மின்கிறுக்கல்

யமுனாவீடு 83

ஆழமான ஓர் கனவில்
எல்லோரும் மரணித்திருப்பார்கள்
நிதானமாக நீ
உறங்கிக்கொண்டிருப்பாய்
இந்தக் கனவு அப்படித்தான்

நினைவில் நின்ற
சொற்களையெல்லாம்
தேடிக்கொண்டுவர
நீ நடக்கத்தொடங்கியிருப்பாய்
நினைவுகள் அப்படித்தான்

கனத்த வாழ்வில்
உனக்கு முன்
நடந்துகொண்டிருப்பவர்களும்
அவர்களுடைய நிழலில்
புதிரைத் தேடுபவர்கள்தான்

அதிகாலையில் எழுந்து
தேநீரைப் பருகிக்கொண்டிருப்பர்களும்
வலிகளோடு இருப்பவர்கள்தான்
அவர்களுக்குப் புது மழைப்பெய்யும்

நீ என்ன செய்கிறாய்
முழு ஆகாயத்தையும் பார்த்தபடி
காற்றிற்கு நடனமாடுகிறாய்
இது ஒரு மாய உலகம்

தெளிவாய்ச் சொல்லமுடியும்
பிச்சைக்காரனாக
நீ தவழத்தொடங்கு
புன்சிரிப்போடு வருபவர்கள் தானமிடுவார்கள்

ஒரு கதையைத்தான்
திரும்பத் திரும்பத் சொல்கிறாய்
யமுனா அருகில்தானிருக்கிறாள்
நீ வழியை மறந்துவிட்டாய்

நீ சூரியனை எழுப்பக்கூடியவன்
நிதானமாக இரு
கண்திறந்து செல்லும்திசையில்
அள்ளியணைக்க யார்வருவார்
இந்தப்பாதை முடிவடைவதில்லை

நீ பொய்யானவனாய்
உணரும் ஒரு இடத்தில்
பேரன்பு பெருகிடும்
மெல்லத்தவழ்ந்து வருவதும் யமுனாதான்
காதில் சொல்லும் கவனமாயிரு.

Exit mobile version