மின்கிறுக்கல்

யமுனா வீடு

PC: ஓவியர் துரைஎழிலன்

பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி
முன்னங்கால்களை மேலுயர்த்தி
என் முகம்பார்த்துச் சப்தமிட்ட
அணிலின் மொழி
எனக்குப் புரியவில்லை எனினும்

வானவில் பண்பலையின் உயிர்ச் சொல்லில்
அய்யப்ப மாதவன் கவிதையை வாசித்துக்கொண்டிருக்க

கிண்கிணி ஓசையை எழுப்பிய ஆடு
மேய்ப்பனோடு நகர்ந்து கொண்டிருந்த
பெருநகர வாழ்வொன்றில்

யாருமற்ற வெளியை உருவாக்கும்
ஆட்டுக் குட்டியின் பாடலொன்றை
யமுனா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்

பெருநகர வாழ்தலிலும்
யாருமற்று இருத்தலிலும்
அய்யப்ப மாதவன் வாசித்த கவிதை
யமுனாவின் வீட்டை நிரப்பிச் செல்கிறது

யமுனா
கவிதைக்கான ஓவியம் ஒன்றை
கரித்துண்டால் சுவற்றில்
கோடுகளாக்கி உறங்கிப்போகிறாள்

வீடு வருவோர்க்கு
சுவர்க் கோடுகள் புரிவதில்லை
அந்தக் கவிதையும்
யமுனாவும் அப்படித்தான்

நன்றி: கவிஞர் அய்யப்ப மாதவன்

நன்றி: க.உதயகுமார் ( கவிதையின் முதல் 5 வரிகளுக்கு)

Exit mobile version