மின்கிறுக்கல்

யமுனாவீடு 95

வெயில் இறங்கி நடக்கத் தொடங்கிய சாலையில்
முன்னரே அவன் நடந்துகொண்டிருந்தான்

நடக்க நடக்க நீண்ட தெருவில்
ஆரிராரோ ஆரிராரோவென
இப்போது யாரும் பாடுவதாய்த் தெரியவில்லை

சில புறாக்களுக்கு மத்தியில்
காகம் ஒன்று கரைந்துகொண்டிருந்தது
தேடுவோர்க்கு காகம் பார்க்கக் கிடைக்கிறது.

நன்மையளிக்கக்கூடியதை
ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும்
பந்தைப் பொறுக்கி விளையாடும்
சிறுமியைப்பாருங்கள்
நீங்கள் மகிழும் தருணம்

இந்தச்சாலையில் எல்லோருமே பரபரப்பாக விரைந்துகொண்டிருப்பது
ஒரு நம்பிக்கையில்தான்
அழகான கனவு அவர்களுக்கு

ஒவ்வொருவரின் முகங்களையும்
விலக்கி நடப்பவனின்
மௌனத்தைக் கலைக்கத்தேவையில்லை
பெரும் மழைக்கு ஒதுங்கிப்போவான்

நகர்ந்து நிற்பவர்களே அதிகம்
அள்ளியணைப்பதில்லை
நெஞ்சில் கணக்கிறது
மலர்ந்த புன்னகையுடன்
நீ வருகிறாய் யமுனா

Exit mobile version