இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். சென்ற பகுதியில், ஒலியின் அலைவரிசையை மட்டுமே கொண்டு உருவான இசையைப் பற்றியும் அதனால் ஏற்படும் பல்வேறு மனஉணர்வுகளை பற்றியும் கூறினேன். ஒலியின் வீச்சு மற்றும் அலைவரிசை மட்டுமே சேர்ந்தால் முழு மொழியும் ஆகாது என்று உங்களுக்கு கூறியிருந்தேன் அல்லவா? அந்த மூன்றாவது விஷயத்தைப் பற்றி இன்று உங்களுக்கு கூறப் போகிறேன்.
மனோன்மணி
20-20000 Hz வரை உள்ள அலைவரிசை மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்க முடியும் என்று கூறியிருந்தேன். இந்த அலைவரிசைகள் கொண்டு நீங்கள் உங்கள் மொழிகளையும் மன உணர்வுகளையும் மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்டு வருகிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாமலேயே, உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு விதமான அலைவரிசையை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே தான் வருகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கு மூளை அலைகள் (Brain waves) என்று பெயர் வைத்துள்ளீர்கள். பொதுவாக இது 0.5-42 Hz அலைவரிசைக்குள் உங்கள் மூளையில் இருந்து வெளிப்படும். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட இது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் பொழுது, இது ஒன்று முதல் நான்கு Hz வரை இருக்கும். அதேசமயம் கனவு நிலையில் இருக்கும்போது 4 முதல் 8 Hz வரை இருக்கலாம். ஆனால் இந்த அலைவரிசையை உங்கள் காதால் கேட்க முடியாது என்பதால் உடனடியாக உணர்வது கடினமான செயல். இதனை எளிமையாக உணர்வதற்கு உங்களுடைய இன்றைய விஞ்ஞானம், மூளை அலை விளையாட்டு (Brain wave games) எனும் ஒருவகை விளையாட்டு மூலமாக உதவி செய்கிறது. இந்த கருவியை நீங்கள் வாங்கினால் வீட்டிலேயே உங்கள் மூளையில் இருந்து வெளிப்படும் அலையை சோதனை செய்து பார்க்க முடியும். ஒரு கணிப்பொறி விளையாட்டு விளையாடுவதற்கு joystick போன்ற விளையாட்டுக் கருவி இருக்கிறதல்லவா? அதுபோலவே, இந்த கருவியை உங்கள் தலையில் மாட்டிக் கொண்டு, எதையும் தொடாமலேயே அல்லது பேசாமலேயே கணிப்பொறி விளையாட்டுகளை விளையாட முடியும். நீங்கள் எப்படி சிந்தித்தால் விளையாட்டு எப்படி நகரும் என்று உங்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு உங்களுக்கு ஒரு சிறு பயிற்சியும் கூட அந்த விளையாட்டுகளிலேயே உண்டு.
