என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார் எஸ்.பி.பி என்று சொன்னேன் அல்லவா? என்ன சொல்கிறார் என்று கூர்ந்து கேட்கலாம் வாருங்கள்.
அழகு என்ற சொல்லைப் பிடிக்காதவர் இங்கு யாரேனும் உண்டா? இல்லவே இல்லை. ஆறாமறிவு கொண்ட மனிதனால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று இந்த அழகு. உருவத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல சொல்லில் செயலில் என அனைத்திலுமே அழகுணர்வைப் புகுத்துபவன் மனிதன். சட்டென்று ஒரு மின்னலைப்போல் நம் கவனத்தை ஈர்க்கும் தன்மை அழகுக்கு உண்டு.
அழகு என்பது பொதுவான ஒன்றுதான்.. அதற்கான அளவுகோல்தான் காண்பவரிடையே மாறுபடுகிறது. இயற்கை கொடுத்த எல்லாமே அழகுதான். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்தான்.. ஆனால் அது பலநேரங்களில் நடப்பதில்லை.
தூய்மையும் புன்னகையும் இயற்கையான அழகூட்டிகள். அதை எப்போதுமே அணிந்திருந்தால் நம் அழகுக்கு நிகர் நாம் மட்டுமே. என்னதான் அழகென்பது இயற்கையான ஒன்று என்றிருந்தாலும் இந்தக் கவிஞர்கள் கையில் , எழுதுகோல் மையில் நுழைந்து வெளிவரும்போது அவ்வழகானது பல பரிமாணங்களில் மிளிர்ந்து ஒளிர்கிறது. அழகுக்கே அழகு சேர்ப்பதுதானே கவிஞனின் இயல்பு. அதிலும் காதலியின் அழகை எழுதுவதற்காக மட்டும் கவிஞர்களுக்குத் தனிமையும் தனி மையும் தனிச்சிறப்புடன் உருவாக்கிக் கொடுத்திருப்பாரோ கடவுள்? அப்படியொரு தனிச்சிறப்பான மையைக்கொண்டு எழுதப்பட்ட ஓர் அழகான பாடல்தான் இது..!
தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக் கருங்கூந்தலோ
முத்தாடும் மேடை பார்த்து வாடிப்போகும் வான்பிறை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை –
தெம்மாங்கு , பொன்னூஞ்சல் என்ற சொற்களை மட்டும் கூர்ந்து கவனித்தால் மா, னூ என்ற ஒலிப்பைமட்டும் சற்று நீட்டி இழுத்துப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. செய்யுளில் இதைத்தான் அளபெடை என்கிறோம். அம்மாதிரியான அளபெடை வருமிடங்களிலெல்லாம் நீட்டியிழுத்துப் பாடும்போது கொஞ்சமும் பிசிறில்லாமல் பாடினால்தான் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கும்.. அந்த இழுத்தலில் ஒரு நெகிழ்வு இருக்கவேண்டும்… 2010 ஆம் ஆண்டுக்கு முன் ஏறத்தாழ ஒரு 50 – 60 ஆண்டுகள் அவ்வாறான பாடல்களே அமைந்தன. அதனால்தான் அக்காலம் இசையின் பொற்காலம் என்று இன்றுவரை நம்மால் போற்றிக் கொண்டாடப்படுகிறது.
முத்தாடும் மேடை பார்த்து வாடிப்போகும் வான்பிறை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை – இவ்விரு வரிகளையும் பற்றிச் சொல்லாவிடில் தமிழே என் தலையில் நறுக்கென்று கொட்டிவிடும். என்னவொரு கற்பனை! என்னவொரு உவமை! வாடிப்போகும் வான்பிறை, ஏக்கம் தேக்கும் தாமரை – இந்த சொற்களுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு வெளியில் வர மறுக்கிறது மனம். கவிஞர்க்கு உளமார்ந்த வணக்கத்தை உரித்தாக்குகிறேன். எஸ்.பி.பியும் ஆர்.வி.உதயகுமாரும் மட்டும்தான் இப்பாடலால் உங்கள் மனத்தைக் கட்டியிழுப்பார்களா? நானும் வருகிறேன் என்று போட்டிபோடுகிறார் பிரபு.
முத்தாரம் ஆடும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை என்ற வரியைப்பாடும்போது பிரபுவின் முகபாவனைகளைக் காண மறவாதீர் மக்களே. அத்தனை அழகு !
வல்லின றகரத்தையும் மெல்லின ரகரத்தையும் எப்படி வேறுபடுத்திப் பலுக்கவேண்டும் என்பதை அறிய வான்பிறை, தாமரை என்ற சொற்களை எஸ்.பி.பி. எவ்வாறு சொல்கிறார் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள் – என்ற வரியில் தாங்காமல் என்ற சொல்லைக் காற்றில் பொதிந்து அனுப்புவதுபோல அத்துணை மென்மையாய்ப் பாடிவிட்டு அதன் பின்னர் நாணுவாள் என்று பாடும்போது அச்சொல்லைச் சிரிப்பில் பொதிந்து அனுப்புவார் எஸ்.பி.பி. வரிகளுக்கிடையே சிரிப்பதைக்கூட நிறைய பாடகர்கள் செய்திருக்கலாம்.. ஆனால் சொற்களுக்கு நடுவே, சொல்லோடு கலந்து என சிரிப்பது நம் எஸ்.பி.பிக்கு மட்டுமே கைவந்த, இல்லை வாய்வந்த கலை.
