மின்கிறுக்கல்

யமுனா வீடு -58

நினைவுகளைத் திருப்பிவிட்டேன்
வரிசையிலிருக்கும் ஓரிருவர்
நலம் விசாரிக்கிறார்கள்
எப்போதோ பரிச்சயமாகியிருக்கிறேன்

இடமும் வலமுமாக
நடந்து சென்றபடியே
தேநீரைக் குடித்துமுடித்தேன்
மாஸ்டர் திருப்தியாக்கச் சிரித்தார்

தவறவிட்ட அழைப்புக்களையெல்லாம்
எடுத்துப் பேசுகிறேன்
இப்போதைக்கு
போதுமானதாக இருக்கிறது

தொலைவிலிருப்பவர்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள்
பேரச்சத்தோடு கடந்துசென்றேன்
தொலைவிலேயே
பேசிக்கொண்டிருக்கட்டும்

மாயமாய் உணர்ந்த நொடியில்
அவளுடைய அழைப்பு வருகிறது
அவளறியாமல் இருக்கட்டும்
கண்களுக்குள் பொருத்திக்கொண்டேன்

துளிர்த்த கண்ணீரோடு
மண்டியிட்டு யமுனாவின்
பாதத்தில் முத்தமிடுகிறேன்
இப்போது வரும் கனவென்றேன்
கனவை கவனிக்கிறேன் என்றாள்

வாஞ்சையோடு அவளிருக்கும் நகரம்
பரபரப்பாகவே இருக்க
இன்பம் கூட்டியே
இந்தப் பொழுதும் முடிகிறது

தங்கநிலவு வர
உறங்கியெழும் நாளை ஆரம்பித்துவைக்கிறாள்
யமுனா.

Exit mobile version