மின்கிறுக்கல்

ஊழ் (10)

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

அலைபேசியில் எதிர்முனையில் பேசுவது, இல்லை இல்லை அமுதனை வசவு மழையால் நனைத்துக்கொண்டிருப்பது மதுவின் அண்ணன். சா.மு.க கட்சியில் வட்ட செயலாளரோ ஏதோ பொறுப்பில் இருக்கிறான்.

அமுதனின் திருமணத்தின்போது இவனுக்கு இவனே வைத்துக்கொண்ட பேனர்கள்தான் அதிகம். பந்தியில் அவர்களின் உறவினர்களைவிட இவன் கட்சி கரைவேட்டிகள் தின்று தீர்த்ததுதான் அதிகம். யாரிடமும் அவன் சாதாரணமாகப் பேசிப் பார்க்கவே முடியாது. அதட்டலும் உருட்டலும் மிரட்டலும் கலந்த தற்பெருமை தான் பேச்சு முழுவதிலும் நிறைந்திருக்கும்.

அமுதனின் மாமனாருடன் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக அவன் இல்லை. இரண்டுதெரு தள்ளி தனியாக வீடுகட்டிக்கொண்டு அவன் குடும்பத்தோடு வாழ்கிறான். இப்போது இங்கிருக்கிறான் என்றால் ஏதோ கேள்விப்பட்டுதான் வந்திருக்கிறான். அவன் பேசுவதிலிருந்தே அவர்களின் கோபத்தை அமுதன் புரிந்துகொண்டான்.

“மச்சான் கொஞ்சம் சொல்றத கேளுங்க ப்ளீஸ்” என்று அவனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

“மச்சான் கிச்சான்னா அறுத்து போட்ருவேன் நாயே… நான் சொல்றத நீ கேளுடா. மரியாதையா வந்து உனக்கும் என் தங்கச்சிக்கும் எதுவும் இல்லை, இனிமேல் அவ வாழ்க்கைல தலையிடமாட்டேன்னு எழுதிகொடுத்துட்டுப் போய்கிட்டே இரு.. இல்லை நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டி எறிஞ்சிறுவேன்.”

“கொஞ்சம் சொல்றத கேளுங்க. மது ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு வந்துட்டா. நான் அவகிட்ட கொஞ்சம் பேசலாமா?”

“என்ன…? தப்பா புரிஞ்சுகிட்டாளா? உன் வண்டவாளம் எல்லாம் இங்க தண்டவாளம் ஆகிடுச்சுடா பொறம்போக்கு நாயே. நீ கண்ட முண்டை கூட சுத்துன போட்டோ எல்லாம் பாத்ததுக்கு அப்பறமும் நீ நல்லவன்னு நம்புறதுக்கு நாங்க என்ன கேனைப் பயகன்னு நினைச்சியா?”

அமுதன் சொல்லும் எந்தப் பதிலையும் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் கூட அவனில்லை. அமுதன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். எதிர்முனையில் வார்த்தைகள் தடித்துக்கொண்டே சென்றன, அவன் அமுதனின் அம்மாவையும் அக்காவையும் மாறிமாறித் திட்டினான்.

அமுதனின் கோபமும் தன்மானஉணர்வும் அவன் இதயத்தை வெகுவாகத் தாக்கியிருக்க வேண்டும். மதுவின் வீட்டில் இருக்கும் யாரும் இப்போது அமுதன் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை. அதற்குமேல் தொடர்ந்து திட்டுவாங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டு கையை பின்னந்தலையோடு கட்டிக்கொண்டு என்னசெய்வது என்று யோசிக்கத் தொடங்கினான். திரும்பிய திசை எல்லாம் இருள். இருள் மட்டுமே சூழ்ந்து இருந்தது, எங்காவது ஒரு சிறு ஒளி தெரியும் என எல்லாத் திசைகளிலும் சிந்தித்தான்.

மது வீட்டில் சொல்லிவிட்டாள். இப்போது அவர்கள் அனைவரும் அமுதன்மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அவனை மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று பார்ப்பவர்களுக்கு எல்லாம் அறிமுகம் செய்து வைத்தவன் இன்று கொலைவெறியில் திட்டிக்கொண்டே இருக்கிறான். புதிதாய் நட்ட செடி ஒன்று பூக்கும் தருவாயில் வாடிச் சாவதைப்போல அவர்கள் உறவில் வாட்டம் வந்துவிட்டது. இந்த வாட்டம் அவர்கள் உறவை மரிக்க வைத்துவிடக் கூடாது என்பதுதான் அவனுடைய ஒரே வேண்டுதல். என்ன இருந்தாலும் திருமண பந்தம் என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என முடியக்கூடியதல்ல. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் மதுவை சந்தித்துப்பேச கிடைத்தால் போதும் கண்டிப்பாக அவள் அவனைப் புரிந்துகொள்வாள் என்று அவன் நம்பினான்.

