மின்கிறுக்கல்

மணப்பலி

மணப்பலி

மலர்ந்த சூடு
தணியவில்லை…
வண்டுக்கு
வாசஸ்தலமாக்கினீர்கள்.

குட்டிப்பருவத்தை
கழுவிய ஈரம்
காயவில்லை…
மூக்குவாரிட்டு
ஒருவனுக்கு
சவாரிக் குதிரையாக்கினீர்கள்.

மிஞ்சியால்
விலங்கிட்டீர்கள்.

மஞ்சளும் குங்குமமும்
மின்னும் முகத்தில்
கண்ணீரையும் கவலையையும்
அப்பினீர்கள்.

சிரிப்பைப்
பிடுங்கிக் கொண்டு
சோகத்தைத் தந்தீர்கள்.

இப்போது ஏன்?
கண்ணீர் வடிக்கிறீர்கள்.

இழந்ததற்காகவா…?
இல்லை
அழித்ததற்காகவா…?

??????????????????????????

அன்பு சூழ் உலகு

கொலைக் கருவிகளோடு
குரூரமாய்
வெறி கொண்டலையும்
மரணக் கூலிகளே…!

உங்களிடம் தான்
இந்த உரையாடல்…

சற்று நில்லுங்கள்..
சற்று யோசியுங்கள்..

உதிரம்
சிந்துவதால்
உங்கள் கனவு
நிஜமாகுமா..?

உலகம்
சிதைந்து போவதால்
உங்கள் வன்மம்
தீருமா..?

அன்பு, கருணை, அகிம்சை
என்பது
வாழ்வின்
வேதம் …
ஆனால்_
அரிவாள்கள் ஏந்தி
ஆடு வெட்டுபவர்களாய்
மனிதர்களை வெட்டிட
அலைகிறீர்களே…!

ஆன்மீகம், மனிதநேசம் என
ஆயிரம் சித்தாந்தங்களை
அனுதினமும்
போதிக்கிறது
நேசத்தின் பெரும் வாழ்வு
ஆனால்_
சக உயிர்கள் மீது
ஏன்…? நீங்கள்…
சிநேகம் கொள்ள மறுக்கிறீர்கள்.

உரையாடலைப்
புறக்கணித்து விட்டு
யுத்தம் செய்திட
நீங்கள் முனைகையில்..
உடுக்கை ஒலித்து
ருத்திரர்களாய்
கிளம்பாமல்..
ஒரு போதும் மனிதம்
பிரார்த்தனைகளை
உருப்போடாது

உக்கிரமான புயலாய்
வீறு கொண்டெழும்…
உங்களின்
ஆயுத சித்தாந்தங்களை
உருத் தெரியாமல்
துடைத்தெறியும்…

அழிவு விரும்பிகளே…!
சற்று நில்லுங்கள்..
சற்று யோசியுங்கள்..

உலக நேசமே
இக வாழ்வு முறை
மனிதப் பரிணாமமே
உயிர்ப்பின் நடை முறை.

??????????????????????????

இருளை உடுத்தியவன்

வேதனையைத் தந்தாள் தாய்
துக்கத்தைத் தந்தையிடம் பெற்றான்
நாற் சந்தியில் நிற்கும்
உடைந்து எரியாத விளக்குத் தூணாய் வாழ்கிறான்
பாம்பைத் துணையாக்கினான்
பிள்ளைப் பூச்சிகளைப் பெற்றான்
மழையில் நனைந்து நடுங்கும்
சிட்டுக்குருவியைப் போல
அவனது ஒவ்வொரு கணமும்
மயானப் பூக்கள் பூக்கின்றன
கருங்காக்கைகள் பாடுகின்றன
நிகழ்காலத்தை
இறந்தகாலம் தின்ன
காணாமல் போன எதிர்காலத்தைத் தேடிப் போகிறான்
மரங்களற்ற வனாந்தரங்களில்.

Exit mobile version