மின்கிறுக்கல்

2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவ்வாண்டு வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முக்கியமான (என் பட்டியலுக்குட்பட்ட) திரைப்படங்களை வரிசைப்படுத்தி பரிந்துரைப்பேன். இதில் சில உடன்பாடுகளும் முரண்களும் இருக்கக்கூடும். இது தரவரிசை அல்ல; என் வரிசை மட்டுமே. கலை வெறும் பொழுதுபோக்குக்கான வணிகம் மட்டுமல்ல; கலை வாழ்வின் குரல்; பதிவு செய்வதன் மூலம் மனிதர்களையும் வாழ்வியலையும் தமக்குள் செதுக்கிக் கொள்ளும் கலை வடிவம் சினிமா.

முக்கியமான படங்கள் பெரும்பாலான நேரத்தில் கவனிக்கப்படாமலேயே போவதுண்டு. இதுபோன்ற விமர்சனப் பட்டியல் அத்தகைய படங்களுக்கான கவனத்தைப் பெற்றுக் கொடுக்கும். 2021ஆம் ஆண்டு வெளிவந்த 191 திரைப்படங்களில் சமூகப் பாராட்டையும் தீவிர விமர்சகர்களின் விமர்சனத்தினையும் கருத்தில் கொண்டதோடு எனது தனிப்பட்ட இரசனைக்கு உட்பட்டும் இப்பட்டியலைத் தயார் செய்துள்ளேன்.

01. ஜெய் பீம்

விழுப்புர மாவட்டத்தின் மலை கிராமத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை பழங்குடி மக்களான இருளர்களின் மீதேறி நிற்கும் அதிகார வர்க்கத்தின் குரூர ஆதிக்க மனநிலையை இப்படம் கவனப்படுத்தி கலையாக்கியுள்ளது. ஞானவேல் இயக்கி சூர்யா நடித்திருக்கும் இப்படம் இவ்வாண்டின் சிறந்த படமாக அறிவிப்பதில் மகிழ்கிறேன். (இப்படத்தின் மீது சில விமர்சனங்களும் உண்டு).

எலி, பாம்பு பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் இருளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையும் சுரண்டலும் படத்தின் குரலாக ஒலிக்கிறது. சட்டம் ஒரு வலிமையான ஆயுதம்; அதைப் பயன்படுத்துவர்களின் பொருத்தே அதன் நீதித்தன்மை உருவெடுக்கிறது. நீதியரசர் எனப் போற்றப்படும் வழக்கறிஞர் சந்துரு அவர்கள் பார்வதிக்காக நடத்திய சட்டப் போராட்டத்தினை மையமாகக் கொண்டே இப்படத்திற்கான கதை உருவாகியுள்ளது. காவல்துறை விசாரணையில் ராஜாக்கண்ணுக்கும் மற்ற மூவருக்கும் நிகழ்த்தப்படும் லோக்காப் சித்ரவதைகள் அனைத்தும் மனித உரிமைக்கு எதிரானவை; மனத்தைப் பதைபதைக்க வைக்கின்றன.

எளிய மக்களின் மீதான காவல்துறையின் மனித உரிமை மீறல்களை இத்தனை உண்மைத்தன்மையுடன் படமாக்கியிருக்க முடியுமா என்பதே ஆச்சரியப்பட வைத்தது. அந்தோணிசாமி என்கிற உண்மை பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என்பதும் இப்படத்தின் மீதான விமர்சனமே. அதே சமயம் பாதிகப்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த பார்வதி என்பரின் பெயரும் செங்கேணி என மாற்றப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைப் படக்குழுத்தான் தெரிவிக்க வேண்டும்; பார்வையாளன் அல்ல.

ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களைச் சட்டமும் அரசும் எப்படி நடத்தியுள்ளது என்பதற்கான உண்மையை இப்படம் கலையின் வாயிலாக உலகுக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஒரு சினிமாவால் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியுமா எனத் தெரியவில்லை; ஆனால், பழங்குடி மக்களின் மீதிருந்த பொதுப்புறகணிப்புகளைப் பொதுமக்களின் மனத்திலிருந்து நீக்குவதற்காகவாவது குரலற்றவர்களின் குரலாக கலை செயல்படும் என நம்புகிறேன்.

இப்படத்தினை அதன் கலை நேர்த்திக்காகவும் சமூக அக்கறைக்காகவுமே முதலிடத்திற்குத் தெரிவு செய்கிறேன்.

02. மண்டேலா – அரசியல் விமர்சனம்

மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த மண்டேலா படம் எனது பட்டியலில் இரண்டாம் நிலையைப் பிடிக்கிறது. சமக்கால அரசியல் சூழலைக் கேலி செய்யும் வகையில் விமர்சித்து வெளியாகியிருக்கும் இப்படம் ஜனநாயக உரிமையை மட்டும் அல்லாது அரசியல் சிதைவுகளையும் இணைத்துப் பேசியுள்ளது.

அரசியலை விமர்சிக்கும் பாணியில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் அதனை ஒரு நையாண்டி பாணியில் கொண்டு சென்று மக்களை இரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்துள்ளார் இயக்குநர். ஊராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கும் இரண்டு முக்கியமான நபர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் யோகி பாபுவின் ஓட்டை விலை பேசுவதில் ஏற்படும் சிக்கல்கள், படத்தின் மையமாக நகைச்சுவை பாணியில் சொல்லப்பட்டுள்ளது.

