மின்கிறுக்கல்

நான்காம் பரிமாணம் – 37

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலம் என்னும் நான் அசை அதிகாரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் செயலுக்குள் இருக்கும் பல்வேறு உண்மைகளை உங்களுக்கு கூற ஆரம்பித்துள்ளேன். சென்ற பகுதியில் அசைவதற்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு உண்டான பதிலை இங்கு காண்போம்.

சூரியனின் அசைவும் உயிரும்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை சக்தியானது சூரியனில் இருந்துதான் வருகிறது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். சூரியனிலிருந்து வரும் வெப்பமும் ஒளியும் தான் செடிகளுக்கு உணவாக மாறி பின்பு  மிருகங்கள் செடிகளை உணவாக உண்டு உயிர்வாழ்கின்றன. பூமியில் கிடைக்கும் உணவு அனைத்துமே அனைத்துமே அடிப்படையில் சூரிய ஒளிதான். இங்கே ஓர் உயிர் இன்னோர் உயிரை உண்ணுவதை நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். அப்படியானால் செடிகள் உண்ணும் சூரிய ஒளிக்கு உயிர் உள்ளதா? இந்தக் கேள்விக்கான பதிலை விரிவாகக் கூறுகிறேன் கேளுங்கள். ஒரு பொருளுக்கு உயிர் இருக்கிறது என்று எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது தெரியுமா? அது தன்னிச்சையாக செயல்பட்டு, ஓர் உணவை தனக்காக வகுத்துக்கொண்டு அதனையே உண்டு பின்பு அதன் மூலமாக வேறு ஒருவிதமான சக்தியை வெளிப்படுத்தும் குணாதிசயம் உடையதாக இருக்கும். எந்த ஒரு செடிக்கும் மண்ணிலிருந்து தனக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டு சூரிய ஒளியின் துணைகொண்டு உணவு படைப்பது எப்படி என்று வேறு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. தன்னிச்சையாக அதுவே கண்டுபிடித்துவிடும். அது போலவே பிறந்த குழந்தைக்கும், பாலூட்டி மிருகங்கள் அனைத்திற்கும் தாயிடம் இருந்து பால் குடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க தேவையே இல்லை. இப்படி செயல்படும் குணம் கொண்ட அனைத்து வேதியல் பொருள்களுக்கும் உயிர் இருப்பதாக கருதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு பார்த்தால் சூரியன் கூட தன்னகத்தே உள்ள ஹைட்ரஜன் அணுக்களை உணவாக உட்கொண்டு அதிலிருந்து சக்தியை வெளிப்படுத்துகிறது அல்லவா? நீங்கள் பூமியில் ஹைட்ரஜன் அணுக்களை ஒரு குப்பியில் அடைத்துவைத்து அதனை சூரியன் போல் எரிய வைப்பது என்பது மிகவும் கடினமான காரியம். 

ஆனால் சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் அணுவானது வேறு எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் தானாகவே பிணைந்து சக்தியை வெளிப்படுத்துகிறது. இதுதான் உயிருக்கான முதல் அறிகுறி. இரண்டாவதாக, எந்த ஓர் உயிரும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்க முடியாது. அவற்றுக்கு முதலும் முடிவும் அவசியம். இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் தன்னிடம் உள்ள சக்தியை ஏதோ ஒரு விதத்தில் அது நகர்த்திக் கொண்டே தான் இருக்கும். இந்த நகர்வை தான் நீங்கள் உயிர் சக்தியாக உணர்கிறீர்கள் அல்லது பார்க்கிறீர்கள். சூரியனுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு என்பது நன்கு தெரிந்ததுதான். ஆனால் தனது ஆற்றலை எவ்வாறு நகர்த்துகிறது என்பது ஓர் ஆச்சரியமான விஷயம். சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்துடன் அதன் மேற்பரப்பிலிருந்து பூமியை வந்தடைந்து விடுகிறது. ஆனால் அந்த ஒளியானது சூரியனின் நடுப்பகுதியிலிருந்து மேற்பரப்பிற்கு வருவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் தெரியுமா?  சுமார் ஒன்றரை இலட்சம் ஆண்டுகள்!

