மின்கிறுக்கல்

ஊழ் (20)

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

“பாவிப்பயலுக இப்படி அடிச்சுக் கொண்டு வந்து ஆஸ்ப்பத்திரில போட்டானுக. அவென் அந்த புள்ளை கூட சேர்ந்து வாழனும்ன்னு தானே சொன்னான்.” மீண்டும் மூக்கை உறிஞ்சினாள் அமுதனின் அம்மா. முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு அதே முந்தானையில் பலமாக மூக்கைச் சிந்தினாள்.

“இம்புட்டு பேர் போயிருக்காய்ங்க அவன சாக்கரதையா பாத்திருக்க வேணாமா? சரி நான்தான் கொஞ்சம் கோவமா இருந்துட்டேன். நீயாச்சும் ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா? நல்லா இருந்த பயல இப்புடி ஒச்சமாக்கி கொண்டாந்து போட்ருக்கீங்களே…” இது அமுதனின் தாய்மாமா. அவருக்கு எப்போதும் அவன் மீது தனிப் பாசம் உண்டு. சிறு வயதில் இருந்து அவனைத் தூக்கி வளத்தவர். தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கோபத்தை மறந்து இப்போது அமுதனைப் பார்க்க வந்திருக்கிறார்.

“மூணு நாளா பிள்ளை கண்ணு முழிக்காம கிடக்கு. அந்தக் கருப்பன்தான் கண்ணத் தொறக்கனும். கருப்பா ஏன்பா எங்களை இப்படி சோதிக்கிற. உனக்கு நான் என்ன கொறை வச்சேன்.” மீண்டும் மூக்கை சிந்தினாள் அமுதனின் அம்மா.

அவனுக்கு அம்மா என்று அழைக்கவேண்டும் போல் இருந்தது. தலையை மெதுவாகத் திருப்பினான். “ஏய் அமுதா… கண்ணு முழிச்சுட்டான் பாரு.” என்று அவன் மாமா எழுந்து அவன் அருகில் வந்தார். அவன் கண்களில் நீர் பெருகி ஓரத்தில் வழிந்தது. அவன் அம்மா முந்தானையால் அதைத் துடைத்தாள். “அழுவாதையா எல்லாம் சரியாப் போயிரும்” இவ்வளவு நேரம் அண்ணனின் ஆறுதல் கேட்டுக்கொண்டிருந்தவள். இப்போது தன் மகனுக்கு ஆறுதல் கூறினாள்.

மேலும் இரண்டு வாரங்கள் அந்த மருத்துவமனையிலேயே கழிந்தன. தொடர்ச்சியாக அவர்கள் சொந்தங்களில் யாராவது வந்து பார்ப்பதும் ஆறுதல் கூறுவதுமாக இருந்தார்கள். அம்மா இல்லாதபோது சீனு மாமாவோ அக்காவோ உடனிருந்தார்கள். வழக்கறிஞர் பரமசிவம் இரண்டுமுறை வந்து பார்த்தார். அமுதனை அடித்த குற்றவாளிகள் எல்லாம் சரணடைந்து விட்டதாகக் கூறினார். எம்.எல்.ஏ சபாபதி வந்த போது அவருடன் அவருடைய மனைவியும் வந்திருந்தார். உடம்பைப் பார்த்துக்கொள்ளும்படி ஆறுதல் கூறிவிட்டு மருத்துவர்களை அழைத்து நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் கூறிச் சென்றார்.

“இப்போதைக்கு நடக்க முடியாது. அடுத்த வாரம் வாங்க தலைல தையல் பிரிச்சிறலாம். எல்லா மருந்தையும் வாங்கிக்கங்க. காயத்துக்கெல்லாம் காலைல, நைட்டு தூங்க முன்னாடி மருந்து தடவுங்க அப்போத்தான் வேகமா ஆறும். நேரம் நேரம் மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுங்க.”

மருத்துவமனையைக் காலி செய்தார்கள். அமுதன் தள்ளுவண்டியில் ஏறிக்கொண்டான் சீனு மாமா பின்னால் இருந்து தள்ளிக்கொண்டு வந்தார். அவன் இரண்டு கால்களும் இரண்டு பெரிய கட்டுகளில் வெள்ளைமரம் போலக் கிடந்தன. கைகளிலும் கன்னத்திலும் வயிறு மார்பிலும் சிராய்ப்பு காயங்கள். பின்மண்டையில் பெரிய பஞ்சு வைத்து தலையைச் சுற்றி ஒரு கட்டு. காரின் முன் ஓட்டுனருக்கு அருகில் இருந்த இருக்கையை முழுவதும் பின்னால் தள்ளிவிட்டு அதில் அவனை அமர வைத்தார்கள். அமுதனைக் காருக்குள் ஏற்றுவதே அவர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. அவனுக்கும்தான். காயம் இல்லாத இடங்களில் எல்லாம் கூட வலிப்பதாகக் கூறினான்.