ஓர் ஓட்டின் மீதுள்ள வலிமை ஒரு கிராமத்தின் எதிர்காலத்தையே மாற்றுகிறது என்றால் நாட்டின் போக்கையும் மாற்றும் வல்லமை ஓட்டுரிமைக்கு உண்டு என்பதே படம் தமது விமர்சனமாக முன்னெடுத்துள்ளது. அதனைப் பிரச்சாரமாகச் சொல்லாமல் ஒரு நகைச்சுவை கதையாக நிகழ்த்தி படம் வெற்றி பெற்றுள்ளது.

யோகி பாபுவை ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டுமே பார்த்துப் பழகிய தமிழ் சினிமா இரசிகர்களுக்கு நகைச்சுவையைத் தாண்டி நடிக்கவும் முடியும் என்பதற்கான தளத்தை முழுவதுமாகக் கொடுத்ததும் இப்படம்தான். சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்த தர்மபிரபு படம் சம்பாரித்துக் கொண்ட மோசமான விமர்சனங்களை முறியடிக்க மண்டேலா அவருக்குக் கைகொடுத்துள்ளது எனலாம்.

சிறுவனாக நடித்திருக்கும் கிருதா, ஷீலா ராஜ்குமார் எனப் படத்தில் நடித்திருக்கும் அனைத்துத் துணை நடிகர்களும் படத்தைச் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்து உயர்த்தியுள்ளனர். இசை, ஒளிப்பதிவு, கிராமச் சூழல் என அனைத்திலும் கதைக்கேற்ற உழைப்பும் நேர்த்தியும் தெரிகின்றன. மண்டேலா ஒரு குடிமகனின் ஓட்டுரிமைக்குப் பின்னாலுள்ள அரசியலைப் பேசும் படம்.

03. மாடத்தி

எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின் இயக்கத்தில் அஜ்மினா காசிம், செம்மலர் போன்றவர்கள் நடித்துப் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள படம் இவ்வாண்டின் மிக முக்கியமான படவரிசையில் சேர்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளைத் துவைப்பதைக் குலத்தொழிலாகக் கொண்டிருக்கும் புதிரை வண்ணார்களின் வாழ்வியல் தருணங்களின் தொகுப்புதான் மாடத்தி.

மேலாதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்டு வாழும் மக்களாலே மேலும் அழுத்தப்படும் அதைவிட எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாமல் சிறுபான்மையினராக வாழும் புதிரை வண்ணார்களின் சிக்குண்ட வாழ்க்கையின் பெருந்துயரப்பாடல் மாடத்தி.

வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது வயதுக்குரிய துள்ளலும் ஆர்வமும் மிகுந்து உலகத்தைக் காண வேண்டும் என்கிற அகத்தாவலுடன் எம்பி பாய்கிறாள்; பாய்ந்த அவள் மேலாதிக்க சாதியினரின் குரூர பசிக்கு இரையாகி மீண்டும் நிலத்தில் விழுந்து மாடத்தி என்கிற சிறுதெய்மென உருவெடுக்கிறாள். உண்மையில் மாடத்தி பெருந்தெய்வமாகிவிடுகிறாள் என்பதே கலை நமக்களிக்கும் தரிசனம்.

நாம் இயக்கும் படைப்பிற்கு நாம் எத்துணை உண்மையாக இருக்க முடியுமென்பதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் மாடத்தி. எவ்வித வணிக சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் கதையை அதன் உண்மைத்தன்மையுடன் இயக்கியுள்ளார். லீனா மணிமேகலை தமிழ் இலக்கிய சூழல் நன்கறிந்த தீவிரப் படைப்பாளி. கலையின் வழியாக அவர் சென்றடையும் சமூகம் இந்த நிலத்தில் அழுக்குத் துணியைப் போல அடித்துத் துவைத்துச் சிதைத்துக் காலுக்குக் கீழே வைக்கப்பட்டவர்களின் அகம். அதை ஒரு படைப்பாக விரித்துக் காட்டிச் சென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு உருவான படைப்பு என்றாலும் 2021ஆம் ஆண்டே அதிகாரப்பூர்வமாக OTT தளத்தில் வெளியீடு கண்டது. இதுபோன்ற தார்மீகமான படைப்பிற்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை அதனைப் பார்த்து உரையாடுவதன் மூலம் படைப்பாளிக்குத் துணை நிற்பதே.

04. கடைசீல பிரியாணி

மலையாள இயக்குநரான நிஷாந்த் களிதிண்டி இயக்கத்தில் வசந்த் செல்வம், விஜய் ராம் (சூப்பர் டிலாக்ஸ்), விஜய் சேதுபதி (கௌரவ வேடம்) போன்றோர் நடித்துத் தமிழிலும் குரலாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள இப்படம் கலை நேர்த்தியுடன் தீவிர கலை இரசிகர்களுக்கான ஒரு பிரியாணி விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

மூன்று சகோதரர்கள் தம் அப்பாவைக் கொன்றவனைப் பழித் தீர்க்கக் கேரளாவின் ஓர் அடர்ந்த காடு சூழ்ந்த தனித்த வீடொன்றிற்குச் செல்கிறார்கள். கடைசி சகோதரனான விஜய் ராமிற்குப் பழித் தீர்ப்பதில் விருப்பம் இல்லை. ஆனால், அப்பாவின் கொலைக்குக் காரணமான அவனைத் தேடிக் கொலை வெறியுடன் வந்து சேரும் மற்ற சகோதரர்கள் அவர்களின் கடைசி தம்பியை அடித்து மிரட்டி அவனுக்குள் வன்முறையை ஏற்ற முயல்கிறார்கள். அவர்கள் மூவரும் இணைந்து பழித் தீர்க்கத் தேடி வந்தவனைக் கொன்றார்களா கொன்ற பின் இவர்கள் என்ன ஆனார்கள் எனப் படம் நெடுக மர்மங்களும் மரணங்களும் பிணைந்தபடி ஆக்ரோஷத்துடன் நகர்கிறது.

