மின்கிறுக்கல்

யமுனா வீடு – 39

மனிதர்களை வேட்டையாடும் உலகினில்
நேற்றிலிருந்து இன்றைக்குள்
என்னவாகிடும் இந்த வாழ்க்கை

உயிர்பலி கொடுக்க
துடித்துக்கொண்டிருந்த
இதயத்தைப் பார்த்த சிலர்
அருவருப்பாக கடந்து செல்வார்கள்

யாரும் இல்லாத வீட்டில்
தனித்தழைந்த சொற்களையெல்லாம்
சேகரித்தவண்ணம்
ஒரு பைத்தியக்காரன் செல்லக்கூடும்

நம்மைச்சுற்றிலும்
எத்தைனையோபேர்
தோன்றி மறைந்தாலும்
பிணியுடையவன் தொழும் கடவுளாக
ஒரு பறவை வந்தமரலாம்

பெரும் மழைக்குள்
யமுனா நனைந்துகொண்டிருந்தாள்
அவளது துயரத்தை துடைத்து
சலசலத்து மழைநீர்ஓடிக்கொண்டிருந்தது

அன்பைப்பற்றிய இந்த உலகில்
ஒரு நிமிடம் யமுனா
கண்களை மூடித்திறந்தாள்
ஒற்றைப்பூ மலர்ந்திருந்தது.

Exit mobile version