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் –
என்று இரண்டாம் சரணத்தில் ஒரு சிறு இசைப்பண்ணோடு நுழையும் எஸ்.பி.பி முந்தானைச் சோலையில் என்று பாடும்போதெல்லாம் அழகென்னும் மயக்கத்தில் ஆழத்தொடங்குகிறார். அதே மயக்கத்தை அவர் குரல்வழி நம் செவியில் பாய்ச்சுகிறார்.
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் –
இந்த வரிகளை எஸ்.பி.பி தன் பாடலழகியைப் பார்த்துப் பாடுவதுபோல பாடுகிறார். இம்மாதிரியான வரிகள் இயல்பாகவே நம் எஸ்.பி.பி பாடிய பல பாடல்களில் அமைந்திருக்கின்றன. அவர்க்காக அவரே பாடியது போன்ற வரிகள் அமைந்தது எல்லாம் வரமன்றி வேறென்ன!
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பனையினின்று பெறப்படும் பதநீர் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. காலைப்பதநீர் மாலைப்பதநீர் என்று இரு நேரத்திலும் இறக்கப்படும் பதநீரின் சுவை வெவ்வேறாக இருக்கும். மண்கலயத்தில் உள்ளே சுண்ணாம்பு தடவி பாளையில் கட்டிவிட்டால் அது பதநீர். சுண்ணாம்பு தடவாமல் இறக்குவதுதான் கள். இப்போது எதற்கு இதெல்லாம் சொல்கிறேன் என்று எண்ணுகிறீர்களா? பொறுங்கள்..புரியும்.
காலையிலேயே இறக்கிய பதநீரைப் பனையோலைப் பட்டையில் ஊற்றி அதனுடன் நுங்கும் கலந்து குடித்தால் உதட்டிலிருந்து உதரவிதானம் வரைக்கும் இனிக்கும். இரண்டு மூன்று பட்டை குடித்துவிட்டால் காலையுணவையே வயிறு கேட்காது. அச்சுவை வாயிலேயே இருக்கும். குவளையில் குடிப்பதென்றால் நுங்கைவிடவும் பொடிப்பொடியாக அரிந்தெடுத்த சிறு புளிப்புள்ள மாங்காய்த்துண்டுகள்தான் சரியான இணை. பதநீரின் இனிப்பும் மாங்காயின் புளிப்பும் சேர்ந்து நம்மை வானுலகத்திற்கு அழைத்துச்சென்று அங்கிருக்கும் தேவரிடம் ” உங்கள் அமிழ்தம் எல்லாம் எங்கள் பதநீரிடம் கைகட்டி நிற்க வேண்டும்” என்று சொல்ல வைத்துவிடும். கொஞ்சம் கூடுதலாகக் குடித்துவிட்டால் கொஞ்சம் கிறுகிறுப்பாகவே இருக்கும்.
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எஸ்.பி.பி இந்தப்பாடலைப் பாடத்தொடங்கும்போது பதநீர் குடித்த ஆளைப்போலத்தான் இனிப்புடன் பாடத்தொடங்கி இரண்டாவது சரணம் பாடும்போதெல்லாம் கிறுகிறுப்பு நிலைக்கு வந்துவிடுகிறார். இரண்டாம் சரணம் முடிந்து பல்லவியைப் பாடும்போதெல்லாம் … வாய்ப்பேயில்லை.. அவரும் கிறுகிறுப்புடன் பாடி நம்மையும் கிறுகிறுக்க வைத்துவிடுகிறார் நம் எஸ்.பி.பி.
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா – என்று கிறக்கத்தின் உச்சத்தில் நின்று பல்லவியைப் பாடும்போது நாமெல்லாம் மயங்கியே விடுகிறோம். எத்தனை அழகான வரிகள்.! எத்துணை மேலான இசை ! இந்த இரண்டையும் சரியாய் நம்மிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் தேவதூதனாக நம் எஸ்.பி.பி.!
இராஜகுமாரன் திரைப்படத்தில் வரும் இப்பாடலில் பிரபு நதியா மீனா மூவரும் நடித்திருப்பர். ஏற்றிவைத்த குத்துவிளக்கு போல நதியா , நதியாவின்மேல் காதல்கொண்டு மயங்கிக் கிறங்கி நதியாவைப்பற்றி பிரபு மீனாவிடம் சொல்வதுபோன்று எடுக்கப்பட்ட பாடல்.. காதலிப்போர் யாவரும் இப்பாட்டைக் கேட்பார்கள் என்பதைவிடவும் இப்பாட்டைக் கேட்போர் யாவரும் இப்பாட்டைக் காதலிக்கத் தொடங்கிவிடுவார் என்று சொல்வதே பொருத்தம்.
இப்பதிவைப் படித்துவிட்டு நீங்களும் இப்பாட்டை ஒருமுறை கேளுங்கள். கேட்டதும் காதலிக்கத் தொடங்குங்கள்.
கிறக்கத்தில் இருந்த எஸ்.பி.பி எப்படி மீண்டு வரப்போகிறார்? முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரையைப் பார்த்த மயக்கத்திலிருந்து மீண்டெழுவதென்பது அத்தனை எளிதா என்ன? ஒருவேளை வாடிப்போன வான்பிறைக்கு ஆறுதல் சொல்லித் தேற்றச் செல்கிறாரோ? எப்படியும் செவ்வாயில் தெரிந்துவிடப் போகிறது. அது என்ன பாட்டென்று கண்டுபிடித்துக்கொண்டே இருங்கள். செவ்வாயன்று பாடும்நிலாவுடன் நானும் வந்துவிடுகிறேன்.
நிலாவின் உதயம் சந்தனம் பூசும் இன்னும்..!
இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.