விஜய் சேதுபதி கதைச்சொல்லியாக இந்த வித்தியாசமான ஒரு கதைக்களத்தினைச் சொல்ல, ஒரு இம்மிக்கூட கவனம் பிசகாமல் கதையைப் பின்தொடர வைக்கும் அற்புதமான ஒளிப்பதிவும், இயற்கை ஒலிகளும் காட்டின் பேரமைதியும் ஒன்றிணைந்து படத்திற்குள் நம்மை ஈர்த்துச் செல்கின்றன.

இப்படத்தின் அறம் என்ன என்பதெல்லாம் தாண்டி மனித வாழ்க்கையினுள் அடர்ந்து மௌனத்திருக்கும் வன்மமும் வெறியும் கொண்ட மிருகத்தனங்களையே இயக்குநர் காட்சிப்படுத்த முயன்றுள்ளார். நாம் ஒரு சமாதானத்திற்காக வகுத்துக்கொள்ளும் சமூக அறத்தினைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் காட்டாறு போல அடித்துச் செல்லும் வாழ்வின் வரையறுக்காத நிதர்சனங்களின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது படம். வாழ்க்கை அதன் போக்கில் தம்மைச் சமன்படுத்திக் கொள்கிறது. யார் இருக்க வேண்டும் யார் இறக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் யாவையும் இயற்கை மௌனமாகத் திட்டமிடுவதாகவே இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது உணர்ந்துகொள்ள முடிந்தது.

திரையாக்கத்திலும் காட்சிமொழியிலும் இந்த மலையாளப் படம் இவ்வாண்டின் சிறந்த புனைவு என்பதில் சந்தேகம் இல்லை. கலை என்பது மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு தரிசனமாகவே நான் உணர்கிறேன்.

05. கர்ணன்

நாவலாசிரியர், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் கர்ணன். அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழும் ஒரு சமூகத்தின் குரல்தான் கர்ணன். சாதிய வேறுபாடுகளைக் காரணம் காட்டி மேலாதிக்கம் படைத்தவர்களால் தொடர்ந்து ஒடுக்கப்படும் அடித்தட்டு மக்களின் வலியையும் அதனுள் உறைந்து கிடக்கும் துயரங்களையும் மாரி இப்படத்தில் சத்தமாகவே சொல்லியிருக்கிறார். அது எதிர்ப்பின் குரலாக வடிவெடுத்துச் செல்கிறது.

தனுஷ் என்கிற நடிகருக்குத் தமிழ் சினிமாவில் மாஸ் கதாநாயகன் என்கிற ஓர் அடையாளம் இருந்தாலும் வெற்றிமாறன் வழியாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் பாத்திரங்களும் அவருக்குத் தேசிய விருதுகளையும் பாராட்டையும் கொண்டு வந்து சேர்க்கிறது. ஒரு நல்ல கலைப் படைப்பிற்காக தம்மை ஒப்புக் கொடுக்கும் எந்தக் கலைஞனும் வெற்றி பெறுவான். அதற்கு இன்னொரு சான்றாக கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பு நிரூபித்துள்ளது.

கால் கட்டப்பட்ட கழுதை என்பது அடக்குமுறையின் குறியீடாகவும் நிற்காத பேருந்தினால் உயிரிழந்து போகும் தங்கையின் ஆன்மா இழப்பின் குறியீடாகவும் படம் நெடுக பயணிப்பது சாதிய அடக்குமுறையின் இரு வேறு கோரச் சாயல்கள் என்றே வகைப்படுத்தலாம். அதனைக் கூர்மையுடன் இயக்குநர் கதைக்குள் சேர்த்துள்ளார்.

அதீத வன்முறை காட்சிகள், ஊகிக்க முடிந்த கதையின் நகர்ச்சி என்பதைத் தவிர வேறு குறைகள் இப்படத்தில் இல்லை என்றே சொல்லலாம். தம் சமூகத்திற்கான அறத்தை நோக்கி அம்பெய்து போரிடும் கர்ணன்.

06. ராக்கி

அரூண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா போன்றோர் நடித்து வெளிவந்துள்ள படம் ராக்கி. வன்முறை சார்ந்த கதைகள் பெரும்பாலும் பழி வாங்கல் என்கிற ஒரு வரியைத் தொற்றிக் கொண்டுத்தான் பயணிக்கும். அதே டெம்ப்ளட்டில் உருவாகியிருக்கும் கதை என்றாலும் அதைத் திரைக்கதை ஆக்கிய விதத்திலும் எங்கேயும் தேய்வழக்குகளை/வணிக நோக்குகளை நம்பியில்லாமல் தனித்துவமாக படைத்த விதத்திலும் இப்படம் கவனம் பெறுகிறது.

ஒளிப்பதிவு, கலை, இசை, நடிப்பு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன. படத்தின் காட்சிகள் அனைத்தும் அகவயமாக படத்தின் சாரத்தை விரிவாக்குவதிலேயே கவனத்தைக் குவிக்கின்றன. தேவையற்ற காட்சிகள் என எதையுமே சொல்ல முடியாத அளவில் படம் இயக்கப்பட்டுள்ளது. கதை ஒரு சராசரியான கதையாக இருந்தாலும் அதை அ-நேர்கோட்டில் சொன்ன விதத்திலும் பின்னணியிலுள்ள உழைப்பிற்கும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

வன்முறை, வன்மத்தை வளர்த்துச் செல்கின்றது என்கிற நிதர்சனத்தின் சத்தமான குரல்தான் ராக்கி.

