மின்கிறுக்கல்

பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 8

மச்சம் இருக்கிறது என்று சொல்லி ஆடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி என்ன செய்கிறார்? அட இன்னும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்.. அப்படியென்ன ஆட்டம்… வாருங்களேன் அதையும் பார்த்துவிடுவோம்.

அந்த ஏய் மயக்கத்திலிருந்தே இன்னும் அவர் வெளிவரவில்லை போலவே.. இன்னும் வேறு ஏதேதோ மயக்கொலிகள் எல்லாம் சொல்கிறாரே. அரே ஹான் … ஹான்.. என்று பாடிக்கொண்டிருக்கிறார். காதலியைக் கூப்பிடும் வகைகளில் இதுவும் ஒருவகைபோல..

பொதுவாக ஒரு ஆண் தன் மகளையோ, உடன்பிறந்தவர்களையோ ” டி ” போட்டுக் கூப்பிடுவது வழக்கத்தில் இல்லை. தோழி, முறைப்பெண்கள், காதலி, மனைவி போன்றோரைத்தான் “டி” போட்டுக் கூப்பிடுவது வழக்கம். தோழியிடம் இயல்பாகவே ” டி ” சொல்லலாம். தோழனை “டா” போடுவதுபோல. முறைப்பெண்களை ” டி” சொல்லும்போது கேலியும் கிண்டலும் இருக்கும். அதுவே காதலியிடமோ, மனைவியிடமோ ” டி” செல்லும்போதுதான் அதில் காதலும் உரிமையும் கலந்திருக்கும். அம்மாடி.. எத்தனை டி ..!

காதல் எப்போதும் தனியே வருவதேயில்லை. கூடவே இன்னொன்றும் சேர்ந்தே தான் வரும். அதுதான் நாணம்..வெட்கம். வெட்கமில்லாத காதலும் காதலில்லாத வெட்கமும் இனிப்பில்லாத தேன் போல.

வெட்கம் என்னடி துக்கம் என்னடி

உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி –

என்று கேள்விகளால் அம்பு விடுகிறார். என்னைப்பார்த்ததும் வெட்கப்படுகிறாய்.. அதனாலேயே ஏதும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறாய்.. பிறகு திடீரென ” ஐயையோ.. எதுவுமே பேசாமலே நேரமெல்லாம் கடந்துவிட்டதே ” என்று துக்கப்படுகிறாய். நாம் காதலிக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகு தப்பு என்று என்ன இருக்கிறது? என்று காதலியிடம் கேட்கிறார்.. அவர் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறதுதானே!

கூடவே அவர்க்கு அழகாய்க் கைகொடுக்கிறது நம் இசைஞானியின் இசை.. தொடக்கத்திலிருந்தே துள்ளிசைதான் இங்கே.. துள்ளிசைப்பாடலுக்கான குரலிலேதான் முழுவதுமாக நம் எஸ்.பி.பி பாடியிருப்பார். கேட்கும்போதே நமக்கு ஒரு புத்துணர்வைத் தந்து துள்ளாட்டம் போடவைக்கும் குரல் அது.

இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் இரண்டு குதிரைகளும் ஒரே சீராய் ஓடவேண்டும். அப்போதுதான் வண்டியின் நகர்வு சீரானதாகவும் ஓர் ஒழுங்குடனும் இருக்கும். ஏதேனும் ஒரு குதிரை சற்றே சொதப்பினாலும் வண்டி அதன் இலக்கினை அடைய முடியாது. இங்கே எஸ்.பி.பி எனும் பாட்டுக்குதிரையுடன் இணைந்துபாடுகிறது எஸ்.ஜானகி எனும் பாட்டுக்குதிரை. இருவருமே ஒருவர்க்கொருவர் சளைத்தவரில்லை .. அதனால் பாட்டுவண்டியின் பயணமும் அலுக்காமல் நம் மனத்தை வந்து ஊடுருவி நிற்கிறது.

