மின்கிறுக்கல்

யமுனாவீடு – 100

இறப்பது போல எல்லோரும்
உறங்கிக்கொண்டிருப்பார்கள்
கெட்ட கனவுக்குக்
கண்ணைத் திறந்து பார்த்திடவேண்டும்
எதற்கும் தண்ணீரைக் குடித்துவிட்டு
உறங்கிப்போங்கள்

தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கிறது
அங்கிருந்து நீ பாடிக்கொண்டிருக்கிறாய்
பெரும் கட்டடத்திலிருந்து
நான் இறங்கி நடக்கிறேன்

சத்தமன்றி வண்டிகள்
கடந்துசெல்கின்றன
வெகு தொலைவிலொருவர்
சென்றுகொண்டிருந்தார்
நள்ளிரவில் பூனைகள்
எங்கும் தென்படவில்லை

இருட்டைப்போலவே
துன்பமும் இருக்கிறது
தூரத்திலொரு வெளிச்சப்புள்ளியைத் தேடுகிறோம்
காற்றின் திசைக்குப் பறக்கும் சருகாக
நம்மை பழக்கிக்கொள்ளவில்லை

நமக்குத் தெரிந்த ஒன்றையும்
நமக்குத் தெரியாத ஒன்றையும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
ஒன்றைப்போலவே
தேடிக் கண்டடைகிறோம்
ஒரு முறையேனும் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்

திட்டமிட்டு எதுவும் நடக்காதபோது
மழையைப் பார்த்துச்
சிரித்துக்கொண்டிருக்கவா
இறங்கி நடந்துவிடலாமா
யமுனா இங்குதான் இருக்கிறாயா?

Exit mobile version