07. மேதகு

இயக்குனர் கிட்டு இயக்கத்தில் குட்டிமணியும் இன்னும் பலரும் நடித்து வெளிவந்த படம் மேதகு. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் துவக்கக்கால வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட இப்படம் ஒரு கலை படைப்பாக நடிகர்கள் தேர்வு, திரைக்கதை, கலை, ஒளிப்பதிவு, வரலாற்று மீளுருவாக்கம், பின்னணி இசை என அனைத்திலும் சிறந்த முறையில் இயக்கப்பட்டுள்ளது.

தமிழ்விரோத சட்டங்கள், இனப்பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள், பேரினவாதத்திற்கு எதிரான போராட்டங்கள், அரசியல் ஒப்பந்தங்கள், அதில் உருவான முரண்கள் என இப்படம் ஒரு புரட்சி எப்பொழுது, எப்படித் தோன்றுகிறது என்பதனைக் கவனப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. அதனை உண்மைக்கு நெருக்கமாக ஒரு கலை படைப்பாக உருவாக்குவதில் இயக்குநரும் படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கை வரலாற்றை தெருக்கூத்துப் பாணியில் சொன்னது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நாட்டுப்புறக் கலையின் வெளிப்பாட்டு உச்சமாக மேதகு ஒலிக்கின்றது.

துணை நடிகர்கள் இன்னும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கலாம் என்பதைத் தவிர வேறு விமர்சனங்கள் இல்லை.

08. மாறா

திலிப்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் உருவாக்கும் மன அலைகள், படம் நெடுகிலும் ஓர் இசையின் பொறுமையும் பொறுப்பும் ஒருங்கிணைந்தது போன்ற பிரமிப்பில் நகர்கின்றன. வாழ்க்கையின் சுவாரஷ்யமான பயணங்களை முடித்துவிட்டு வந்த நிறைவை இப்படம் வழங்குகிறது. ஓர் ஓவியத்தையும் அதனுள் விரியும் சிப்பாய் கதையையும் பின் தொடரும் ஒரு பெண்ணின் அக/புற நகர்தலிலேயே கதை சிம்பனி இசைக்கூட்டணியைப் போன்று உணர்வுகளின் கூட்டுத்தொகுப்பாக செல்கிறது.

வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் பயணங்கள், பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் நம்மை இன்னும் ஆழமாகத் திறந்துகொள்ள வாய்ப்பாக மாறிவிடக்கூடும் எனும் மகத்தான உண்மையை இப்படம் காட்டுகிறது. மாதவன், ஷிவதா நாயர் ஆகிய இருவரும் பயணத்தில் வழியே ஓர் அற்புதமான தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் வெவ்வேறு திசையில் பயணித்து அலைந்து திரிந்துவிட்டு இன்னொரு பயணத்தில் இணைகிறார்கள்.

படத்துடன் நாம் கொள்ளும் அகப்பயணம் அழகியல் அனுபவம் என்றே சொல்லலாம். படத்தில் வரும் சிப்பாய் மீன் கதையும் சுவர் ஓவியங்களும் கூடுதல் இரசனையையும் ஓர் இரம்மியமான இரசிப்புத் தன்மையையும் கூட்டுகின்றன.

படத்தில் நடித்த அனைத்து கதைமாந்தர்களும் வழங்கப்பட்ட பாத்திரத்தின் அளவு மிகாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ஷிவதாவின் நடிப்பு இப்படத்திற்குக் கூடுதல் பலம். அவர் வரும் காட்சிகளிலெல்லாம் ஓர் உயிரோட்டத்தை வழங்கிச் சென்றுவிடுகிறார்.

09. வினோதய சித்தம்

சமூத்திரக்கனி இயக்கி தம்பி இராமையா நடித்திருக்கும் படமான வினோதய சித்தம் அனைவருக்குமான படைப்பாக மாறி சமூகத்தில் வரவேற்பைப் பெற்றிருந்தது எனலாம். ஒரு வகை அமானுடமும் ஆன்மீகமும் கலந்து உருவான படைப்பாகவும் இப்படத்தை உணரலாம்.

ஒரு நடுத்தர வயத்தை ஒத்திருக்கும் ஒருவர்தான் கதையின் நாயகன். அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. குடும்ப யதார்த்தங்களைக் காட்டியதோடு மட்டுமல்லாமல் தம்பி இராமையா, சமூத்திரக்கனி, துணை நடிகர்கள் என அனைவரின் நடிப்பும் படத்திற்கு உயிரூட்டியுள்ளன எனலாம்.

ஒரு நவீன மனிதன் உறவுகளிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டு இயந்திரத்தனமாக ஓடி கழியும் வாழ்க்கையின் மீது இப்படம் விமர்சனத்தைப் பிரச்சாரமாக வைக்காமல் ஒரு சுவார்ஷ்யமான உணர்தலாகவே வைத்துள்ளது. பெரும்பாலும், சமூத்திரக்கனி நீளமான உரையாடல்களைக் கொண்டு அயர்ச்சியை உண்டாக்குகிறார் என்கிர புகார் உண்டு. ஆனால், அவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட படம் இது. உரையாடல்கள் கூர்மையாகவும் கச்சிதமாகவும் இடம் பெற்றிருப்பதே இப்படத்தின் தனிச் சிறப்பென்று சொல்லலாம்.

10. மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவும் எஸ்.ஜே சூர்யாவும் நடித்திருக்கும் படம் மாநாடு. Time Loop என்பது காலத்தோடு தொடர்புடைய ஓர் அறிவியல் ஊகம். இந்த ஊகத்தைப் பயன்படுத்தி முதலில் உருவான படம் ஜெர்மன் மொழியில் இயக்கப்பட்ட Run Lola Run எனும் திரைப்படமாகும். அதன் பின்னரே இந்தப் பாணியில் மற்ற மொழிகளிலும் படங்கள் வந்து கவனம் பெறத் துவங்கின. ஒருவன் தனது ஒரே நாளுக்குள் சிக்கிக் கொண்டு இறந்து மீண்டும் அதே நாளின் தொடக்கத்திற்கு வருவதுதான் Time Loop என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். அவனது மரணத்தைத் தடுத்தால் மட்டுமே அவனால் அடுத்த நாளுக்குள் செல்ல முடியும்.

ஆக, டைம் லூப் என்பதற்குள் சிக்கிக் கொண்டவன் இறக்காமல் இருக்க வேண்டும்; அவன் இறக்கக்கூடாது என்றால் அவனது அன்றைய நாளின் சம்பவங்களை அல்லது உபச்சிக்கல்களை மாற்ற வேண்டும் அல்லது அதன் நிரலில் ஒளிந்திருக்கும் அடுக்குகளைக் கலைக்க வேண்டும். ஒருவன் இறந்து இறந்து இவையனைத்தையும் புரிந்துகொண்டு மீண்டும் வந்து கலைந்தாக வேண்டும்.

இத்திரைப்படத்தின் முதல் கதாநாயகன் எடிட்டர் KL Praveen தான். கொஞ்சம் பிசகினாலும் திரைக்கதை பிடிபடாமல் போக வாய்ப்புள்ள ஒரு Time Loop Template-ஐ எளிய மக்களும் பார்த்துக் கொண்டாடி மகிழும் வகையில் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளார். இதுபோன்ற Time loop கதைகள் மக்களுக்குச் சலிப்பூட்டவும் வாய்ப்புண்டு. நடந்த ஒரே மைய சம்பவமே மீண்டும் பலமுறை நிகழும்போது இயக்குனரின் எழுத்தை முழுமையாக உள்வாங்கி காட்சிகளை மக்களின் ஆர்வத்தை மிகுதியாக்கும் பாணியில் எடிட் செய்வது அவசியமாகும். அடுத்து, எஸ்.ஜே சூர்யா, சிம்பு என நடிகர்களின் பங்களிப்பும் கதைக்கு விறுவிறுப்பை உண்டாக்கியது. இவையனைத்தையும் தமிழ் இரசிகர்களுக்கு ஏற்ப ஒருங்கிணைத்த இயக்குநரையும் பாராட்டியே ஆக வேண்டும். யுவனின் இசையும் அசத்தல்.

கதை முன்னெடுக்க நினைத்திருக்கும் எளிய மக்கள் மீதான அரசியல் அடக்குமுறையின் தீவிரத்தைக் காட்டுவதற்கான அல்லது தாக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு படத்திற்குள் விரியவில்லை. அது Time Loop என்கிற உக்திக்குச் சேர்க்கப்பட்டது போலத்தான் இருந்தது. இன்னும் அதற்குரிய அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம் என நினைக்கத் தோன்றியது.

ஆயினும், தமிழில் குறிப்பிடத்தக்க நன்முயற்சி மாநாடு.

11. தேன்

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார் நடித்திருக்கும் தேன் படம் மலைக்கிராம மக்களின் வாழ்வியல் துயரங்களைப் பேசும் கலை படைப்பாக இயக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை என்கிற படம் அனைவருக்கும் நினைவில் இருக்குமென நினைக்கிறேன். அதற்கு ஈடான கலைநேர்த்தி இல்லையென்றாலும் தேன் படம் நிச்சயமாக 2021ஆம் ஆண்டில் வெளிவந்த படைப்புகளில் எடுத்துக்கொண்ட வாழ்க்கைக்கு நேர்மையாக ஒரு படைப்பை வழங்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம்.

தருண்குமார் நடிப்பை இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்பதைத் தவிர வேறு விமர்சனங்கள் இல்லை. படத்தின் கடைசி காட்சியெல்லாம் நம் மனத்தைச் சிதறடித்துவிடும். ஒரு மனிதனுக்கு இப்பேற்பட்ட துயரம் நிகழக்கூடாது என மனம் தவித்தது. மரணத்திலும்கூட நியாயமற்ற ஒரு தண்டனையைச் சுமந்து கொண்டு சிதையும் அடித்தட்டு மக்களின் கண்ணீரின் ஒரு துளியில் இந்தத் தேன் கலந்துவிடுகிறது.

12. மின்னல் முரளி (மலையாளம் / தமிழ் dubbed)

மலையாளத்தில் இயக்கப்பட்டு, தமிழிலும் குரலாக்கம் பெற்று வெளியாகியிருக்கும் மின்னல் முரளி என்கிற படம் சூப்பர் ஹீரோ கருவைக் கையிலெடுத்துள்ளது. தயக்கத்துடன் தான் பார்த்தேன். Batman vs Joker போன்ற ஒரு கதையாக்கம் தான். ஆனால், இரு கதைமாந்தர்களையும் மலையாள இயக்குநர் Basil Joseph வடிவமைத்திருக்கும் விதத்திற்கே இப்படத்தை வெற்றி படம் எனலாம்.

குரு சோமசுந்தரும், தொவினோ தோமஸ் அவர்களும் சமத்தளத்தில் நின்று தமது நடிப்பால் கதையைத் தூக்கிப் பிடித்துவிட்டார்கள். எங்குமே சலிப்பூட்டாத திரைக்கதை முயற்சி. சூப்பர் ஹீரோ என்கிற ஒரு வழக்கமான நாம் பார்த்து சலித்த ஒன்றனை மனித உணர்வுகளின் மீது கட்டமைத்து அதனைப் புனைவுக்குள் பாசாங்கில்லாமல் வெளிப்படுத்தும் இயக்குநரின் சாமர்த்தியமே வியக்க வைத்தது. லோஜிக் பற்றி பேசத் துவங்கினால் சூப்பர் ஹீரோ Subject எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். ஆக, அந்தப் பகுதியை நான் விவாதிக்க விரும்பவில்லை.

