மின்கிறுக்கல்

ஊழ் (18)

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

காவல் நிலையத்தில் சந்திக்க முடியாத தன் மனைவியை பஞ்சாயத்து நடக்கும் இடத்திலாவது சந்தித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வந்துகொண்டிருந்தான் அமுதன். சபாபதியின் தோப்பை நெருங்கிக்கொண்டிருந்தார்கல். நாலைந்து லாரிகள் அவர்கள் கட்சிக் கொடியோடு நின்றுகொண்டிருந்தன.

“பாத்தியா ஒரு பஞ்சாயத்துக்கு எம்புட்டு பேரை கூட்டிட்டு வந்திருக்கான்னு. இந்த ராஜாசெகரு பொல்லா பயயா. பூராம் அவம்புட்டு லாரி தான் நிக்குது.” என்றார் மச்சக்காளை பின் சீட்டில் அமர்ந்துகொண்டு.

யாரும் பதிலளிக்காமல் இருக்க அவரே தொடர்ந்தார். “இந்த வக்கீல் பயகளையும் நம்பக்கூடாதுயா. காச வாங்கிட்டு என்ன வேணும்னாலும் செய்வானுக.” இப்போது அவர்கள் சென்றுகொண்டிருக்கும் வண்டி வழக்கறிஞர் பரமசிவத்தின் வாகனத்தை தாண்டிக் கொண்டிருந்தது. “தம்பி எங்களை விட்டுட்டு எங்கயும் போயிற கூடாது. அவிங்க பிரச்சனை பண்ணனும்ன்னே வந்துருப்பாய்ங்க சூதானமா இருக்கணும்.” அவரே இப்போது அமுதனுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்தார்.

மாந்தோப்பின் மத்தியில் மோட்டார் அறை இருந்தது. அதற்கு முன்னே பஞ்சாயத்துக் கூடியிருந்தது. நடுவில் சபாபதி அமர்ந்திருந்தார். உருவத்தில் ஓரளவு பரமசிவத்தை ஒத்திருந்தாலும் அவரைவிடக் கறுப்பாக இருந்தார். திறந்துவிடப்பட்டிருந்த அவரின் சட்டைப் பொத்தான்களுக்கு மத்தியில் இருபது பவுன் மதிக்கத்தக்க தங்கச்சங்கிலி மின்னிக்கொண்டிருந்தது. அவர் ஒவ்வொரு முறை கையை ஆட்டிஆட்டி பேசும்போதும் தங்க கைக்கடிகாரமும் பட்டை பட்டையாக மோதிரங்களும் கண்களைக் கூசச்செய்தன.

அவருக்கு வலப்புறம் பரமசிவமும். இடப்புறம் ஸ்டீவனும் அமர்ந்திருந்தார்கள். ஸ்டீவன் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத் தக்கவர். கறுத்தவர் ஆனாலும் சபாபதியின் கறுப்பு இல்லை. பெருத்த உருவம் கொண்ட பரமசிவம் மற்றும் சபாபதிக்கு அருகில் பிள்ளையார் கோவில் பூசாரிபோல ஸ்டீவன் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் மதுவின் அப்பா மற்றும் அவர்கள் உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள். இரண்டு பக்கமும் ஒரே ஒரு வரிசை மட்டுமே நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அவர்கள் பின்னால் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். மதுவின் அப்பாவிற்குப்பின் ராஜசேகர் நின்றுகொண்டு அமுதனை முறைத்துக்கொண்டிருந்தான். கூட்டத்திற்கு மத்தியில் ஏதோ சலசலப்பு தெரிந்தது.

“குடிகாரப் பயலுக….” என்று அமுதனின் காதுக்குள் ஓதினார் மச்சக்காளை. அவருக்கு உட்கார வழிகாட்டிவிட்டு அவன் பின்னால்போய் நின்று கொண்டான்.

அப்போது தான் பேச்சைத் தொடங்குவதுபோல் பேச்சைத் தொடங்கினார் பரமசிவம் “வாழ வேண்டிய பிள்ளைக. பையனும் நல்ல பையன். பார்த்து பேசி முடிச்சுவிட்டோம்ன்னா அதுக வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார்.

ராஜசேகர் உள்ளே புகுந்து “ஆமாங்கயா முடிச்சு விட்ருங்க. அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அத்துவிட்ருங்க. எங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றான்.

“ராஜசேகரு நீ கொஞ்சம் சும்மா இருப்பா. என்று சபாபதி அவனை அடக்கினார்”

பரமசிவம் தொடர்ந்தார் “ஐயா கல்யாணம் ஆகி நாலுமாசம் தான் ஆவுது. சின்னஞ்சிறுசுக அப்படித்தான் இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது தப்புத்தண்டா பன்னிருக்குங்க. அப்பறம் அது தெரிஞ்சு பிரச்சனை எல்லாம் வரத்தான் செய்யும் நம்மதான் அதுகளுக்கு புத்திமதி சொல்லி வாழவைக்கிற வழியப் பார்க்கணும்.” என்றார்.