“நான் யாரையும் வேண்டுமென்று ஏமாற்றவில்லை. ஆன்ட்ரியாவுடன் சுற்றியது உண்மைதான். ஆனால் அப்போது மது எனக்கில்லை. மது வந்தபோது ஆன்ட்ரியாவுடன் நான் சுற்றவில்லை. நான் நிச்சயமாக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. அவர்களைப் பற்றிய உண்மைகளை மட்டும் மற்றவர்களுக்கு கூறாமல் மறைத்தேன் அதில் தவறு என்ன இருக்கிறது? இது என்னுடைய சுயநலத்திற்காக மட்டுமல்ல; மதுவின் வாழ்க்கைக்காகவும் தான். இப்படி ஒரு உண்மை தெரிந்தால் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியுமா? அதனால்தான் சொல்லவில்லை ஆனால் இப்போது எல்லாம் தெரிந்துவிட்டது. ” அவன் மனம் அவன் பக்கத்து நியாயதைக் கூறி அவனைத் தேற்ற முயற்சி செய்தது.

உண்மையில் ஆண்ட்ரியா சொன்ன அத்தனையும் உண்மையாக இருந்தால் அவன் எவ்வளவு பெரிய பாவம் செய்தவன். தன் சொந்த மகளுக்காக மாதம் ஒரு இருநூறு வெள்ளி கூட அனுப்ப முடியாது என ஆண்ட்ரியாவைத் திட்டித் தீர்த்தவன். அவளுக்கு செய்த எதுவுமே அவனுக்குத் துரோகமாகப் படவில்லை. எந்த ஒரு பெரிய வருமானமும் இல்லாமல் எப்படி ஒரு பெண் தனியாக பிள்ளையை வளர்ப்பாள் என்ற அக்கறையும் இல்லை. அவனைப் பொறுத்தவரை அவன் எந்தத் தவறும் செய்யவில்லை. அவன் மனம் அவனுக்கு அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் ஊழ் அப்படியிருப்பதில்லை அது அவரவரின் வினைக்கு ஏற்றப் பரிசைத் தந்துகொண்டே தானிருக்கும்.

“இனி இதை நான் என் வீட்டில் சொல்லியாக வேண்டும். என்னவென்று சொல்வது? நான் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு மங்கையுடன் திருமணத்திற்குமுன் சுற்றித்திரிந்தேன், எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது இப்போது மதுவுக்கு தெரிந்துவிட்டது. சொல்ல முடியுமா? சொன்னால் என்ன நடக்கும்? என் தாயின் இதயம் நொறுங்கி விடாதா? என் மீது எவ்வளவு நம்பிக்கை அவளுக்கு… என்னை யாரும் ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டாள். எனக்காவே அவள் சொந்த அண்ணனைப் பகைத்து என் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறாள். அவள் அண்ணன், என் மாமா அவர் தங்கைக்காக எதுவும் செய்யக்கூடியவர். எனக்கு விவரம் தெரிந்து என்னையோ என் அக்காவையோ அவர் ஒருமுறைகூட அதட்டிப் பேசியதில்லை நாங்கள் என்ன செய்தாலும் எங்களைப் பொறுத்துக்கொள்வார். கேட்பதை வாங்கித் தருவார்.”

“ஐயோ என் அக்கா, அவள் கணவர் அவர்கள் பிள்ளைகளை என்னிடம் பேச அனுமதிப்பார்களா? இவன் ஒழுக்ககேடானவன் பெண் பித்தன் இவனுடன் பேசினால் பிள்ளைகள் கெட்டுப் போய்விடும் என்று ஒதுக்கிவிடுவார்களா? ஊரில் உள்ளவர்கள் என்ன பேசுவார்கள்? இனி குழாயடிச் சண்டையில்கூட என் ஒழுக்கம் தெருவுக்கு இழுக்கப்படுமே! என் குடும்பத்திற்கே எவ்வளவு பெரிய அவமானத்தைத் தேடி தந்துவிட்டேன். இது எப்படி முடியும்? எங்களுக்குள் விவாகரத்து ஆகிவிடுமா? மது அதைத்தான் விரும்புகிறாளா? இத்தனை நாள்கள் அவள் என்மீது கொண்ட அன்பு அத்தனையும் என் வாழ்க்கையில் என்றோ நான் செய்த ஒரு சிறு தவறு மொத்தமாகத் தின்றுவிட்டதா? “