இது தமிழில் ஒரு சூப்பர்மேன் முயற்சி எனப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எத்தனை சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் படம் பார்த்திருந்தாலும் இப்படத்தைத் தமிழில் அல்லது இந்திய மொழியில் பார்க்கும்போது எங்கே சொதப்பிவிடுவார்களோ என்கிற பயங்களை எல்லாம் தாண்டி படம் மனத்தில் இடம் பிடித்து நின்றுவிடுகிறது. அதுவே இயக்குநருக்கும் நடித்த நடிகர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் வெற்றியே.

13. ஏலே

ஹலித்தா ஷமிம் இயக்கத்தில் வெளிவந்த கிராமத்துப் பின்னணியில் இயக்கப்பட்டிருக்கும் படம் ஏலே. சமூத்திரக்கனியும் மணிகண்டனும் கதைக்கேற்ற யதார்த்தமான நடிப்பை வழங்கி படத்திற்கு உயிரூட்டியுள்ளனர். இயக்குனர்கள் புஸ்கர் காயத்ரியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஹலித்தா ஷமிம் சமீபத்தில் கவனத்தை ஈர்த்துவரும் இயக்குனர்.

மணிகண்டனின் பார்வையிலிருந்து கட்டியெழுப்பப்படும் தந்தை என்கிற பிம்பம் படம் முழுவதும் எப்படி சிதைந்து மீண்டும் உருப்பெற்று உச்சம் கொள்கிறது என்பதே கதை. அதனைச் சுவாரஷ்யமான நகைச்சுவையுடன் சேர்த்துக் கொடுத்திருப்பது திரையாக்கத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

அனைவரும் பார்த்திருக்க வேண்டியம் படமாகும். படத்தின் முடிவு எதிர்பாராத திருப்பமாக இருந்து தந்தை மகன் உறவின் மகத்தான தருணத்தையும் நெகிழ்ச்சியுடன் கொடுத்துள்ளது. வாழ்வில் பல உறவுகள் நமது பொது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டுத்தான் இருப்பார்கள். அவர்களின் யதார்த்தம் அதுதான். ஆனால், அதனுள் எங்கோ மெலிதான ஒரு வலை போல் அன்பும் கருணையும் பின்னப்பட்டிருப்பதை நாம் பலநேரங்களில் பார்க்கத் தவறிவிடுகின்றோம் என்பதையே படம் அழுத்தமாகப் பேசுகிறது.

14. தலைவி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, நாசர் ஆகியோர் நடிந்து வெளிவந்த படம் தான் தலைவி. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் எனலாம். இப்படத்தின் மூன்று சிறப்பான கலை அம்சங்கள் இப்படைப்பை 2021ஆம் ஆண்டில் கவனிக்கத்தக்கவையாக மாற்றியுள்ளன.

1. நடிகர்கள் தேர்வு : கங்கனாவிற்கு நிச்சயமாக ஒரு தேசிய விருது உண்டு எனப் பலரும் சொல்லும் அளவில் மொத்த கதையையுமே தம் நடிப்பால் தாங்கியுள்ளார். படத்தின் சில குறைகளைக்கூட அவரது நடிப்பு கவனமாகக் களைந்து விடுகிறது. அடுத்து, சமுத்திரக்கனியின் நடிப்பும் சொல்லத்தகுந்த வகையில் ஏற்றிருக்கும் ஆர்.என் வீரப்பனின் கதைபாத்திரத்தைச் சிறப்புடன் வெளிப்படுத்தியது. எம்.ஜி.ஆராக நடித்த அரவிந்த்சாமியும்கூட அவரது உடல்மொழியை மெனக்கெட்டுக் கொண்டு வர முயன்றுள்ளார். (ஆயினும், எம்.ஜி.ஆரின் முழு வெளிப்பாடாக இல்லை என்பதும் விமர்சனமே).

2. கலை – 1960களின் அரசியல் காலக்கட்டத்தை யதார்த்தம் கெடாமல் கொண்டு வந்துள்ளார்கள். ஒளி,ஒலி என அனைத்திலும் வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய உழைத்திருக்கிறார்கள். எங்கேயும் சொதப்பலின்றி கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதுவே, இதுபோன்ற வரலாற்றுப் படங்களுக்கும் பலமாகும்.

3. வசனம் – இப்படத்தின் வசனங்கள் யாவும் அரசியல் நிலைப்பாட்டில் அதே சமயம் திரிபுகள் மிகாமலும் கச்சிதமாகவும் கூர்மையாகவும் கையாண்டுள்ளார்கள். சர்ச்சைகள் வரும் என்கிற தயக்கமும் வசனங்களில் தெரிகிறது. ஆனாலும் இக்கதைக்கு ஏற்ற வசனங்களை வரலாற்று தெளிவுடன் எழுதியுள்ளார்கள்.

