மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 66

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். என்னுடைய கண்ணோட்டத்தில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளையும் பல்வேறு அதிகாரங்களாக தொகுத்து உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். சில பகுதிகளுக்கு முன்னால் யுத்த அதிகாரத்தில் பலவிதமான யுத்தங்களைப் பற்றி கூறியுள்ளேன். ஆனால் அனைத்து யுத்தங்களுக்கும் முதன்மையானதாக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆயுதங்கள் முதலில் பெரும் அழிவினை உருவாக்கினாலும் பின்னர் உங்கள் வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் மிகவும் அதிகமாகும். ஆயுதங்களின் கதையை அறிவியலுடன் கலந்து இந்த அதிகாரத்தில் உங்களுக்கு விரிவாக கூறுகிறேன் கேளுங்கள்.

எதிர்ப்பின் பிரதிநிதி


வெயில் காலங்களில் எந்த ஒரு மறைவும் இல்லாத வெட்ட வெளியில், பகல் நேரத்தில் வெளியே சென்று விட்டு வந்தால் எப்படி உணர்வீர்கள்? சூரியனின் வெம்மை தாங்க முடியாமல் சோர்ந்து விடுவீர்கள் அல்லவா? இத்தனைக்கும் சூரியன் நேரடியாக உங்களை வந்து தாக்கவில்லை. பலகோடி மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு தன்னுடைய கதிர்வீச்சை மட்டும்தான் பூமிக்கு அனுப்புகிறது. இப்படி சூரியன் நேரடியாக தாக்காமல் தன்னுடைய பிரதிநிதியாக வேறு ஒரு பொருளை அனுப்பி வைக்கிறதல்லவா? அந்த மற்றொரு பொருள் தான் ஆயுதம் எனப்படுகிறது. ஆயுதம் என்றால் அது அறிவை மட்டும் தான் உருவாக்க வேண்டும் என்றில்லை. சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால் தான் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ்கின்றன. எந்த ஒரு பொருளின் அடிப்படை இயக்க விசையை மாற்ற வேண்டும் என்றாலும் வெளியிலிருந்து ஒரு ஆயுதம் தேவைப்படும். தூண்டுகோல் தத்துவத்தை கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ் ஒரு நீளமான குச்சியை கொடுத்தால் அதன்மூலம் பூமியை தூக்கி விட முடியும் என்று கூட கண்டுபிடித்தார். அண்டசராசரத்தில் மொத்த இயக்கமுமே இதை நம்பியே இயங்குகிறது. இப்படிப்பட்ட ஆயுதங்கள் மனிதனின் வாழ்க்கையில் அன்றாட ஒரு தேவையாக மாறியது எப்போது தெரியுமா? சொல்லப்போனால் மனிதனின் தொடக்கமே அங்குதான் இருக்கிறது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் நியாண்டெர்தல் என்றழைக்கப்படும் பனிமனிதன் வாழ்ந்து வந்தான். தற்பொழுது உள்ள மனிதர்களை (Homo Sapiens) விட இவர்கள் மிகவும் வேறுபட்டவர்கள். மிகவும் வலிமையான உடற்கட்டுடன் மனிதனை விட அதிக உயரத்துடன் காணப்பட்டனர். இந்த பனிமனிதனின் முன்னால் தற்பொழுதைய மனிதனால் சிறிது நேரம் கூட சண்டைபோட்டு தாக்கு பிடிக்க முடியாது. இப்படிப்பட்ட வலிமையான மனிதர்கள் இருக்கும்பொழுது மனிதன் உயிர் வாழ்வது மிகவும் கடினமான காரியம்தான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் மனிதனை சமாளிக்க முடியாமல் பனி மனிதன் மொத்தமாக அழிந்து போனான். இதற்கு காரணம் மனிதர்கள் கண்டுபிடித்த ஆயுதம்தான். கற்கள் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு அவன் செய்த ஆயுதங்கள், மிகவும் உடல் வலிமையான தனிமனிதனை வீழ்த்தி அவனுடைய இனத்தை மொத்தமாக அழித்தது. ஆக மொத்தத்தில் மனித இனம் இன்று உயிருடன் வாழ்வதற்கு முக்கியமான காரணமே அந்த ஆயுதம் தான்.

மனிதனின் ஆதி காலத்திலிருந்து தொடங்கி இன்றுவரை சிறிது கூட மாறாமல் இருக்கும் குணம், அவன் ஆயுதத்தை கையாளுவது தான். சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இறந்து போன மனித உடல்களை ஆராய்ச்சி செய்து பார்த்த மருத்துவர்கள் ஒரு முக்கியமான ஒற்றுமையை கண்டுபிடித்தார்கள். மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்த பல்வேறு நாகரிகங்களில் மனிதனின் வலது கை இடது கையை விட மிகவும் நீளமாக இருந்தது. இதற்கு காரணத்தை கண்டு பிடிக்கும் பொழுது ஒரு முக்கியமான விஷயம் புறப்பட்டது. அந்த காலத்தில் வசித்த மனிதர்கள், வேட்டையாடுவதற்கும் யுத்தம் புரிவதற்கும் வில் அம்பினை பயன்படுத்தினார்கள். இந்த ஆயுதத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வந்தால், வில்லைப் பிடிக்கும் கை அதிகம் உபயோகப் படாமல் உள்ளதால் வளர்ச்சி அடையாமல் இருந்தது. அதே சமயத்தில் அம்பை இழுத்து செலுத்தும் கை, பின்னோக்கி வளைந்து செயல்படுவதால் நன்கு வளர்ந்து நீளமாக இருந்தது. தங்களுடைய உடல் அளவே மொத்தமாக மாறும் அளவிற்கு இருந்தாள் எவ்வளவு பயிற்சி செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் தான் வெற்றிகரமாக வாழ்ந்ததாகவும் வரலாறு உள்ளது. ஆயுதங்களின் பரிணாம வளர்ச்சிக்கும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அது என்ன என்பதையும் ஆயுதங்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் அடுத்தடுத்த பகுதிகளில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version