மின்கிறுக்கல்

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 23

நம் பாடும்நிலா முரண்களுக்கு உயிரூட்டப்போகிறார் என்று சொன்னேன் அல்லவா? வாருங்கள் அதை முதலில் பார்க்கலாம்.

எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று வியந்து உருகினான் பாரதி. ஆம் அத்துணை இன்பமான உலகம் என்பது பல்வேறு முரண்களையும் கொண்டதுதான். முரண்பாடுகளுடன் உடன்படுவதும் உடன்பாடுகளுடன் முரண்படுவதும் பலநேரங்களில் வியக்கத்தக்க அளவில் நன்மைகளை வாரிவழங்கிவிடும். பலநேரங்களில் முரண்பாடுகள்தாம் நம்மை அளவுக்கு மிஞ்சி ஆடிவிடாமல் சமநிலைப்படுத்துகின்றன என்றுகூட சொல்லலாம்.

எங்கும் முரண்பாடுகள் விரவியிருந்தாலும் இந்தக்காதலில் மட்டுமே எப்போதுமே கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அதுவும் ஒருதலைக்காதல் என்றால் வேறு வினையே வேண்டாம்.. முரண்பாடுகள்  முத்துக்குளித்தல் நடத்துமிடம் அது.

இது காதலனொருவன் பாடும் ஒருவகையான இயலாமைப் புலம்பல்.. அதற்கு உயிரூட்டிச் சோகத்தில் சொற்களை முக்கியெடுத்துத் தூவுவதுபோல நம் எஸ்.பி.பி பாடுகிறார்.

*****நடைமறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

      வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன் ******

சொற்களில் சோகம் குழைந்து இருப்பதால் இசையும் அதற்கேற்றவாறு மெதுவேகத்தில் தான் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.  அதிலும் அந்த இரண்டாவது வரியில் வரும்  “இழுக்கிறேன்” என்பதை நம் பாடும் நிலா பாடும்விதத்தைக் கேளுங்கள். தேரின் வடத்தை இழுக்கும்போது நாம் வெளிப்படுத்துகின்ற அதே விசையை அவர் தமது குரலிலும் வெளிப்படுத்தி  அழுத்தமாகவே அச்சொல்லை இழுத்திருப்பார். அதே வரியில் வருகின்ற “ தேரதுவொன்றை”  என்ற சொல்லைத் திரும்ப திரும்பக் கேட்கத்தூண்டியது அவர் பாடியவிதம்.. எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் அதைப் பலுக்கியிருக்கிறார்!!!!

***** உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்*****

என்ற வரியுடன் முதல் சரணம் முடிகிறது. நிறைவுறாப்பின்னம் / முடிவுறாப்பின்னம் என்று கணிதப்பாடத்தில் படித்திருப்போம். கேள்வியுறாத, தெளிவுறாத என்ற சொற்களையும் ஆங்காங்கே படித்திருப்போம். இந்தப்பாட்டில்தான் நான் முதன்முதலில் உறவுறாத என்ற சொல்லைக் கேள்வியுற்றேன். கவிஞரை எண்ணி வியந்த நான் எனது தமிழ் அறியாமையை எண்ணிக் குன்றித்தான் போனேன். இன்னும் நிறைய ஆழ்ந்து அறிந்து நம் தமிழில் தெளிந்திடவேண்டும் என்ற வேட்கையை அந்த ஒற்றைச்சொல் எனக்குள் விதைத்தது.

மனத்தின் ஆதங்கத்தை உச்சத்தில் தொடங்கி அப்படியே இறக்கிவிடுதல்போல அவ்வரியை நம் எஸ்.பி.பி பாடியிருப்பார். மேலிருந்து கீழிறங்கும் அந்தப்பண்ணின் அலகு.. அதாவது மனக்குமுறல்கூட தொடக்கத்தில் கூச்சலிட்டுப்பின் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி இறுதியில் அமைதியாகிவிடும்.. அதை வெளிப்படுத்துவதுபோலவே அவ்வரியையும் பாடியிருப்பார்.

***** வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்  பார்க்கிறேன்

விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்*****

இது இரண்டாவது சரணம். முதல் சரணத்தைப்போலவே தான் இதையும் தொடங்கிப்பாடுகிறார்.. இதிலும் இறுதிவரியில்தான் நம் நெஞ்சைப் பிசைந்து விடுகிறது அவர் குரல். விருப்பமில்லாப் பெண்ணைக் கட்டாயப்படுத்தவும் தோன்றாமல், அப்பெண்ணின் விருப்பத்தைப் பெறும் வழியையும் அறியாமல் தன்னைத்தானே நொந்துகொள்கின்ற ஒருவனுக்கு இயல்பாக இவ்வுலகின்மேல் ஒரு வெறுப்பு வரும்.. அந்தக் கையறுநிலையினைத் தன் குரலில் புகுத்தி நம் செவியில் பாய்ச்சசுகிறார் நம் பாடும்நிலா.

இப்பாட்டினில் மூன்று சரணங்கள் வருகின்றன.

*****உளமறிந்த பின் தானோ அவளை நான் நினைத்தது

உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒரு தலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது ?****

அழுதுகொண்டே சோகத்தை வெளிப்படுத்துவதைக்காட்டிலும் புன்னகையுடன் சோகத்தை வெளிப்படுத்தும்போதுதான் அது பார்ப்பவர் நெஞ்சைச் சல்லிசல்லியாய் நொறுக்கிவிடுகிறது. புன்னகை பூசிய சோகமானது எதிரே இருப்பவரின் கண்களில் கண்ணீரை எளிதாகப் பெருக்கிவிடுகிறது. குரலில் கொஞ்சமும் அழுகையோ தேம்புதலோ இல்லை, ஏக்கப்பெருமூச்சு இல்லை, குரல் கமறவில்லை , சொற்கள் திக்கித் தடுமாறவில்லை.. ஒரே சீராக மேலிருந்து கீழிறங்கும் குரலில் நம் எஸ்.பி.பி ” உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது … ஒரு தலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது ? ” என்று பாடும்போது அவ்வரிகளில் வெளியாகும் சோகம் பனங்கருக்குபோல வந்து நம் நெஞ்சை அறுக்கிறது…  

இப்போது நாம் பல்லவிக்கு வருவோம்.. பல்லவியைப் பாடும்போது அதில் சோகத்தின் அடர்வு குறைவாகத் தோன்றுமாறே நம் எஸ்.பி.பி பாடியிருப்பார். சரணங்களை ஒப்பிடும்போது பல்லவியில் அவர் தமது குரலில் வெளிப்படுத்தும் சோகத்தின் அளவு குறைவுதான்..

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம் ….

இதோ இப்பாட்டின் இறுதிவரியானது, பாட்டு நதியொன்று எம் பாடும்நிலா என்ற ஓடம் இல்லாது ஏங்கிநிற்பதைப்போலவே எனக்குத் தோன்றுகிறது.

இப்பாடலில் நம் பாடும் நிலா பெரிதாய்க் குரல் மாற்றங்கள் எதுவம் செய்திருக்க மாட்டார்.. ஆனாலும் அத்துணை பெரிய சோகத்தை நம் மனத்திற்குள் இறக்கிவைத்துவிடும் அவரின் குரல்.

சோகப்பாட்டே நம் பதிவில் எழுதக்கூடாது என்றிருந்தேன்.. ஒருதலைக்காதலின் தாராகமந்திரமே ” சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்” என்பதுதானே.. ஆதலால்தான் இப்பாட்டைத் தவிர்க்க விரும்பாமல் எழுதிவிட்டேன்..

ஒரு தலை இராகம் என்ற படத்தில் அமைந்த பாடல்தான் இது… ஆகச்சிறந்த புதுவிதமான சிந்தனைகளைக் கோத்தெடுத்துப் பாடலாக்கிய இப்பாடலின் பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தின் இயக்குநர் என அனைத்தையும் ஒருவராகவே சிறப்புறச்செய்த அந்தப் பன்முகத்திறனாளர் யாரென்றால், அனைவராலும் டி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற தேசிங்கு இராஜேந்தர் தான்..!

அவரின் அழகுத்தமிழ் நம் எஸ்.பி.பியின் செந்நாவில் எப்படியெல்லாம் நடமாடியிருக்கிறது என்பதைத் தொடர்ந்து சில கிழமைகள் பார்க்கப்போகிறோம்.

ஒருதலைக்காதலில் மென்சோகத்தை மென்முறுவலுடன் பாடிய நம் எஸ்.பி.பி அடுத்து என்ன செய்யப்போகிறார்? முழுநிலவொளியினில் பைங்கிளிக்கு முத்தம் கொடுக்கலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் ஆயிற்று? என்று வரும் செவ்வாயன்று காணலாம்.

தேசிங்குராசாவின் ஆட்சியில் நிலாவின் உலா தொடரும்!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

Exit mobile version