மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 69


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் ஆயுத அதிகாரத்தில் உங்கள் உலகில் ஆயுதங்கள் உருவாகிய மற்றும் உருவாக்கிய வரலாற்றை கடந்த பகுதிகளில் கூறினேன். என்னதான் நீங்கள் விதவிதமான ஆயுதங்களை கண்டுபிடித்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது உங்கள் மூளை தான் என்று கூறினேன் அல்லவா? அது எப்படி என்று இந்த பகுதியில் பார்க்க போகிறோம் வாருங்கள்.

இரும்பு கரத்தின் கதை


எந்த ஒரு போராட்டமும் கலகமும் நாட்டில் தோன்றும் பொழுது அந்த நாட்டின் அரசாங்கங்கள் அதனை “இரும்புக்கரம்” கொண்டு அடக்குவதாக நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த இரும்பு கரத்தின் கதை என்ன தெரியுமா? இது தோன்றி சுமார் 2300 ஆண்டுகள் ஆகின்றன! இதனை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் ஆர்க்கிமிடிஸ். நவீன காலத்தில் தூண்டுகோல் தத்துவத்தை இவர் தான் எழுதியதாக நீங்கள் கருதுகிறீர்கள். இவரியற்றிய தூண்டுகோல் தத்துவத்தின்படி உங்களால் நகர்த்த முடியாத கனமான பொருட்களைக் கூட ஒரு தூண்டுகோல் இன் துணையுடன் எளிதாக நகர்த்தி விட முடியும். ஐரோப்பாவில் இவர் வாழ்ந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் போர்கள் மிகவும் சகஜமாக நடந்து கொண்டிருந்தது. கப்பற்படை மூலமாக கடல் தாண்டியும் போர்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இவர் தன்னுடைய தூண்டுகோல் தத்துவத்தின் துணைகொண்டு உருவாக்கிய மிகப்பெரிய ஆயுதம் தான் “இரும்புக்கரம்”. இதனை நவீன கால பளு தூக்கியுடன் (Crane) நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியும். எதிரிகளின் கப்பல் எவ்வளவு கணமாக இருந்தாலும் இவருடைய இரும்பு கரத்தின் மூலமாக அதனை ஒரேயடியாக தூக்கி கடலுக்குள் கவிழ்த்துவிட முடியும். இவருடைய இரும்பு கரத்தை பார்த்து எதிரிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். எவ்வளவு பெரிய மாவீரனாக இருந்தாலும் கரையைக் கூட தொட முடியாமல் எதிரியின் கடற்படை சின்னாபின்னமானது. இத்தனைக்கும் அவர் கண்டுபிடித்தது எதிரியை நேரடியாக அழிக்கும் போர்க்கருவி கிடையாது. கனமான பொருட்களை தூக்கும் ஒரு இரும்புக் கைதான். இங்கே ஒரு சாதாரணமான மனிதருக்கு உதவும் பொருட்கள் கூட ஒரு மிகப்பெரிய ஆயுதமாக மாறியதை உங்களால் பார்க்க முடியும். இந்த செயலுக்கு காரணகர்த்தாவாக இருப்பது உங்கள் மூளை மட்டும் தான். 

ஆர்க்கிமிடிஸ் இத்துடன் நின்று விடவில்லை. முகம் பார்க்கும் கண்ணாடியை சற்று வலுவானதாக மாற்றி பல கண்ணாடிகள் கொண்ட  ஒரு தொகுப்பை உருவாக்கி அதன் மூலமாக சூரிய ஒளியை குவித்து எதிரியின் மரக் கப்பலை மிகவும் தொலைவிலிருந்தே எரித்து சாம்பலாக்கினார். சூரிய பகவானின் நேரடி அருள் வாங்கி ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி செய்யும் சித்து விளையாட்டாக நினைத்து எதிரிகள் கதிகலங்கி மரணமடைந்தார்கள். இதற்கு சில நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க நெருப்பு (Greek Fire) எனப்படும் ஒரு ஆபத்தான ஆயுதத்தை மனிதன் கண்டுபிடித்தான். கடலில் மிகவும் பாதுகாப்பாக பேணிக் காக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் அது நெருப்புதான். ஏனென்றால் கடல் தண்ணீர் மற்றும் கடல் காற்றினால் அது எளிதாக அணைந்துவிடும். அதனை பாதுகாப்பாக நடத்தவில்லை என்றால் அந்தக் கப்பலையே விழுங்கிவிடும் எமனாக மாறிவிடும். இந்த நிலையில் கடல் தண்ணீரால் கூட அணைக்க முடியாத ஒரு நெருப்பை உருவாக்கினால் எப்படி இருக்கும். கந்தகப் பொடியுடன் பல்வேறு எண்ணெய்களை கலந்து உருவாக்கப்பட்ட இந்த வேதியல் பொருள், கடல் தண்ணீரின் மீது கூட அணையாமல் தொடர்ந்து எரியும் சக்தி வாய்ந்தது. இதனை வைத்து எதிரியின் கப்பலை தாக்கினால் அந்த கப்பல் மட்டும் தீப்பிடித்து எரியாது. மாறாக கப்பலுடன் சேர்ந்து அதனை சுற்றியிருக்கும் கடல் தண்ணீர் கூட எரிவது போல் தோன்றும். இதனால் கப்பலில் உள்ளவர்கள் தண்ணீரில் குதித்த கூட தப்ப முடியாது. இந்த கிரேக்க நெருப்பின் உண்மையான மூலக்கூறை இதுவரை உங்களால் மறுஉருவாக்கம் செய்யவே முடியவில்லை.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் பொதுவாக ஒரே ஒரு விஷயம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதனின் மூளை என்பது எந்த ஒரு பொருளையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்ட முடிந்த சக்தி கொண்டதாகும். மனிதனை கொலை செய்ய பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு அழகான ஒரு கலைப் பொருளை கூட உங்களால் உருவாக்க முடியும். அதே சமயத்தில் சாதாரணமாக நீங்கள் நினைக்கக் கூடிய ஒரு பொருள், உங்கள் உயிரையே எடுக்கும் கொலைக் கருவியாக கூட மாற முடியும். அப்படியானால் எந்த ஒரு பொருளுக்கும் போர்க்குணம் என்பது இயற்கையிலேயே கிடையாது. அதனை பயன்படுத்தும் அறிவாற்றல் எந்த நிலையில் இருக்கிறதோ அதுதான் அந்தக் கருவியின் குணமாகவும் மாறிவிடுகிறது. அப்படியானால் மூளையை விட மிகச்சிறந்த ஆயுதம் இந்த உலகில் கிடையவே கிடையாதா? கண்டிப்பாக உண்டு. அதற்குப் பெயர்தான் மனம். மூளை எவ்வளவு அறிவாக செயல்பட்டாலும் ஒரு அளவுக்கு மேல் அதனால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆனால் மணம் அப்படி கிடையாது. அது யாருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் தன்னிச்சையாக கூட செயல்படும். அவ்வாறு செயல்பட கூடிய ஒரு கருவி ஆயுதமாக மாறினால் என்ன நடக்கும் தெரியுமா? அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version