நடக்கும் ஒரு சிறு குழந்தையை அவ்விடத்தில் வைத்து எண்ணிப் பாருங்கள். முழுப்பாடலும் அக்குழந்தைக்கு அப்படியே பொருந்தும். நம்மூரில் எந்தக் குழந்தையானாலும் காது குத்தியதும் முதலில் விதவிதமாகத் தொங்கட்டானோடு கூடிய கம்மலைத்தான் போட்டு அழகுபார்ப்பர். ஆக லோலாக்கு என்ற வார்த்தையும் பொருந்திவிடும். வானவில் நூலெடுத்துத் தைத்த சேலையில் பிள்ளைக்குத் தொட்டில் கட்டலாம். ஆக சேலையும் பொருந்திவிடுகிறது. இதற்காகவும் கவிஞரை மீண்டும் நாம் வாழ்த்திப் பாராட்ட வேண்டும்.
அகத்தில் நிரம்பிவழியும் காதலைக் கண்களில் நடிகர் கார்த்திக்கும் குரலில் நம் எஸ்.பி.பியும் பொங்கிவழிய விட்டிருப்பர்.. மனம் நிறைய காதலோடும் காதலியின் மனம் நிரப்பும் கருணையோடும் இப்பாடல் முழுக்க கார்த்திக் நடிப்பில் அதகளம் பண்ணியிருப்பார். கார்த்திக்-ரேவதி இணையென்றாலே நம் மனத்தைக் கொள்ளைகொள்ளும் அழகிணை அல்லவா!
இப்பாடலைக்கேட்டு ரேவதி தூங்கிவிடுவார். நாமெல்லாம் தூங்குகிறோமோ இல்லையோ, கட்டாயம் மயங்கி விடுவோம். பாடலின் தொடக்கம் முதல் இறுதிவரையில் சீரான இயல்பான மென்மையான குழைவோடும் மகிழ்வோடும் ஒவ்வொரு சொல்லையும் பலுக்கியிருப்பார் நம் எஸ்.பி.பி.
வெறும் முத்துமாலையை அணிந்தால் நன்றாகயிருக்குமா? அதற்கேற்றாற்போல உடையும் இருந்தால்தானே முத்துமணி மாலை எடுப்பாகத் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்னதான் நடக்கிறது என்று வரும் கிழமையில் தெரிந்துவிடப் போகிறது.
நிலாவின் கொஞ்சல் இன்னும் உதயமாகும்….
இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.