முத்தம் என்னடி

முத்து பெண்ணடி

மொட்டவிழ்க்க என்ன

வந்து கட்டிக்கொள்ளடி – இவ்வரிகளைப் பாருங்கள். முத்தமென்றால் என்னவென்று கேட்டுவிட்டு நாயகனே அதற்குப் பதிலும் உரைத்துவிடுகிறான். இதழ்ச்சிப்பிக்குள் இருக்கும் முத்துதான் அது என்கிறான். கடற்சிப்பியின் ஓடுகள் கடினமாய் இருக்கும். அதை உடைத்துத்தான் முத்தையெடுக்க வேண்டும். ஆனால் காதலியின் இதழ்ச்சிப்பி எத்துணை மென்மையானது! அதை ஒரு மொட்டானது பூவாக மலரும் மென்மைத்தன்மையுடன் பிரிக்கவேண்டுமாம்.. அதனால்தான் மொட்டவிழ்க்க என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர். அப்பப்பா! என்னவொரு கற்பனை! கங்கைஅமரனின் கைகளையெடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறது. மனிதன் ஒவ்வொரு வரியிலும் வாழ்ந்திருக்கிறார்…!

எஸ்.பி.பி பல இடங்களில் சொல்லியிருக்கிறார். பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைத் தெரிந்துகொண்டுதான் அதற்கான உணர்வைக் கலந்து பாடுவேன் என்று.

நாளை மலர்ந்துவிடும் ஒரு மொட்டினை இன்றே பறித்து நம் விரல்களால் அதன் பூவிதழ்களை மெல்ல விரித்துவிட்டால் பூவாகிவிடும்.. அந்த உணர்வில் பாடவேண்டும் என்று கங்கைஅமரன் சொல்லிருக்கலாம். அடடா..விரலால் தொட்டுவிரித்தால் பூவிதழ் சற்றே நைந்துவிட்டால் என்னசெய்வது? அழகாக மெலிதாக ஊதி இளங்காற்றாலேயே அதன் இதழ்களை விரித்துவிடுகிறேன் என்ற உணர்வில் பாடிவிடுவார் எஸ்.பி.பி. அதுதானே எஸ்.பி.பியின் தனிச்சிறப்பு.

மேற்சொன்னபடியெலாம் எஸ்.பி.பி பாடும்போது ஜானகியம்மா சும்மா விடுவாரா? நாயகிக்காக வரிந்துகட்டிக்கொண்டு அவரும் பதில் சொல்கிறார்.

காலம் கடக்குது

கட்டழகு கரையுது

காத்து கெடக்குறேன்

கைய கொஞ்சம் புடி .. என்று சொன்னதுதான் … சட்டென்று உள்ளேபுகுந்து ” அடியேய்” என்று சூழலைத் தன்பக்கம் இழுத்துவிடுகிறார் எஸ்.பி.பி.

கிட்டயிருக்கு

கட்டி நொறுக்கு

தட்டுகிற மேளங்கள

தட்டி முழக்கு – என்ற நாயகியின் பதிலைக்கேட்டதும் மகிழ்வின் எல்லைதாண்டிக் குதிக்கும் நாயகனின் சார்பில் கனா காணும் எஸ்.பி.பி ” தூங்காம நான் காணும் சொப்பனமே” என்று உச்ச மயக்கத்தில் பாடுகிறார். கடும் வேலையினாலோ, மனக்கவலையினாலோ தூங்காமலிருந்தால் குரலில் ஓர் அயர்ச்சி தெரியும். காதலோடும் நேயத்தோடும் ஆயிரம் பட்டாம்பூச்சிக் கனவுகளோடும் தூங்காமலிருந்தால் அக்குரலில் ஒருவித ஏக்கம் கலந்த மயக்கம்தான் இருக்கும். ஏக்கம் கலந்த மயக்கத்தில் குரல் எப்படியிருக்கும் என்றால் மீண்டும் ” தூங்காம நான் காணும் சொப்பனமே” என்ற வரியைக் கேளுங்கள். அப்படித்தான் இருக்கும்.