Bio epic படமா எனக் கேட்டால் நிச்சயமாக அவ்வாறு வகைப்படுத்த இயலாத ஒரு படம்தான் தலைவி. இது ஓர் அரசியல் தலைவியின் கதை என்கிற புரிதலுடன் பார்த்தால் நிறைய இடங்களில் மிகவும் கவனமாக பல சர்ச்சையான விடயங்களை நீக்கி முழுமையற்ற நிலையில் இயக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். ஆக, ஒரு பெண் எங்கு நிராகரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாலோ அங்கு மீண்டும் உருபெற்று வந்து நிற்கிறாள் என ஒரு தன்முனைப்பு படமாக பார்த்தால் ஒரு நல்ல சமூகப் படைப்பென தலைவி படத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

15. Blood Money

சர்ஜூன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இப்படம் குவைத்தில் ஒரு கொலை குற்றத்தில் மாட்டிக் கொண்ட இரு தமிழர்களைக் காப்பாற்றும் ஓர் ஊடகத்துறையைச் சேர்ந்த பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

மறுநாள் அவர்களைத் தூக்கிலிடப்போகும் தருணத்தில் துவங்கும் கதையோட்டம் பரப்பரப்புடன் நகர்கிறது. படத்தின் நீளமும் கச்சிதமாக உள்ளது. படத்தின் கவனம் முழுவதும் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்பதாக இருந்தாலும் இடையிடையே ஊடக அரசியல், இலங்கை தமிழர்களின் போராட்டம், முதலாளிய கொடுமைகள் என்பதையும் இணைத்துப் பேச முயன்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் இலங்கையில் வாழ்பவள். அவளது குடும்பத்திற்கான Blood Money தரப்பட்டும் அதனைச் சேர்ப்பிக்காமல் அதிகார வர்க்கம் செய்த மோசடியும் அவற்றால் உயிரிழக்க நேரிடும் கொலை செய்யாமல் பழியைப் பெற்றுக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களும் என இப்படம் கவனப்படுத்தும் மனிதர்கள் யாவரும் அடித்தட்டு மக்களே.

உணர்வுகளைக் கடத்துவதில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. சில இடங்களில் லோஜிக் மீறல்கள் உள்ளன. ஆயினும், அயல் நாடுகளில் குடும்பங்களை உறவுகளைப் பிரிந்து உழைக்கும் வர்க்கத்தின் மீது திணிக்கப்படும் அத்துமீறல்களை நோக்கிய இப்படத்தின் உரையாடல் நிச்சயம் கவனத்திற்குரிய ஒரு கலை முயற்சியாகும்.

16. சார்பட்டா பரம்பரை

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படமான சார்பட்டா பரம்பரை 2021ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் முக்கியமான தாக்கத்தை உருவாக்கிய படைப்பு என்றே சொல்லலாம்.

வரலாற்றை சினிமாவில் மீளூருவாக்குவதில் கூடுதல் சவால் உள்ளது. ஒரு சிறுகதையில் வரலாற்றை மொழியைக் கொண்டு புனைந்துவிடலாம் ஆனால் காட்சி ஊடகமான சினிமாவில் அதன் கலை வேலைபாடுகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டால் மட்டுமே பார்வையாளன் அதன் காலவெளிக்குள் நம்பகத்தன்மை கெடாமல் பயணிக்க இயலும். 1980களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படம் கடின உழைப்பை வெளிப்படுத்தியுள்ளது. நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, இசை, இயக்கம் என அனைத்திலும் ஒரு வரலாற்றுத் தொடுதலைப் பார்க்க முடிந்தது.

குத்துச்சண்டையையொட்டி பின்னப்பட்டிருக்கும் அரசியலைக் களமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு விளையாட்டைச் சார்ந்த படமாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகுந்த பாராட்டுதலைப் பெற்றது. வழக்கமாக பா.ரஞ்சித் படங்களிலுள்ள அடையாளங்கள் ஏதுமில்லாமல் ஓர் அசல் கலை படைப்பிற்காக அவர் உழைத்துள்ளதை இப்படம் நிரூபித்துள்ளது.

தமிழகத்தின் அரசியல் காலக்கட்டங்களையும் அவை உருவாக்கிய பாதிப்புகளையும் அதனால் எளிய மனிதர்கள் எதிர்க்கொண்ட சிதைவுகளையும்கூட இயக்குநர் இப்படத்தின் வழி எட்ட முயன்றுள்ளார். படத்தின் நீளம் சற்றே அயர்ச்சியை உண்டாக்கியது. மேலும், ஊகிக்க முடிந்த முடிவும்கூட கவரவில்லை.

17. Lift

வினீத் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் ஒரு திகில் படம்தான் லிப்ட். சிறுகதைக்குரிய திரைக்கதை அமைப்பு. பெரும்பாலான சம்பவங்கள் ஒரே நாளில் நடப்பதைப் போல திரையாக்கியிருக்கிறார்கள். இரண்டே கதாபாத்திரங்கள் கட்டிடத்தை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதுதான் ஒரு வரி கதை. ஆனால், அதைப் படமாக்கியிருக்கும் விதமே முதன்மையானதாகக் கவர்கிறது.

வழக்கமான ஒரு பழிவாங்கல் கதை என்பதும் பல இடங்களில் லோஜிக் மீறல்களும் இப்படத்தின் பலவீனம் எனலாம். ஆனால், 2021இல் ஒரு தவிர்க்க முடியாத முதல் முயற்சி இப்படம். இயக்குநருக்கு முதல் படம் என்பதோடு பிக் பாஸ் கவினுக்கும் இது இரண்டாவது படமே. ஆனால், இருவரும் முதல் படம் என்பதைத் தாண்டி கடுமையாக உழைத்துள்ளார்கள் என்பதைப் படத்தைப் பார்க்கும்போது உணர முடிகின்றது.

படத்தில் இடம்பெறும் அமானுட காட்சியாக்கங்கள் திரைக்கதைக்கு வலுசேர்ப்பதோடு பார்வையாளர்களையும் நாற்காலியின் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகிறது. ஒரு திகில் படத்தில் பார்வையாளன் பயமுற வேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாக இருக்கும். அதனைக் கொஞ்சமும் குறைவில்லாமல் இப்படம் செய்துள்ளது. மற்றபடி தனித்துவமான கதையா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்பதே என் பதிலாகும். ஆயினும், நல்லதொரு முயற்சி இப்படம்.

