மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 75

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். காலம் என்னும் நான் இருமை அதிகாரத்தில் உலகம் முதல் உடல் வரை அனைத்திலும் இருமை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கி இருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி உங்கள் உள்ளத்தையும் அது எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த பகுதியில் பார்த்து இருமை அதிகாரத்தை நிறைவு செய்யப் போகிறேன். பகுதிக்குள் செல்வோமா?

வேற்றுமையில் ஒற்றுமை


ஒற்றுமை மற்றும் வேற்றுமை இரண்டுமே எதிர்பதங்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை எங்கே ஒளிந்துள்ளது? இதனைப் புரிந்து கொள்வதற்கு முதலில் உங்கள் மனதை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.  இரு மனங்களுக்கு இடையில் ஒரு பந்தம் எதனால் உருவாகிறது? இரண்டுமே ஒரே போல் செயல்படுகிறது என்பதாலா அல்லது முற்றிலும் வேறுபட்டு செயல்படுகிறது என்பதாலா? முற்றிலும் வேறுபட்டு செயல்படுகிறது என்பது உண்மையாக இருப்பதால் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு பந்தம் உருவாகிறது. இரண்டு குழுக்கள் மனம் ஒத்து செயல்படுவதால் சமூகம், ஊர், இனக்குழு, மாநிலம், நாடு போன்ற அனைத்தும் உண்டாகின்றன. இங்கே உங்கள் மனம் தேடுவது ஒற்றுமையா அல்லது வேற்றுமையையா?


இதனை இன்னும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு அனைத்து உயிர்களுக்கும் இயல்பாக ஏற்படும் பகைமையைக் கூட எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பகைமை அனைத்திற்கும் மூல காரணம் இரண்டு விஷயங்கள். தன்னைப் போல் மற்றவர்கள் ஏன் செயல்படவில்லை என்னும் கோபம் அல்லது சரி நிகராக தம்மைப் போலவே வேறு ஒருவன் வந்து விட்டான் என்ற காரணம். இங்கே உள்ள விந்தையை சற்று யோசித்துப் பாருங்கள். மற்றவர்கள் தன்னைப் போல அல்லாமல் இருந்தாலும் வரும் பகைமை தம்மைப் போலவே மாறிவிட்டாலும் தொடர்கிறது! அப்படியானால் உங்களுக்கு தேவை ஒற்றுமையா அல்லது வேற்றுமையா? இந்த இருமைக்குள் சிக்கிக்கொள்ளும் மனது எந்த ஒரு பக்கமும் தொடர்ந்து செல்ல முடியாமல் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் இந்த மனது தான் நான் முந்தைய பகுதிகளில் கூறிய அனைத்து இருமைக்கும் மூலமான வித்தாகும். நீங்கள் செயல்படுவதற்கு காரணமான இந்த மனதின் இருமை உண்மை எனில் இந்த மொத்த அண்டமும் இருமையின் துணைகொண்டு உருவாவதற்கு காரணமாக ஒரு அடிப்படை எண்ணம் கூட இருக்கும் அல்லவா? அந்த அடிப்படை எண்ணத்தை தான் நீங்கள் உங்களுக்கு மீறிய இயற்கையின் சக்தியாகவோ கடவுளாகவோ வழிபட தொடங்கினீர்கள். 


எல்லாம் சரி. இருமை என்ற ஒன்று இருப்பதால்தான் மொத்த உலகமும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதே சமயத்தில் இந்த இரண்டு துருவங்களுக்கு சிக்கிக்கொண்டு தவிக்கும் மனது தொடர்ந்து பல்வேறு துன்பங்களுக்கும் ஆளாகிறது. இதனால்தான் மகிழ்ச்சி-துக்கம், நிறைவு-வெறுமை, கோபம்-பாசம் போன்ற வேறுபட்ட குணங்கள் அனைத்து மரங்களுக்கும் மாறி மாறி வருகிறது. ஒரு அளவுக்கு மேல் இந்த இருமை குணம் வேகமாக மாறி மாறி வருவது Bipolar disorder எனப்படும் நோய் என்று கூட உங்கள் உலகில் இருக்கும் மனோதத்துவ நிபுணர்கள் அழைக்கின்றார்கள். மனதை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் அதே பொருள் நோயாகவும் மாறுவதை இங்கே உங்களால் தெளிவாக பார்க்க முடியும். இது கூட ஒருவிதமான மனதின் இருமை தான். 


இருமை நிலை உங்கள் மனதுக்குள் எவ்வளவு வேகமாக மாறுகிறது என்பதை வைத்து தான் உங்களின் முதிர்ச்சியை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ள முடியும். மாறாமல் ஒரே நிலையில் ஒரு மனிதன் தன்னுடைய மனதை கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மொத்த வாழ்க்கையும் உங்கள் கைக்குள் கொண்டு வந்துவிடும். அதே சமயத்தில் இதனை மொத்தமாக நிறுத்திவிட்டு மனதை நகரவே விடாமல் செய்துவிட்டால் நீங்கள் ஒரு ஜடப்பொருள் ஆகிவிடுவீர்கள். இவை இரண்டு துருவங்களுக்கு நடுவில் மிதமான நிலையில் எப்பொழுது மனது உட்காருகிறதோ அதற்கு மேல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதிப்பதற்கு எதுவுமே கிடையாது. இதனை அடைவதற்கு முதலில் உங்கள் மனதை நீங்கள் தொடர்ந்து உற்று நோக்க வேண்டும். மற்ற அனைத்தும் அதுவாகவே நடந்துவிடும். முடிந்தால் சற்று முயற்சித்து பாருங்கள்.

கடந்த ஐந்து பகுதிகளாக பார்த்து வந்த இருமை அதிகாரத்தை இந்த பகுதியுடன் முடித்துக்கொண்டு வேறொரு புதிய அதிகாரத்தில் உங்களை சந்திக்கிறேன். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version