இச்சை என்பது உச்சம் உள்ளது

இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது – என்று சொல்லும் எஸ்.பி.பிக்கு மெய்யாகவே அவரது குரல்வளையில் மச்சம் இருந்திருக்கிறது. மச்சமில்லாமல் நாற்பதாயிரம் பாடல்களுக்குமேல் எளிதாகப்பாட முடியுமா? அதிலும் இவ்வரியில் ” எனக்கு மெய்யாகவே மச்சம் இருக்கிறது, அதனால்தான் நீ கிடைத்திருக்கிறாய்” என்று பெருமையும் மகிழ்வும் கலந்த உணர்வினை அழகாய் வெளிப்படுத்தியிருப்பார் எஸ்.பி.பி.

இது பாலாக தேனாக ஊறுவது

பாராத மோகங்கள் கூறுவது – இவ்வரிகளைக் கங்கைஅமரன் நம் எஸ்.பி.பிக்காகவே எழுதியிருக்க வேண்டும். அவர் குரலுக்கு நூறு விழுக்காடு அப்படியே இவ்வரிகள் பொருந்துகின்றன.

தாப்பாள போடாம கேட்பார கேளாம

கூப்பாடு போடாதடி – கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் மிஞ்சல் , கொஞ்சம் ஏக்கம், நிறைய காதல் எல்லாமே கலந்து பாடியிருப்பார். இத்தனை உணர்வுகளையும் ஒரே வரியில் கொண்டுவந்து பாடவேண்டுமென்றால் அதற்கு எஸ்.பி.பிதான் ஆகச்சிறந்த தேர்வு.

அடியே மனம்

நில்லுனா நிக்காதுடி

கொடியே என்ன கண்டு

நீ சொக்காதடி…. என்று எஸ்.பி.பி. பாடும்போது ஆடாதவர் யாராவது இருக்க முடியுமா என்ன! பாட்டின் சொல்லழகு, பொருளழகு, இசையழகு இவற்றிலெல்லாம் சொக்கிப்போய் பாடும் எஸ்.பி.பி என்னைப்பார்த்து நீ சொக்காதடி என்று சொல்வது ” அதெல்லாம் என்னைப்பார்த்து சொக்கிப்போகாமல் உன்னால் இருக்க முடியாதே” என்று காதல்நம்பிக்கையை வெளிப்படுத்திப் பாடுவதுபோலவே தோன்றினால் நீங்களும் என் இனமே.. நம் உலகம் பல்லுயிர்களும் மகிழ்ந்து திரியும் அழகுலகம்தான்… இப்படியே தொடர்ந்து பாட்டுலகில் களித்திருப்போம்..! ஒவ்வொருமுறையும் பல்லவியைப் பாடும்போது ஒரு புதுவிதமான கிறக்கத்தைத் தன் குரலில் புகுத்திப்பாடியிருப்பார்… ஏனெனில் அவர் எஸ்.பி.பி .. அதனால்தான் !

நீங்கள் கேட்டவை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற திரைப்பாடல்தான் இது. பாடலை ஒலியாகக் கேட்கும்போது இசைஞானி, எஸ்.பி.பி, எஸ்.ஜானகி, கங்கைஅமரன் என்னும் நால்வர் செய்யும் மாயங்கள் சொற்களில் புகுத்த இயலாதது.. அப்படியெனில் காட்சியாகப் பார்க்கும்போது ஏதுமில்லையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.. இருக்கிறதே … பார்ப்பவர் கண்களை வேறெங்கும் நகரவிடாமல் தன்னிடத்தே இழுத்துக்கொள்ளும் சில்க்ஸ்மிதா எனும் சுழல்தான் அது ! ஜானகியம்மாவின் குரல் மயக்கத்தையெல்லாம் தன் முகமாற்றத்திலும் கண்ணசைவுகளிலும் காட்டி அதகளப்படுத்தியிருப்பார்..!

மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி என்று எஸ்.பி.பி பாடும்போது மொட்டவிழாமல் இருக்காமல் இருக்கமுடியுமா! வழிமுழுதும் வனப்பான பூப்பாவாய் நிறைந்து அழைப்பு விடுகிறதாம் எஸ்.பி.பிக்கு..! அப்படியென்ன அழைப்பு என்று செவ்வாயில் திருவாய் மொழியப்போகும் எஸ்.பி.பிக்காய் நாமும் ஆவலுடன் காத்திருப்போமே!

கங்கைநீரில் நிலவின் பூமழை இன்னும் பொழியும்!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

Exit mobile version