18. திட்டம் இரண்டு

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் திட்டம் இரண்டு. படம், முடிச்சுகளைப் பின்னி சுவாரஷ்யம் குறையாமல் நகர்கிறது. திரைக்கதையின் இறுதியில் பார்வையாளர்களுக்கு வைத்திருக்கும் திருப்பத்தின் வழியாக பிரமிப்பை உண்டாக்குகிறது. ஒட்டுமொத்த படத்தையும் மீண்டும் அலசிடத் தூண்டும் முடிவு.

ஒரு வழக்கமான கொலை தொடர்பான காவல்துறை தேடல் என்பதுபோல் படம் துவங்கியதும் பின்னர் அவை உருவாக்கும் திகில்களும் மர்மங்களும்கூட வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்தவையாக இருப்பினும் முடிவில் படம் எடுக்கும் திருப்புமுனை படத்தைக் காப்பாற்றுகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த முடிவுக்குப் பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன முடிவெடுப்பார் என்பதையும்கூட இயக்குனர் பாதுகாப்பாக பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டுவிட்டு நழுவிவிட்டார். ஆயினும், திட்டம் இரண்டு நல்ல முயற்சியே.

19. டாக்டர்

ஓர் அழுத்தமான கதையை நகைச்சுவையை மையமாகக் கொண்ட template-இல் கொடுக்க முடியும் என்கிற ஒரு முயற்சியாக இப்படத்தைப் பார்க்கலாம். ஆனால், அவற்றுள் லோஜிக் உள்ளதா எனக் கேட்டால் நிறையவே சிந்திக்க வேண்டியதாகிவிடும்.

பாதிக்கப்பட்ட குடும்பமே காணாமல்போன சிறுமியை மீட்க இறங்குவதும் அதிலுள்ள Dark comedyயும் ஒரு படமாகப் பார்க்க சுவாரஷ்யமாக இருந்தாலும் படத்திற்கு அப்பால் நம்மால் கற்பனைக்கூட செய்ய இயலாமல் போய்விடும் ஒரு திரைக்கதைத்தான் டாக்டர். இதனால், ஓர் அந்நியத்தன்மையும் உருவாகிவிடுவதைத் தடுக்க இயலவில்லை.

மூன்று சிறப்புகளுக்காக இப்படத்தை எனது பட்டியலில் சேர்த்துள்ளேன். ஒன்று, சிவக்கார்த்திகேயன் போன்ற ‘மாஸ்’ கதாநாயகர்கள் உடன் நடிக்கும் துணை நடிகர்களுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டுக் கதைக்குத் தேவையான அளவில் மட்டுமே தன் பங்களிப்பை அளிப்பது பாராட்டுதலுக்குரியது. கதையின் tempoவிற்கேற்ப அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து நடித்துள்ளார்கள்.

இரண்டு, இதுபோன்ற ஒரு திரைக்கதைக்கு நகைச்சுவை Elements-ஐக் கொண்டு நகர்த்தும் பாணியிலுள்ள ஒரு முயற்சியைப் பாராட்ட வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில் ஒரே பரப்பரப்பும் சண்டையும் துரத்தலும் பிடித்தலும் துப்பாக்கி சூடுகளும் தூக்கலான உணர்வுகளும் என மட்டுமே இருக்கும். மற்றபடி நகைச்சுவை ஒரு தனி track-இல் மட்டுமே செயற்கையாகப் பயணிக்கும். ஆனால், டாக்டர் படத்தில் நகைச்சுவையின் மீதே மொத்த படமும் ஏறி பயணம் செய்வது புதிய அனுபவத்தை வழங்குவதில் முனைப்புக் காட்டியுள்ளது.

மூன்றாவதாக ஒளிப்பதிவும் கலை வேலைப்பாடுகளும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தன. இரவு காட்சிகள் அனைத்தும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒளியும் கவனத்திற்குரியவை.

20. ஓ மணப்பெண்ணே (20th)

ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்த ஓ மணப்பெண்ணே என்கிற படம் Feel good Nice Movie என்கிற அடிப்படையில் நல்ல படம் என்றே சொல்லலாம். எங்கேயும் தடையில்லாத ஒரு திரைக்கதையோட்டம். தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்புலு என்கிற படத்தின் தமிழாக்கம்தான் ஓ மணப்பெண்ணே. இப்படத்தின் தனித்துவமாக நான் பார்ப்பது ஒரு காதல் படம் என்கிற தோரணையில் இருந்தாலும் காதல் காட்சிகள் பெரிதாக முக்கியத்துவப்படுத்தாமல் ஆயினும் இரசிக்கும்படியான ஓர் உணர்வு பகிர்தலைப் படம் நெடுக சிறப்பாக முயன்றுள்ளனர். ஒரு பனித்தூறல் போல மௌனமாக அவர்களின் காதல் உருவாகின்றன. ஓர் இரசனை அழகியலாக இப்படம் மனத்தினுள் விரிகிறது.

பார்க்கத் தவறியிருந்தால் இளைஞர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம் எனப் பரிந்துரைக்கிறேன்.

கலை, இலக்கியம் போல் சினிமாவும் தனதளவில் காட்சியின் கலையாக மனத்தில் விரியக்கூடிய ஆற்றலுடைய வடிவமாகும். தொடர்ந்து நல்ல படங்களைப் பார்த்து விவாதிப்போம். கலையின் செயல்பாட்டைக் கொண்டு நகர்வோம்.

-கே.பாலமுருகன்

Exit mobile version