மின்கிறுக்கல்

யமுனாவீடு – 70

தேவைகளுடையவர்கள்
பலவீனமானவர்களை
கண்டுகொள்ளும் உலகில்

உறுதியாகச் சொல்லமுடியும்
இங்கெல்லோரும்
குறையானவர்களே

கொத்தித் தின்னப்போகும்
பறவைக்கான இரை
அன்பின் மொழியில் பேசுவது

ஒவ்வொருவருக்குக்கும்
ஒரு அன்பின் மொழி
தாங்கமுடியாத புன்னகை

சிறகடித்துப் பறக்கும்
பறவையின் கூண்டைத்
திறந்துவிடுபவர்களாக
இருக்கட்டும்

அவனுக்கான கோபங்கள்
இங்கு எதுவுமில்லை
எதிர்பாராத ஒன்றுதானே

திரும்பத் திரும்பத் நிகழும்
சலனமற்ற
மனதோடு பேசுங்கள்
சிரித்துக்கொண்டே இருங்கள்

சந்தித்த முதலிலேயே
சொல்லிவிடுங்கள்
நாமிருவரும் செத்துவிடுவோமெனும்
உண்மையை

பிறகு நிறையப் பேச வேண்டியதில்லை
கிடைக்கும் நேரத்தில்
சின்ன சின்னதாய் பேசலாம்

பரிச்சயமானவர்கள்
எல்லோருக்குமே
ஒருகை உணவை பிசைந்தூட்டுங்கள்
மறுபடியும் பிறக்கப்போவதில்லை

ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களில்
யமுனா
நிலைக்கண்ணாடியைப்போல
எனக்கு

இனி என்ன வேண்டும்
யமுனாவின் விரல் நுனி பிடித்து நடக்குமொரு பிறப்பு….

Exit mobile version