தெளியும் வாய்ப்பே இல்லாமல் குழம்பிக்கொண்டிருந்தான். பசியே மறந்து போகுமளவிற்கு எண்ணக்குவியல்கள் வாயுவாக மாறி அவன் வயிற்றை நிறைத்திருந்தது. இப்படியே மரணித்து விடு மரணித்து விடு என்று அவனுள் ஒளிந்துகொண்டு யாரோ தூண்டிக்கொண்டே இருந்தார்கள்.

மது அவன்மீது மெல்லப் படர்ந்தாள் அவளின் உடலின் மென்மை அவனுள் பரவியது. அவனைக் கட்டியணைத்து மெத்தைமீது சாய்த்தாள். அவள் கண்கள் சிவப்பாக இருந்தன அவன் வயிற்றில் அமர்ந்துகொண்டு நெஞ்சில் கை வைத்தாள் அந்தக் கையை அவன் நெஞ்சின் ரோமங்களுக்குள் புகுத்தி மெதுவாக மேலே ஏற்றி கழுத்தை நெரித்தாள். அவனுக்கு இருமல் வருவதுபோல் இருந்தது. கழுத்தில் இறுக்கம் அதிகமாகி கண்கள் பிதுங்கின. அவளைக் கீழே தள்ள முயன்றான் அவள் இறங்கவில்லை. இடது கையால் கழுத்தை அழுத்திப்பிடித்துக்கொண்டு வலது கையால் அவன் கன்னங்களில் மாறிமாறி அறைந்தாள். “ஏன் என்னை ஏமாற்றினாய்? ஏன் என்னை ஏமாற்றினாய் ? பாவி சண்டாளா….” அறை கன்னங்களில் மாறி மாறி விழுந்துகொண்டே இருக்கின்றன. வலி உடல் முழுவதும் பரவுகிறது. ஆனால் இப்போது அவனை அறைந்துகொண்டிருப்பவள் ஆண்ட்ரியா. ஆம் ஆண்ட்ரியா இவள் எப்போது இங்கு வந்தாள்? அறை நிற்கவேயில்லை. அவன் கன்னங்கள் சிவந்து உதடு தெறித்து இரத்தம் வழிந்தது. அறை நிற்கவேயில்லை.

“நீ எனக்கு வேண்டாம் உன்னிடமிருந்து எப்படியாவது நான் தப்பித்துக்கொள்ள வேண்டும். போ…. போ… போய்விடு… என்னை விட்டுவிடு” அமுதன் கத்திக்கொண்டே ஆண்ட்ரியாவைப் பிடித்துத் தள்ளிவிட்டு எழுந்துகொள்ள முயற்சி செய்தான் முடியவில்லை. அவள் கனம் கூடிக்கொண்டே சென்றது. அவனுக்கு மூச்சுத்திணறல் அதிகமானது.

“ஐயோ என்ன இது? நான் சாகப்போகிறேன்… நான் சாகப்போகிறேன்…. சாகும்முன் நான் செய்த பாவங்கள் என்னைப் பழி தீர்க்கின்றனவா? ” கத்தினான். அவன் உடல் முழுவதும் நனைந்திருப்பதை உணர்ந்தான்.

ஆம் இடப்புறக் கன்னத்தில் எச்சிலோ வியர்வையோ தெரியவில்லை கன்னம் முழுவதும் நனைந்திருக்கிறது. கையை வைத்துத் துடைத்துக்கொண்டு வேகமாக எழுந்தான். உடல் முழுவதும் வியர்த்திருந்தது மின் விசிறியைக்கூட போடாமல் இருந்திருக்கிறான். விழித்துகொண்டிருந்தால் மட்டுமல்ல, தூங்கினாலும் அவனை விடாமல் துரத்தியது அவன் ஊழ். ஓட முடியாமல் அவன் அறைக்குள்ளேயே ஒளிந்துகிடகிறான்.

தூரத்தில் உயிரற்றுக் கிடந்த அவன் அலைபேசி லேசாக அசைந்து ஒளிவீசியது….

************************************** 

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

************************************** 

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 11

Exit mobile version