அடுத்தடுத்த நாட்களில் கோழி சூப்பும், ஆட்டுக்கறியும், ஈரலும், சுவரொட்டியும் அவன் தொப்பை கொள்ளாத அளவு உள்ளே சென்று கொண்டே இருந்தன. ஒரு மாதம் ஓடியது தலையின் தையல் பிரிக்கப்பட்டு சிறிய கட்டாக மாறியது. சிராய்ப்பு புண்களும் நன்றாக ஆறியிருந்தன. ஒரு கால் ஓரளவு தேறியிருந்தது இன்னொரு காலுக்கு இன்னும் நாள் தேவையாக இருந்தது. மெல்ல மெல்ல ஒற்றைக் காலை ஊன்றி நடக்கக் கற்றுகொண்டிருந்தான். சபாபதி வீட்டில் இருந்து தகவல் ஒன்று வந்தது. அவன் அப்பா, சீனு மாமாவுடன் இப்போது அவன் தாய்மாமாவும் சபாபதி வீட்டிற்குச் சென்று வந்தனர்.

அவன் அப்பா அவரின் சாய்வு இருக்கையில் அமர்ந்து பின்னந்தலைக்கு மேல் கைகளைக் கட்டிக்கொண்டு “சபாபதியும் அவர் சம்சாரமும் அந்தப் பொண்ணுக்கு எவளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தாங்களாம். அமுதனை அடிச்ச கேஸ்லகூட உங்க அண்ணன் பேரை அவக சொல்லல. இன்னுமும் உறவு வேணும்ன்னு தான் நினைக்கிறாங்கன்னு எம்புட்டோ எடுத்து சொன்னாகளாம். ஆனால் அந்தப் புள்ளை புடிகுடுக்கவே இல்லையாம்.” என்ன செய்றதுன்னு என்கிட்ட கேக்குறாக.

சீனு மாமா “இப்படி பிடிவாதமா இருக்க பிள்ளைய நாம என்னதான் செய்றது” என்று குனிந்துகொண்டே கைகளைப் பிசைந்தார்.

அவன் தாய்மாமா எதுவும் பேசவில்லை.

“சரியான இவளா இருப்பா போல” என்று அமுதனின் அக்கா தொடங்கினாள். அமுதன் வேகமாக குறுக்கிட்டு “போதுமப்பா… இதுக்கு மேலயும் போராட முடியாது. தீர்த்து விட்ருங்கப்பா” என்று வேகமாகக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டான்.

அந்த அமைதி அந்த அறைக்குள் அடுத்த ஐந்தாறு நிமிடங்களுக்கு நீடித்தது. “இல்ல மாப்ள உனக்காகத்தான் பார்த்தோம்” என தொடங்கிய சீனுமாமாவின் பேச்சை வெட்டி உள்ளே புகுந்தான். “வேண்டாம் மாமா. ப்ளீஸ்… எனக்காக பண்ணினது எல்லாம் போதும். தீர்த்து விட்ருங்க. நான் மறுபடி சிங்கப்பூருக்கே போயிடுறேன். நேத்துதான் என்னோட பாஸ்கிட்ட பேசினேன். இன்னும் ரெண்டு மாசம்வரை என்னோட வேலைக்கு யாரையும் எடுக்கலன்னு சொன்னாரு. அதுக்குள்ள வந்துட்டா நல்லதுன்னு சொன்னாரு. நான் மறுபடி அங்கேயே போறேன். நான் இங்க இருக்க இருக்க எல்லாருக்கும் கஷ்டம் தான்.” வாடியிருந்த அவன் முகத்தை வேறுபக்கம் திருப்பினான்.

“நீ இருக்கதால எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. சும்மா மனச போட்டு குழப்பிக்காத” கூறிவிட்டு அவன் அக்கா அருகில் வந்து அவன் தலையைத் தடவினாள்.

அவன் எதுவும் பேசவில்லை தலையை கவிழ்ந்துகொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் அப்பா ஒரு முடிவெடுத்தவராக. சீனு மாமாவைப் பார்த்து “அப்போ நீங்க பரமசிவத்திட்ட பேசி பத்தரம் எல்லாம் ரெடி பண்ணச் சொல்லுங்க. அவக வக்கீலுக்கும் சொல்லச் சொல்லிருங்க. சபாபதி வீட்லையோ இல்லை அவர் ஆபீஸ்லையோ வச்சு முடிச்சிரலாம். அவக என்னென்ன நகைநட்டு சீர் செஞ்சாகன்னு கணக்கெடுங்க. அதே மாதிரி நம்ம செஞ்சது எல்லாம் எழுதி அவக வீட்டுக்கு குடுத்து விட்ருங்க. வக்கீல எழுதறப்போ நல்லா தெளிவா எழுதச் சொல்லுங்க. நாளை பின்ன அவனுக நம்மகிட்ட எதுவும் பிரச்சனைன்னு வந்துரக்கூடாது. இன்னும் ஆறுமாசம் கழிச்சு கோர்ட்ல மொறைப்படி டைவஸ் வாங்கிடலாம். அமுதன் சிங்கப்பூருக்கு திரும்பப் போறதுன்னா போகட்டும்.” என்றார்.

அதன்பின் அங்கு யாரும் பேசவில்லை. அமுதன் மெதுவாக அவன் கைத்தடியை ஊன்றி எழுந்து மெல்லமெல்ல அவன் அறையை நோக்கி நடந்து சென்றான்.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 21

Exit mobile version