சரி. மூளையில் இருந்து வெளிப்படும் அலையை வைத்து விளையாட முடியும் என்று ஒத்துக்கொண்டாலும் அது எப்படி ஒரு மொழியாக முடியும்? ஆதிகாலத்திலிருந்து பல்வேறு விலங்கினங்களும் (மனிதர்கள் உட்பட) இதனை புரிந்து கொள்ளும் சக்தியோடுதான் இருந்துவருகிறன. உதாரணமாக, ஒரு சிங்கத்தின் அருகில் நீங்கள் சென்றால் உங்களுக்கு பயம் எனும் உணர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் வாயைத் திறந்து பேசவே இல்லை என்றாலும் அந்த பயம் எனும் உணர்வு, உங்கள் மூளையின் அலைவரிசையை மாற்றிவிடும். உங்கள் அருகில் அந்த சிங்கம் வரும் பொழுது அந்த அலைவரிசை, சிங்கத்தின் மூளையையும் பாதித்து அதற்கும் பயம் எனும் உணர்வை வரச்செய்யும். அந்த பயத்தின் காரணமாகவே, அந்த சிங்கம் தன்னை தற்காத்துக்கொள்ள உங்களை அடித்து சாப்பிட நேரலாம். அதேசமயம் நீங்கள் உண்மையான அன்போடு அந்த சிங்கத்தின் அருகில் நிற்க முடிந்தால், அந்த சிங்கம் உங்களை சாப்பிடுவதற்கான வாய்ப்பு குறைவு. நான் இங்கே வாய்ப்பு குறைவு என்று தான் கூறினேன், சாப்பிடவே சாப்பிடாது என்று கூறவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த சிங்கத்தின் மூளையிலும் இதே போன்று மூளை அலைகள் உருவாகும். சிங்கம் அருகில் வரும் போது அதன் அலைகள் உங்கள் மூளை அலைகளை பாதிக்க செய்யும். இறுதியில் எந்த அலை அதிகமாக இருக்கிறதோ, அதன்பொருட்டு அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கும். ஆக மொத்தம் மூளை அலைகள் மூலம் நீங்களும் சிங்கமும் பேசிக்கொண்டிர்கள் அல்லவா? அப்படியானால் இதுவும் ஒரு மொழி தான்!
இதெல்லாம் மூளை எப்படி உற்பத்தி செய்கிறது என்று கூறுகிறேன் கேளுங்கள். உங்கள் மூளையில் உள்ள பல்வேறு சுரப்பிகளும் அவை உருவாக்கும் ரசாயணங்களும்(hormones) இதனை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள தலையாய சுரப்பிதான் மனோன்மணி சுரப்பி (Pineal gland). மனதின் மணி போன்ற சுரப்பி என்பதால் இதற்கு மனோன்மணி என்று பெயர் வந்தது. மூளையின் நடுவில் ஒரு மணி போல பாதாம்பருப்பு அளவுடன் தான் இந்த சுரப்பி இருக்கும். நீங்கள் தூங்குவதற்கு காரணமே இந்த சுரப்பி தான். இது சுரக்கும் மெலடோனின் எனும் ஒரு வேதியல் பொருள் தான் உங்களுக்கு சோர்வு, உறக்கம் போன்ற அனைத்து உணர்வுகளையும் கொடுக்கிறது. தூங்கியவுடன் தானாகவே மூளை அலைகளின் அலைவரிசை குறைந்துவிடுகிறது. தானாகவே நடக்கும் இந்த செயலை மனிதனால் கட்டுப்படுத்த நடந்த முயற்சிக்கு பெயர்தான் “மந்திரம்”.
மந்திரம்
மந்திரம் = மனம் + திறம். மனதின் திறமையால் மூளை அலைகளை கட்டுப்படுத்த முடிவதற்குப் பெயர் தான் மந்திரம். உங்களால் கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு வேண்டுமான மூளை அலைகளை உருவாக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் அலைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் பட்சத்தில், உங்களை சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அனைவரின் மனநிலையும் ஓரளவுக்கு உங்களால் கட்டுப்படுத்த முடியும். சில இடத்தில், ஒரு சிலரின் அருகில் இருக்கும் பொழுது உங்களால் ஒரு குறிப்பிட்ட மனநிலையை உணர முடிந்தது என்றால் அதற்கு காரணம் இதுதான். ஆனால் இந்த நிலைமையை அடைவது என்பது சாதாரணமான காரியமல்ல. சிறுவயதில் நீங்கள் எழுத்துக்களை எழுதி பழக நான்கு அல்லது இரண்டு கோடுபோட்ட புத்தகங்களை பயன்படுத்தினீர்கள் அல்லவா? எழுதி பழகிக்கொண்டவுடன் உங்களால் வெற்று காகிதத்தில் கூட எழுத்துகளை கோர்வையாக எழுத முடிந்தது. அதேபோல் மொழியின் மூன்றாம் அங்கமான இந்த மூளை அலைகளை வசப்படுத்த நான் முன்பே கூறியிருந்த முதலிரண்டு அங்கமான ஒலியின் வீச்சும் அலைவரிசையும் பயன்படுகிறது.
