மின்கிறுக்கல்

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 19

வான் நிலா வட்டமாக இருக்கிறதென்று சொன்ன எஸ்.பி.பி வேறென்ன சொல்கிறார் என்று கேட்போமா? எதைச்சொன்னாலும் பாட்டில்தானே சொல்லப்போகிறார்… தேன்குரலோனின் தேன்பாடலைக் கேட்பதற்கு நமக்குக் கசக்குமா என்ன? வாருங்கள் கேட்போம்.

காதல் என்ற ஒற்றைநூலில்தான் இவ்வுலகப்பட்டம் மகிழ்வாய்ப் பறந்து கொண்டிருக்கிறது. இப்பேருலகையே கட்டியாளும் காதல் இவ்வுலகைவிட அத்துணை கனமானதா என்றால் இல்லை.. அது மென்மைகளின் இழைக்கற்றை.. கொப்பூழ்க்கொடி குழந்தையைத் தாங்குவதுபோல காதல் இவ்வுலகைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. காதலைச் சொல்லும்போது மட்டும் எங்கிருந்துதான் சிந்தனை பெருக்கெடுக்கிறதோ தெரியவில்லை .. அத்தனை முறைகளில் சொல்லி சொல்லி அழகு பார்க்கின்றது மனித இனம். அதிலும் இந்தப் பாட்டெழுதும் பாவலர்ப் பெருமக்களுக்கோ சொல்லவே வேண்டாம்.. வார்த்தைகளால் வானத்தையே வளைத்து உள்ளங்கைக்குள் சுருட்டிக்கொள்வர்.

இங்கும் ஒரு காதலிணை தம் காதலினை எவ்வாறெல்லாம் சொல்லி மகிழ்கிறார்கள் என்றுதான் பார்க்கப்போகிறோம். மிகவும் உறுதியான காதல் என்பது பாட்டைக்கேட்டவுடன் நமக்கே புரிந்துவிடும். இப்பாடலில் நம் பாடும் நிலாவோடு இணைந்து பாடுவது நம் சின்னகுயில் சித்ரா.

பாட்டின் முதல் சரணத்தைச் சின்னக்குயில் சித்ரா தொடங்குகிறார். மென்மையான குரலுக்குச் சொந்தக்காரி பாடும்போது கொஞ்சலுக்குக் கேட்கவா வேண்டும்?

எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு

இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

என்று தோழியிடம் சொல்லிஅனுப்புகிறாள் தலைவி.. சங்கப்பாடல்களில் தலைவன் தலைவிக்கு இடையே ஒரு பாலமாக எப்போதும் ஒரு தோழி இருப்பாள்.. தலைவன் தலைவி இருவரிடையே நாணமோ, சினமோ மேலிடும்போது அவர்கள் ஒருவர்க்கொருவர் நேரடியாகப் பேசிக்கொள்ளாமல் தோழியிடம் சொல்லி அவள் மற்றவரிடம் சொல்வாள். அம்முறையில்தான் இப்பாடலை எழுதியிருக்கிறார் இயக்குநரும் பாடலாசிரியருமான ஆர்.வி.உதயகுமார்.

கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு

மீனாட்சிக் குங்குமத்த நெத்தியில சூடச் சொல்லு

என்று பதில் தூது பாடிக்கொண்டே பாட்டில் நுழைகிறார் நம் எஸ்.பி.பி. பலமுறை சொல்லியிருந்தாலும் இங்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நம் எஸ்.பி.பியின் சொற்களைப் பலுக்குதல்தான்.. வல்லினம் மெல்லினம் இடையினம் என அதற்கேற்றவாறு அழுத்தத்தைக் கூட்டியும் குறைத்தும் தெளிவாகப் பாடுவதில் அவர் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பவர். சொற்களில் எப்போதுமே பிசிறு தட்டுவதை அவர் விரும்பியதில்லை.. அவர் மட்டுமல்ல.. அப்போதைய பாடகர்கள் எல்லோருமே தாம்.. தொழில்தூய்மை என்பதுபோல தாம் பாடும் பாடல்களில் சொற்தூய்மை இருக்கவேண்டும் என்பதில் பாடும்நிலா கூடுதலாகவே அக்கறை காட்டினார் என்பது மிகையல்ல. மீனாட்சி என்ற சொல்லை அத்தனை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்வதிலிருந்தே இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எஸ்.பி.பி சொன்னால் நாயகி என்ன, இளம்பெண்கள் அனைவருமே கொத்து மஞ்சளரைத்துப் பூச அணியமாகிவிடுவர்.

சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு

என்று சின்னக்குயில் பாட .. அதற்குப் பரிசாக

அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

என்று ஒற்றைவரியில் உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிடுகிறார் பாடும்நிலா. (இந்த அஞ்சல மாலை என்பது என்னவாக இருக்கும்? என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை. அறிந்தோர் கூறுங்கள்.. நாங்களும் அறிந்து கொள்கிறோம்).

இப்படத்தில் இரு காதலிணைப்பாடல்கள் இருக்கின்றன.. இரண்டிலுமே கோலோச்சுவது நம் எஸ்.பி.பி தான் என்றாலும் இரண்டுமே அவர் தொடங்கிப் பாடுவதாக இருக்காது.. இரண்டிலும் முதல் சரணமும் பெண்குரலில்தான் தொடங்கும். எஸ்.பி.பியே தொடங்கியிருக்கலாமே என்று நான் பலமுறை நினைத்ததுண்டு.. அது கூடப்பாடுபவரைத் தாழ்த்தி இவரை உயர்த்துவதற்காக அல்ல.. ஒரு பாட்டின் போக்கினை அவர் கையாண்டு தீர்மானம் செய்தால் இதைவிடவும் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்ற மனத்தின் பேராவல்தான் அதற்குக் காரணம்.

பல்லவியை நம் பாடும்நிலா தொடங்கவில்லையே என்ற என்னைப்போன்றோரின் ஏக்கத்தைத் தீர்க்கும்வகையில் முதல் சரணத்தின் முடிவில் அவர் பல்லவியைக் கையிலெடுத்துக்கொள்வார்.

ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்

ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே –

என்று காதலை மகிழ்வில் குழைத்து நம் சின்ன குயில் பாடிய அதே பல்லவி வரிகளை நம் எஸ்.பி.பி காதலை மகிழ்விலும் கிறக்கத்திலும் குழைத்துப் பாடிவிடுகிறார். அட அட அட என்று நம் மனம் கொண்டாடிவிடுகிறது..

அதேபோல இரண்டாம் சரணமும் அவர் கைகளில்தான் தனக்கான பிள்ளையார்ச்சுழியைப் போட்டுக்கொள்கிறது.

வேலங்குச்சி நான் வளைச்சி

வில்லுவண்டி செஞ்சு தாரேன்

வண்டியிலே வஞ்சி வந்தா

வளைச்சிக் கட்டிக் கொஞ்ச வாரேன்

என்று தனக்கே உரித்தான முத்திரைச் சிரிப்பு கலந்து பாடுகிறார்.. அதிலும் அந்த ” வளைச்சுக் கட்டிக் கொஞ்ச வாரேன் ” என்று பாடும்போதெல்லாம் என்னை இப்போதே வளைத்துக்கொள்ளேன் என்று ஒவ்வொரு பெண்ணையும் அவர்தம் காதலனை எண்ணி ஏங்க வைத்துவிடும் தொனியில் பாடுகிறார்.

இதில் அவருடன் பாடும் நம் சின்னகுயில் சித்ராவும் கொஞ்சமும் சளைக்காமல் அவர்க்கு ஈடுகட்டுகிறார்.. அதிலும் “பகல் முடிஞ்சுக் கொஞ்ச வாரேன் ” என்ற வரியில் கொஞ்ச வாரேன் என்பதை மெய்யாகவே கொஞ்சலாகவே பாடுகிறார்.

வட்டமாய்க் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

இப்பாடலின் அனைத்துவரிகளுமே எஸ்.பி.பி சிறப்பாகவே பாடுவார் என்றாலும் இந்தவரிதான் அனைத்திலும் உச்சம்.. வட்டமாய்க்காயும் என்று குரலை மேலிழுக்கும்போதே நமக்குள் ஏக்கம் பெருமூச்சாக எழும்பத் தொடங்குகிறது. ஒரு வட்டத்தை இவ்வளவு அழகாக நீட்ட முடியுமா! அதில் “ய், க்” என்ற இரு ஒற்றுகள் அடுத்தடுத்து வருகின்றன. இரண்டையும் அத்துணைத் துல்லியமாகப் பலுக்கிப் பாடுகிறார். வட்டமாய்க்காயும் வெண்ணிலா என்று உயரழுத்தத்தில் பாடிவிட்டு அடுத்த வரியில் கொல்லுதே கொல்லுதே இராத்திரி என்று ஏக்கத்தில் தேய்ந்து குரலையிறக்கிப் பாடுகிறார். அந்த இராத்திரி என்ற சொல்லிற்குள் சொக்குப்பொடியைத் திணித்து மயக்கத்துடன் பாடுகிற அழகை எப்படி வியப்பது என்றே தெரியவில்லை.

கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்தூசி மாதிரி – இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் இவ்வரியின் கற்பனையை எண்ணி எண்ணி மாய்ந்து போனதுண்டு.. என்னவொரு அழகான உவமை!!! இந்த ஒற்றைவரி போதும் ஆர்.வி.உதயகுமார் ஒரு ஆகச்சிறந்த கவிஞன் என்பதைப் பறைசாற்ற. இவ்வரிக்காக அவரைப் பாராட்ட அவரிடம்தான் வார்த்தைகளைக் கேட்கவேண்டும்.

ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்

காத்தாப் பறந்து வருவேன் புதுப்பாட்டாப் படிச்சித் தருவேன்

இதற்கு முந்தைய வரியில் ஏக்கத்தில் உழன்றவரா இவர் என்று வியக்கும்வண்ணம் இவ்வரியில் அத்தனை தெம்பும் துணிவும் கலந்து ஒட்டுமொத்தமாய்ப் புரட்டிப்போடும் பேரலையின் வலிமை புகுத்திப் பாடுகிறார். உறங்கட்டும் என்ற சொல்லின் றகரத்தை எத்தனை அழகாகப் பாடுகிறார். தமிழின் சிறப்பு என்பது ” சிறப்பு ழகரம்” மட்டுமல்ல.. “சிறப்பு றகரம்” கூடத்தான்.. அதை நாம் அழுத்தியே பலுக்க வேண்டும். எஸ்.பி.பி பாடல்களைத் திரும்ப திரும்ப கேளுங்கள்.. தானாகவே உங்களுக்கு அந்தப்பழக்கம் வந்துவிடும்.

தமிழ்த்திரையுலகின் உடுக்கோன்(Super Star) என்றழைக்கப்படும் இரஜினிகாந்த் ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் வெள்ளை வேட்டி சட்டை துண்டு என மாறுபட்ட தோற்றத்தில் நடித்த படம் எஜமான். பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பின அப்படத்தின் பாடல்கள்.

இளையராஜா-எஸ்.பி.பி-இரஜினி என்ற மூன்று சிங்கங்கள் ஆட்சி செய்த படம் எஜமான். இந்தப்பாட்டில் சில நேரங்களில் நம் மனம் எஸ்.பி.பியை மறந்து இரஜினிதான் பாடுகிறாரோ என்றுகூட எண்ணுமளவுக்கு வியத்தகு மாயங்கள் செய்திருப்பார் எஸ்.பி.பி… எஸ்.பி.பியின் குரல் மாயங்களைப் பல இடங்களில் தன் நடிப்பில் தனக்கே உரித்தான பாணியில் வெளிப்படுத்தியிருப்பார் இரஜினி.. குறிப்பாக ” வட்டமாய்க் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே இராத்திரி; ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்

காத்தாப் பறந்து வருவேன் புதுப்பாட்டாப் படிச்சித் தருவேன்” என்ற வரிகளில் பாருங்கள். அது ரஜினிக்கு மட்டுமே கைவரக்கூடிய பாணி.

கண்குளிரப் பார்த்து மயங்கும் காட்சியமைப்பும் இசைஞானியின் கிறங்கடிக்கும் இசையும் கூடவே நம் பாடும்நிலாவின் தேன்சொட்டும் குழைவுக்குரலும் சேர்ந்தால் இனிமைக்குக் கேட்கவா வேண்டும்!

இத்தனை மயக்கமாய்ப் பாடியபின் எஸ்.பி.பி என்னவாகப் போகிறார்? என்னென்னவோ ஆகப்போகிறார் என்றுதான் தோன்றுகிறது. வான்நிலாவின் பார்வை பூம்பனிபோல இருக்கிறதாம்.. என்னதான் என்று அடுத்த கிழமை அறிந்து கொள்வோமே..!

உதயத்தில் பாடும்நிலாவில் பனிபெய்யும்..!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

Exit mobile version