அவர்கள் சார்பாக ஸ்டீவன் தொடங்கினார் “ஐயா வேற விஷயம்ன்னா பரவாயில்லை. அந்தப் பையனுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கு. மாசம் மாசம் இவரு பணம் அனுப்பிருக்காரு. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு எப்படி அந்தப் பொண்ணு இவருகூட இருக்க முடியும்? நானும் பேசிப்பார்த்தேன். முடியவே முடியாதுன்னு சொல்லுது.”

சீனு மாமா குறுக்கிட்டு “அந்தப் பிலிப்பைன்ஸ் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் பழக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் குழந்தை இருக்கு அது இதுங்கறது எல்லாம் பொய். அந்த பொண்ணுக்கு ஏற்கனவே பத்து வயசுல பையன் இருக்கானாம். அது ஏதோ பணம் பறிக்கிற கும்பல் போல. அதெல்லாம் தெரிஞ்சு அந்தப் பொண்ண விட்டு மாப்ள விலகியே நாலு வருசத்துக்கு மேல ஆகிருச்சாம். இவருக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு பிளாக்மைல் பண்ணி காசு புடுங்கத்தான் அவ மறுபடி வந்து பேசிருக்கா. அதை தப்பா புரிஞ்சுக்கிட்டுதான் இந்தப் பொண்ணு சிங்கப்பூர்ல இருந்து கிளம்பி வந்திருச்சு.” என்றார்.

“ஆமா இவரு மாப்ள உலக உத்தமரு இவரு வக்காலத்து வாங்க வந்துட்டாரு. இதோ அவன் லட்சணத்தை நீங்களே பாருங்க.” என்று ஆக்ரோஷமாக புகைப்படங்களை அவர்கள் முன் வீசி எறிந்தான் ராஜசேகர். அது அத்தனையும் அமுதன் ஆண்ட்ரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். “பாருங்க… நல்லா பாருங்க… இந்த உத்தமனோட லட்சணத்தை. இதெல்லாம் பார்த்துட்டு எந்த பொண்ணுயா இவன் கூட சேர்ந்து வாழும்.”

சபாபதி வேகமாக தன் இருக்கையில் இருந்து எழுந்தார். தன் மோதிரக்கையை அவன் முன் நீட்டி “டேய் இப்போ நீ சும்மா இருக்கியா என்ன? அப்பறம் எனக்கென்னடா இங்க மரியாதை.” என்று கத்தினார். ராஜசேகரை அவன் உறவினர்கள் நாலுபேர் பின்னால் இழுத்துச் சென்றனர்.

அமுதனின் படங்கள் அங்கே அலங்கோலமாகச் சிதறிக் கிடந்தன. அவமான உணர்ச்சியில் அவன் தலை தொங்கி விழுந்தது.

‘எத்தனைமுறை மீண்டும் மீண்டும் இந்தப் படங்களை அவன் பிரதி எடுத்து பரப்பிக்கொண்டே இருக்கிறான். அவன் ஏன் இப்படிச் செய்கிறான்? என்னை அவமானப் படுத்துவதில் அவனுக்கு என்ன லாபம்? அவன் தங்கையை என்னிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறானா? அவளை அப்படி என்ன நான் கொடுமை செய்தேன்? அவளுக்குத் தெரிந்து தான் இவன் இதெல்லாம் செய்கிறானா? அவள்தான் இப்படி செய்யச் சொன்னாளா?’ அமுதனின் மனம் துடித்தது.

கீழே சிதறிக் கிடக்கும் படங்களைப் பொறுக்ககூட யாரும் முன் வரவில்லை. ராஜசேகரன் கூட்டத்தின் பின்புறம் சென்ற பின்னும் கத்திக்கொண்டே இருந்தான். அமுதனால் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கீழே கிடக்கும் ஒவ்வொரு படமும் அவனைத் துயிலுரிந்துகொண்டிருந்தது. அவனுக்கு அந்த இடத்தில் நிற்பதே பெரும் அவமானமாக இருந்தது.

‘இங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும் இப்படி செல்லுமிடமெல்லாம் அசிங்கப்பட்டுக்கொண்டே இருப்பதற்கு எங்காவது கண்காணாமல் ஓடிவிடலாம்.’  யார் முகத்தையும் பார்க்கும் துணிச்சல் இல்லாமல் தரையில் சிதறிக்கிடந்த புகைப்படங்களுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டு உள்ளே இதயத்தை கண்ணீரால் நனைத்துக்கொண்டிருந்தான் அமுதன்.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 19

Exit mobile version