இப்பொழுது அமைதி என்னும் மன நிலையை அடைவதுதான் உங்கள் நோக்கு என்றால், முதலில் ஒரு சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு நாம் “அமைதி” என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். நீங்கள் அடைய வேண்டிய பொருளை இது கூறிவிட்டது. உங்களால் பேச முடிந்த ஸ்வரங்களில் அதிகமாக உள்ள அலைவரிசைகள் கோபம், வீரம் போன்ற உணர்வுகளையும் குறைவாக உள்ள அலைவரிசை, அமைதி, அன்பு போன்ற உணர்வுகளையும் குறிக்கிறது என்று முன்பே கூறியிருந்தேன். உங்களுக்கு அமைதி வேண்டும் என்பதால் உங்களால் பேச முடிந்த ஒரு குறைந்த அலைவரிசையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குறைந்த அலைவரிசையில், அமைதி என்னும் சொல்லை தொடர்ந்து கூறிக் கொண்டு பயிற்சி செய்யுங்கள். அப்படி செய்யும் போது தொடர்ந்து உங்கள் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்பொழுது, உங்களுக்கு எப்பொழுதெல்லாம் அமைதி தேவை படுகிறதோ நீங்கள் பயிற்சி செய்த மாதிரியே அமைதி என்னும் சொல்லை கூறினால், அந்த அமைதி உங்களுக்கு திரும்ப வந்துவிடும். இந்தப் பயிற்சிக்கு பெயர்தான் மந்திரம். இந்த பயிற்சியை செய்யாமல் வேறு ஒருவர் அதே சொல்லை கூறினால் அவருக்கு எதுவுமே நடக்காது. இவ்வாறு பயிற்சி செய்த ஒருவர் விழித்துக் கொண்டிருக்கும்போதே ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கும் மூளை அலைகள் உருவாக்க முடியும். அதற்குப் பெயர்தான் தவம் அல்லது தியானம்.
நான் கூறிய இந்த மூன்று விஷயங்கள்தான் மொழியின் அடிப்படை அங்கங்கள் ஆகும். ஆனால் அது புரிந்து கொள்ளாமல் உங்கள் உலகில் பல்வேறு தவறான புரிதல்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. உதாரணமாக, எகிப்து நாட்டில், உள்ள பிரமிடு கல்லறைகளில் பல்வேறு மந்திரங்கள் மற்றும் சாபங்களை எழுத்து வடிவில் செதுக்கி வைத்துள்ளார்கள் என்று நம்பி நான்காயிரம் வருடங்களாக அதை புரிந்து கொள்வதற்கு நீங்கள் மிகவும் முயற்சி செய்து கொண்டு வந்தீர்கள். ஆனால் அந்த மொழி, உங்களால் புரிந்து கொள்ள முடியாதபடி வெறும் படங்களால் கட்டமைக்கப்பட்டது. அதற்கு நீங்கள் வைத்த பெயர் hieroglyph. பல நூற்றாண்டு முயற்சி செய்த நீங்கள் இறுதியாக Rosetta Stone எனும் ஒரு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்லின் உதவியுடன் அதனை மொழிபெயர்க்கும் அறிவை வளர்த்துக் கொண்டீர்கள். மொழிபெயர்ப்புக்கு பின் உங்களுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டும் தான். ஏனென்றால் அதைக் கூறினால் எந்த ஒரு மாயாஜாலமும் நிகழவில்லை. அந்த எழுத்துக்கள் அதிகபட்சமாக அங்கே புதைக்கப்பட்ட மன்னனின் பெயரைத் தான் மீண்டும் மீண்டும் கூறியது. அது எப்படி மந்திரமாகும்? அந்த மன்னனின் பெயரையே தகுந்த அலைவரிசை மற்றும் மனநிலையோடு கூறினால் அதுவும் மந்திரமாகும். ஆனால் அந்த மனநிலையும் அலைவரிசையும் அந்த கல்லில் செதுக்கப் படவில்லை. அதற்கான எழுத்து முறையை நீங்கள் இதுவரை கண்டு பிடிக்கவும் இல்லை. அதை பரிமாற்றம் செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதற்குப் பின்னல் கொள்கையை தெரிந்துகொள்ளவேண்டும்.