சூரியனின் மையப் பகுதியில் தான் அணுக்கள் பிணைந்து சக்தியானது வெளிப்படுகிறது. இந்த சக்தி உடனடியாக சூரியனிலிருந்து அதன் மேற்பரப்பிற்கு வந்து விட முடியாது. மிகவும் அடர்த்தியான நிலையிலிருக்கும் பிளாஸ்மா கூழ் சூரியனின் உள்பகுதி முழுவதும் நிரம்பியிருக்கிறது. இவற்றை கடப்பது என்பது சாதாரணமான காரியம் கிடையாது. ஒளியால் காற்றில்லாத இடத்தில் தான் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். சூரியனுக்குள் அது நகரும் வேகம் என்ன தெரியுமா? ஒரு நிமிடத்திற்கு சுமார் ஒரு அங்குலம் மட்டும்தான்! இப்படியே அது கடந்து வர வேண்டிய தொலைவு மிக அதிகம். சூரியனை ஒரு பாத்திரமாக கற்பனை செய்துகொண்டால் அந்த பாத்திரத்தை நிரப்புவதற்கு 13 லட்சம் பூமி உருண்டைகளை உள்ளே போட வேண்டும். அவ்வளவு பருமனான ஒரு இடத்தை அங்குலம் அங்குலமாக கடந்து ஒளி அதன் மேற்பரப்பிற்கு வருவதற்கு தோராயமாக ஒன்றரை லட்சம் வருடம் எடுத்துக் கொள்கிறது. அதாவது உங்கள் மேல் படும் சூரிய ஒளியானது உருவாகி ஒன்றரை லட்சம் ஆண்டுகள் ஆகிறது!. 

இப்பொழுது இதனை மனித உடலுடன் ஒப்பிட்டு பார்க்கலாமா? சூரியன் எவ்வாறு ஹைட்ரஜன் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பொருளோ அதுபோலவே மனித உடல் என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மேலும் சில கனிமங்கள் கொண்டு கட்டப்பட்ட ஒரு சிக்கலான கட்டமைப்பு தான். இந்தத் தனிமங்கள் அனைத்துமே பூமியில் எளிதாக உங்களால் கண்டெடுக்க முடியும். ஆனால் இவற்றை நேரடியாக கலந்து ஒரு மனித உயிரை உங்களால் உருவாக்க முடியாது. ஆகவே அடிப்படையில் சூரியனும் மனித உடலும் ஒரு வேதியியல் பொருள் தான். இரண்டிற்கும் தொடக்கம் முடிவு ஆகியவை கண்டிப்பாக உண்டு. சூரியனில் எவ்வாறு தன்னுள் உள்ள பொருட்களை எரித்து சூரியன் சக்தியை வெளிப்படுத்துகிறதோ அதுபோலவே மனிதன் தன்னுள் உள்ள வேதியல் பொருட்களை எரித்து அதனை சக்தியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். மனிதன் தனது உடலுக்குள் சக்தியை எவ்வாறு சேமித்து வைத்துக் கொள்கிறானோ இதுபோலவே சூரியனும் தன்னுள் சக்தியை சேமித்து வைத்துக்கொண்டு ஒன்றரை இலட்சம் வருடங்கள் கழித்து வெளியிடுகிறது. இரண்டிலும் சக்தி வெளிப்பட்டு அதன் அசைவை நீங்கள் புரிந்து கொள்வதால் அதற்கு உயிர் உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள். அப்படியானால் உயிர் என்பது இங்கு அசைவு தானே? 

அசைவு என்பதை உயிர் என்று வைத்துக் கொண்டால்கூட அது அசைவின் முழுமையான விளக்கமாக இருக்காது. அசைவு என்பதுதான் மொத்த அண்டசராசரத்தின் சரித்திரமாக மாறுகிறது. அது எப்படி என்று அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

Exit mobile version