இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். இந்த அண்டத்தில் உங்களால் உணர முடிந்த எந்த ஒரு பொருளுக்கும் பிறப்பு என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? உண்மையில் பிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா? அதன் உண்மையான முக்கியத்துவம்தான் என்ன? பிறப்பு இல்லாமல் இயக்கம் என்பது நடைபெறுமா? இது போன்ற மேலும் பல விஷயங்களை இந்த அதிகாரத்தில் அலசி ஆராய்ந்து உங்களுக்கு கூறப்போகிறேன். தொடங்கலாமா?
பிறப்பின் விந்தை
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அதன் பெற்றோர்கள் முட்டை அல்லது குட்டிகளாக ஈன்று எடுக்கின்றன. தங்களது குட்டிகளை அனேகமான உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாதுகாக்கவும் செய்கின்றன. இந்த உயிரினங்கள் யாவையும் குழந்தைகளை உருவாக்காமல் தங்கள் உடம்பை தாமே மேம்படுத்திக் கொள்ள முடிந்தால் இறப்பே இல்லாமல் வாழலாம் அல்லவா? ஆனால் ஏன் அப்படி நடக்கவில்லை? போதாக்குறைக்கு தங்களது முழு கவனத்தையும் குழந்தைகளின் மேல் செலுத்துவதற்கு காரணம் என்ன? மனிதர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை பேணி காக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. உதாரணத்திற்கு பட்டுச் சிலந்தி (Velvet Spider) எனும் ஒரு வகை சிலந்தி மிகவும் பிரபலமானது. தாய் சிலந்தி ஒரே நேரத்தில் பல்வேறு குட்டிகளை ஈனும் திறமை வாய்ந்தது. ஆனால் பிறக்கும் குட்டிகளுக்கு உணவை செரிக்கும் சக்தி சற்று குறைவாக இருக்கும். இதனால் தாய் என்ன செய்யும் தெரியுமா? தனது உடலின் அனைத்து பாகங்களையும் எளிதில் செரிக்கக் கூடிய ஒரு திரவமாக மாற்றி தன்னுடைய குழந்தைகளுக்கு ஊட்டிவிடும். இதன் விளைவாக சில நாட்களிலேயே அதன் உடல் வெறும் கூடாக மாறி உள்ளிருக்கும் அனைத்து உறுப்புகளையும் இழந்துவிடும். மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச உடல் கூட்டையும் சிலந்தி குட்டிகள் சாப்பிட்டு விடும். இவ்வாறு பட்டுச் சிலந்திகள் பிறக்கும் பொழுதே தன்னுடைய தாயை தின்றுவிடும். தனது உயிரை உண்மையிலேயே கொடுத்து குட்டிகளை காப்பாற்றும் தாய் சிலந்தியின் தியாகத்தை ஒப்பிடும் பொழுது மனிதனுடைய பிறப்பு என்பது சற்று அமைதியான முறைதான். இதற்காக மனிதனின் பிறப்பை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.
ஒரு பெண் தன்னுடைய சுண்டு விரலை இழந்தால் கூட மீண்டும் வளர வைக்க முடியாது. ஆனால் தன் வயிற்றுக்குள்ளேயே ஒரு முழுமையான மனித உடலைக் கொண்ட குழந்தையை வளர்க்க முடியும்! அவள் கருவுற்ற உடனேயே அவளது உடல் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடுகிறது. இதயத் துடிப்பில் இருந்து ரத்தம் உருவாகும் வரையில் அனைத்துமே வேறுபட்டுவிடும். இதிலுள்ள விந்தையான விஷயம் என்னவென்றால் அவளது மூளையில் நடக்கும் மாற்றம் தான். ஒரு தாய் கருவுற்றது முதல் குழந்தை வளரும் வரை அவளது விழிப்புணர்வு தன்மை பன்மடங்கு அதிகரித்து விடுகிறது. உடல் சோர்வடைந்தால் கூட ஒரு தாயின் மூளை சற்று கூட உறங்காமல் இருப்பதற்கு மூளையில் அதிகமாக சுரக்கும் விழிப்புணர்வு ஹார்மோன்கள் தான் காரணம். குழந்தை பிறக்கும் காலத்தில் ஒரு தாய்க்கு பல்வேறு நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு உண்டான எதிர்ப்பு சக்தி உடலில் தானாகவே உருவாகி விடுகிறது! அந்தக் குழந்தையின் தந்தைக்கு கூட தன் குழந்தை அருகில் இருக்கும் பொழுது பல்வேறு சுரப்பிகளும் வழக்கத்திற்கு அதிகமாகவே சுரந்து உணர்ச்சிகளை தூண்டிவிடும். இவ்வாறு நடக்கும் உணர்வு கிளர்ச்சியால் அந்தக் குழந்தை நன்கு பாதுகாக்கப்படும் வாய்ப்பு உருவாகிறது. ஒரு பிறப்பை சுற்றியே இவ்வளவு அதிசயங்கள் நிகழும் என்றால் பிறப்பு எவ்வளவு அதிசயமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அதன் ஆதி காரணங்களையும் விளைவுகளையும் தான் இங்கு நான் விளக்கப் போகிறேன். அதனை தொடக்கத்திலிருந்தே கூறிவிடுகிறேன்.
அண்டத்தின் பிறப்பு
இந்த அண்டம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து உருவானது என்பது உங்கள் அறிவியலின் முக்கியமான நம்பிக்கை. பெருவெடிப்பு எனும் நிகழ்வு நடப்பதற்கு முன்னால் காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது பெருவாரியான உலக அறிஞர்களின் கருத்து. காலம் என்ற ஒன்று இல்லாமல் மொத்த அண்டமும் ஒரே ஒரு தொகுதியாக இருந்தது என்று வைத்துக்கொண்டாலும், அது எதற்காக வெடித்து பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும்? இதன் விடை தான் அண்டத்தில் நடக்கும் அனைத்து விதமான பிறப்புக்கும் மூல வித்து. இதற்குப் பெயர்தான் “மாற்றம்”. மாற்றம் எவ்வாறு பிறப்பாக உருவெடுக்கிறது என்பதனை விளக்கமாக அடுத்த பகுதியில் கூறுகிறேன். அது வரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.