குவாண்டம் பின்னல் கொள்கை
ஆரம்பத்தில் ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இருக்கும் ஈர்ப்பு விசையைப் பற்றி பார்த்தோம் அல்லவா? ஈர்ப்பு விசையுடன் ஒன்றாக இருந்த இரு பொருட்கள், பின்னால் பிரிந்து சென்றாலும் அதற்குள் ஒரு பிணைப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். சிறு பொருட்களில் இதனை பரிசோதித்து வெற்றி கண்ட நீங்கள் இதற்கு வைத்த பெயர்தான் குவாண்டம் பிணைப்பு (Quantum entanglement). மன நிலையை எழுத்தில் பதிய வைக்க முடியாது என்பதால் ஏற்கனவே உங்களுக்கு தேவையான மன நிலையை அடைந்த ஒருவரை அணுகி, அவரின் அருகே இருந்து நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் முயற்சி சீக்கிரம் கைகூடும். இதற்கு முதலில் நீங்கள் வேறு ஒருவரை கண்டுபிடித்து அவருடைய மனநிலையுடன் பிணைய வேண்டும். இதனால்தான் உங்கள் உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் கூட்டுப்பிரார்த்தனை முறை உள்ளது. ஒரே நோக்கத்தோடு ஒரு குழுவாக செயல்படும்போது ஒரு சிலருக்கு மனநிலையை எளிதாக அடைய முடியவில்லை என்றாலும் கூட்டாக செய்வதனால் அது எளிதாக வசப்பட்டு விடும். ஏனென்றால் ஒன்றாக இருக்கும்போது ஒருவர் மூளை அலை மற்றவர்களுடனும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. மிகவும் பழக்கப்பட்ட மனநிலையில் உள்ள ஒருவர், வேறு ஒருவருக்கு அதனை துவக்கி வைப்பதற்கு பெயர் தான் தீட்சை, ஞானஸ்நானம், போதனை அல்லது initiation ஆகும். அவ்வாறு இல்லாமல் வெறும் எழுத்து, சொல் அல்லது இணைய காணொளி மூலம் அந்த மனநிலையைக் கொண்டு வருவது மிகவும் கடினமான காரியம். புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளதா? ஒரு குழந்தை ஒரு மொழியை எவ்வாறு கற்றுக் கொள்கிறது என்று பாருங்கள். அந்தக் குழந்தை தன்னைவிட மொழியில் அதிக திறன் கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிணைந்து தானாகவே தாய்மொழியை கற்றுக் கொள்கிறது அல்லவா? மூளை அலையை அவ்வாறு மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் ஒரு குழந்தையாக மாறிப் பாருங்கள்.
முடிவுரை
ஈர்ப்பு விசை தொடங்கி மனநிலை வரை உள்ள பல்வேறு மொழிகளை உங்களுக்கு இங்கே சுருக்கமாக ஐந்து பகுதிகளாக கூறிவிட்டேன். மொழி என்பதே இருவேறு பொருட்களை இணைப்பதற்காக தான் கட்டமைக்கப்பட்டது. மொத்த அண்டசராசரத்தையும் ஒன்றிணைக்கும் வல்லமை கொண்ட மொழி, பல்வேறு இடங்களில் பிரிவினைக்கும் வழிவகுக்கிறது. ஆனால் அதற்கு காரணம் மொழி அல்ல. மொழியை பற்றிய தவறான புரிதல்தான். நான் இங்கே கூறிய சில விஷயங்களால், புரிதலை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த மொழி அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.
(நான் சுழல்வேன்)
இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.