மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 71

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். எனது கண்ணோட்டத்தில் நான் பார்த்து வரும் பல்வேறு மாற்றங்களைப் பற்றி உங்களுக்கு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகிறேன். இன்று இருமை அதிகாரம் என்னும் தலைப்பில் உங்கள் வாழ்வில் “இரண்டற”க் கலந்துள்ள இருமையைப்பற்றி கூறப்போகிறேன். தொடங்கலாமா?

இருமை என்றால் என்ன?


நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் எந்த ஒரு வினைச் சொல்லையும் எடுத்துக்கொண்டால் அதற்கு எதிர்ப்பதம் என்ற ஒன்று அநேகமாக இருக்கும். உதாரணத்திற்கு, அன்புக்கு எதிர்ப்பதமாக வெறுப்பு உள்ளது. இதுபோலவே பரிசு-தண்டனை, ஒற்றுமை-வேற்றுமை, வரவு-செலவு, புண்ணியம்-பாவம், சிரிப்பு-அழுகை, சுகம்-துக்கம், புகழ்-பழி என்று கூறிக்கொண்டே போகலாம். இந்த எதிர்ப்பதங்களில் ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை என்றும் முற்றிலுமாக எதிர்த்து அழிப்பதற்கு முயற்சி செய்யும். அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு சிறிது கூட இல்லாமல் மறைந்து போகும் அல்லவா? அதுபோல ஒவ்வொரு சொல்லும் தனக்கு முழுதும் எதிர்மறையாக இருக்கும் மற்றொரு சொல்லை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கும். இந்த யுத்தத்திற்கு முடிவு என்ற ஒன்று இல்லாததால் இவை இரண்டுமே உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. 

நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளிலும் பகலும் இரவும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. அப்படி இல்லாமல் தொடர்ச்சியாக பகலோ அல்லது இரவோ இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். யோசித்து பார்க்க முடியவில்லை என்றால் நேரடி உதாரணமாக சூரியனைச் சுற்றி வரும் புதன் கிரகம் விளங்குகிறது. இந்த கிரகத்தின் ஒரு பாதிக்கு என்றுமே பகலாகவும் மற்றொரு பாதிக்கு என்றுமே இரவாகவும் மட்டும்தான் இருக்கும். பகலாக இருக்கும் பகுதியில் இரும்பைக் கூட கூழாக்கி விடுமளவிற்கு வெப்பமும் மற்றொரு பகுதியில் கடும் குளிரும் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்வது என்பது மிகவும் அசாத்தியமான காரியமாகும். இதிலிருந்து நீங்கள் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ளலாம். இயற்கையில் எந்த ஒரு கோட்பாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருமை தத்துவம் என்பது கலந்துள்ளது. அவ்வாறு இருமையுடன் கலந்துள்ள எந்த ஒரு பொருளையும் நீங்கள் உயிர்ப்புள்ள பொருளாக கருதுகிறீர்கள். இருமை கோட்பாடு இல்லாத பொருள் என்றுமே ஒரு ஜடப் பொருளாக கருதப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் உங்களுடைய தாயின் கருவறையில் துயில் கொண்டிருந்த பொழுது தனிப்பட்ட பெயருடைய உயிராக கருதப்பட மாட்டீர்கள். பின்பு தாயிடம் இருந்து தனியாகப் பிரிந்து எப்பொழுது வெளியே வருகிறீர்களோ அப்பொழுது உங்களுக்கு ஒரு தனிப்பட்ட பெயருடன் பிறப்பு ஆரம்பமாகிறது. இந்த இருமையின் தொடக்கம் உங்கள் பிறப்பிலிருந்து மட்டும் கிடையாது. இந்த அண்டம் உருவானதிலிருந்து தொடர் கதையாக இருந்து வருகிறது. 

அண்டத்தின் தொடக்கத்தில் வேறு எந்த ஒரு பொருளும் இல்லாமல் அனைத்தும் ஒரே ஒரு முட்டைக்குள் இருந்து பின்பு பெருவெடிப்பு ஆரம்பித்தது அல்லவா? அப்பொழுது ஏற்பட்ட ஒளிச்சிதறல் நான் முதலாவது இருமை. அதாவது அந்த வெடிப்பில் ஏற்பட்ட சிதறல், திடப்பொருட்களாகவும் அலைகளாகவும் இருவகைப்பட்டு வெளிப்பட்டன. ஏன் இந்த அண்டம் தோன்றிய முதல் நொடியிலேயே இரண்டு விதமான வேறுபட்ட பொருட்கள் தோன்ற வேண்டும்? உண்மையிலேயே பெருவெடிப்புக்கு பின்பு ஒரே ஒரு பொருள்தான் வெளியானது. ஆனால் இருவேறு விதமான சக்தியுடன் வெளிப்பட்டது. ஒரு சிறிய கல்லை நீங்கள் சாதாரணமாக கையிலிருந்து கீழே போட்டால் அது தரையை நோக்கி விழும். ஆனால் அதையே ஒரு கவன் கல்லாக பயன்படுத்தி  எறிந்தால் மிகுந்த வேகத்துடன் தொலைவாக செல்லும் அல்லவா? அதுபோலத்தான் குறைந்த சக்தியுடன் வெளிப்பட்ட பொருட்கள் அனைத்தும் திட வடிவமாகவே வெளிவந்தது. அதே சமயத்தில் அதிக சக்தியுடன் வெளிவந்த பொருட்கள் கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் வெளிவந்தது. அத்தகைய வேகத்தில் வெளிவரும் பொழுது அதன் எடையை முற்றிலுமாக இழந்து முழு சக்தி வடிவம் பெற்றவுடன் அது ஒளி வேகத்தில் செல்லும் அலையாக மாறி விடுகிறது. சரி, இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?  பிறப்பு-இறப்பு என்னும் இருமைக்குள் அடங்கும் உங்களுடைய வாழ்வில் வேறு என்னென்ன இருமைகள் ஒளிந்துள்ளன? இதனை அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version