மின்கிறுக்கல்

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

பெரும்பாலான மனைவிகளுக்கு தங்கள் கணவன் கதாநாயகன் தான் ஆனால் அந்த கதாநாயகர்கள் அவர்களின் நாயகிகளை வீட்டிற்கு வெளியில் தான் தேடிக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நாயகன் மற்றும் அவன் நாயகிகளின் கதை தான் ஜெயகாந்தனின் ‘ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்’. 

இந்தக் கதையின் நாயகன் சீதாராமன் கதையிலும் ஒரு கதாநாயகன் தான். சினிமா கதாநாயகன் அல்ல அவன் அலுவகத்தில் நடக்கும் நாடகங்களிலும் அவன் மனைவி மதுரத்தின் மனதிலும். மதுரம் அவன் தலைவாருவதில் தொடங்கி நாடகத்தில் இன்னொரு பெண்ணுடன் ஜோடியாக நடிப்பது வரை அவனை அணுவணுவாக இரசித்துக்கொண்டே இருக்கிறாள். 

அவன் சம்பளப் பணத்தை என்ன செய்கிறான் என்று கூடக் கேட்டதில்லை. அவன் எவ்வளவு தருகிறானோ அதை அப்படியே வாங்கிக்கொள்கிறாள் மேற்கொண்டு குடும்பச் செலவை அவளின் தாய் தந்த வீட்டின் வாடகையும் இரண்டு மாடுகளுமே கவனித்துக்கொள்கின்றன. 

சீதாராமன் ஒரு நாள் தன்னுடன் கதாநாயகியாக நடித்த கமலா உன்னிடம் உதவி கேட்டு வருவாள் என்று மதுரத்திடம் சொல்கிறான். கமலா என்ன கேட்கப் போகிறாள் என்பது நாம் அனைவரும் யூகித்தது தான். தன் கணவனை சீதாராமனாக எண்ணிக்கொண்டிருக்கும் சீதை மதுரம் கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாதவள். ஆதலால் தான் கதையின் ஆரம்பத்திலேயே அவனை அதிர்ஷ்டசாலி என்கிறார் ஆசிரியர். 

பண உதவி கேட்டு வருவாள் என எண்ணிக்கொண்டிருந்த மதுரத்திற்கு வாழ்க்கையில் பங்கு கேட்ட கமலாவின் வார்த்தைகள் பேரிடியாகத் தான் இருந்தது. இதற்கு பின் மதுரம் என்ன முடிவு செய்தாள்? கமலா என்ன ஆனாள்? சீதாராமனுக்கு யார் ‘ஹீரோயின்’ ஆனார் என்பது மீதிக் கதை. 

“அழுகையென்ற கேடயத்தை ஏந்திக்கொண்டு அந்தக் கூரிய வாளை ‘சரே’லென மதுரத்தின் இருதயத்தில் ஆழமாகச் செருகிவிட்டாள் கமலா.” 

ஜெயகாந்தனின் சொற்கேடையங்கள் கமலாவை மதுரத்திடம் இருந்து மட்டுமல்ல நம்மிடமிருந்தும் காக்கின்றன. எந்த இடத்திலும் அவள் மீது கோபமோ ஆத்திரமோ வராமல் பரிதாபம் மட்டுமே வருமளவிற்கு கனகச்சிதமான பாத்திரப்படைப்பு. 

ஜெயகாந்தனின் எழுத்தம்புகள் கதை முழுவதும் சீதாராமனை மட்டுமே குறிவைத்து தாக்கிக்கொண்டிருக்கின்றன. 

வாழ்க்கையைப் பங்கு கேட்டு வந்தவள் அநாதை யாருமற்றவள் என்று அறிந்தவுடன் சினிமா கதாநாயகிகள் போல் போலியாக அவளைத் தங்கை என்றாக்கிக் கொள்ளாமல், மதுரம் தன் கணவன் எப்படிப்பட்டவன் என்பதை முதல் முதலாக சிந்திக்கத் தொடங்குகிறாள். அவன் போலி பிம்பங்கள் எல்லாம் உடைந்து சுக்குநூறாகின்றன. 

எங்களுக்கு அவர் ஒரு போதும் அதரவாக இருந்ததில்லை அதிகபட்ச செலவு தான். எனக்கு வேண்டாம் நீயே எடுத்துக்கொள் இனி என் வீட்டிற்கு அவர் வரக்கூடாது என்ற மதுரத்தின் தீர்க்கமான முடிவு கமலாவையும் சிந்திக்கவைத்தது. பெயரளவில் சீதாராமனாக இருந்தவனின் வாழ்வில் இனி பெயரில் மட்டும் தான் சீதாவிற்கு இடம் என்பது போல அவனால் ஏமாற்றப்பட்ட இருவரும் அவனை உதறித் தள்ளுகிறார்கள். 

கதையை முடிக்கும்போது ஜெயக்காந்தன் எச்சில் சாக்லேட்டுக்காக சண்டைபோட்டு அதை வீதியில் எரியும் மதுரத்தின் குழந்தைகளை வைத்து முடிக்கிறார். வீதியில் எறியப்பட்ட எச்சில் சாக்லேட் வேறு யாருமல்ல? நம் கதாநாயகன் தான். 

மெல்லிய இழைபோல் உள்ளே நுழைந்து ஆழமான உணர்ச்சிகளைத் தரக்கூடிய அற்புதமான படைப்பு. 

Exit mobile version