மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 4

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

என் நீண்ட இசைக்குப்பின்
நிலவிய மெளனத்தை
உணரும்போது புரிந்தது
ஓர் அழகான பேரிசையை
நான் இடையூறு செய்தது

———————————————————

பல்லியின் வாலைப்போல்
வேண்டிய இடத்தில்
துண்டித்து, பின்
வளரும் தன்மைகொண்டது
என் இதயம்

————————————————————

என் வீட்டை
நான் திறந்தேதான் வைத்திருப்பேன்
யாரையும் திருடனாக்கும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை

————————————————————

கனவிலிருந்து விழித்தேன்
அங்கே ஓர்
பிரம்மாண்டமான கனவு

————————————————————

உள்ளங்கையில் ஓர் துளியை
மறைத்துவைத்து
அமர்ந்திருந்தேன்…
என் கால்களை
நனைத்துச் சென்ற
அலைகளை அறியாமல்…

Exit mobile version