மின்கிறுக்கல்

முருங்கை – சிறுகதை

       அர்த்த ராத்திரில “ஊய்…ஊய்”னு அடிச்ச பேய்க்காத்துல, ‘மடாரு’ன்னு மரம் முறியிற சத்தம் கேட்டுச்சி. வள்ளி திடுக்கிட்டு முழிச்சிக்கிட்டா. பக்கத்துல ரெண்டு பொண்ணுங்களும் அவளோட வாயில் பொடவய மூலைக்கு ஒன்னா இழுத்துப் போத்திக்கிட்டு ஒருக்களிச்சி தூங்கிக்கிட்டு இருந்துச்சுங்க. காத்தோட போட்டி போட்டுக்கிட்டு மழை “வீர்.. வீர்”னு மொகத்துல அறையிற மாதிரி கொட்ட ஆரம்பிச்சிருந்திச்சி. மழையும் காத்துமா சேந்து குடிசைய பொரட்டிப் போட்டுடுமோன்னு பயந்துக்கிட்டே எழுந்திரிச்சி வாசல் தட்டிப்பக்கம் வந்து பாத்தா. திகில் படங்களில் பேய் வர்றதைக் காட்டுறதுக்கு, அமானுஷ்யமாக காத்துல பொருள்களெல்லாம் வேகமா ஆடுறமாதிரி காட்டுவாங்களே,   அதப்போல கீத்துத்தட்டியும் இங்கயும் அங்கயும் ஆடிக்கிட்டு இருந்துச்சி.

           வள்ளிக்கு பேயைப் பத்தின பயமெல்லாம் கெடையாது. முருகன் போனதுக்கப்புறம் சாமி கும்பிடுறது, கோவிலுக்கு போறதயெல்லாம் சுத்தமா கைவுட்டுப்புட்டா. சாமியோ, பூதமோ எதுவும், நமக்கு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டப் போறதில்ல. கையுங்காலும் உருப்புடியா இருந்தா ஒழச்சி சாப்பிட்டுக்கிடலாம்னு உறுதியா நம்பினா.

          கீத்துத்தட்டிய லேசாத் தொறந்துக்கிட்டு தலையமட்டும் ஒட்டகச்சிவிங்கியாட்டம்  வெளியில நீட்டி எட்டிப்பாத்தா. “சுள்ளு… சுள்ளு”ன்னு மழ மொகத்துல அடிச்சுது.  தட்டிய முழுசாத் தொறந்தா, மழையின் வேகத்துல இருக்கிற கொஞ்ச எடமும் “சதசத”ன்னு ஆயிடுமோன்னு பயமா இருந்துச்சி. அப்புறம் ஈரத்துலயே ராத்திரிபூரா கெடக்க வேண்டியிருக்கும். அதனால,தட்டிய வேகமா இழுத்து சாத்தி கொண்டிய மாட்டிப்புட்டு,திரும்பிவந்து தரையில கெடந்த கோரப்பாயில குந்திக்கிட்டா. தூக்கந்தான் தொலைஞ்சுப் போச்சு.

         வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிக்கிறவளுக்கு தூக்கம் தொலையிறதெல்லாம் ஒரு பிரச்சினையா, என்ன? கடந்த மூனு மாசமா, அவளுக்கு தூங்காத ராத்திரிகள்தான் அதிகமாயிருக்கு. என்னிக்காச்சும் ரொம்ப அசதியில தூங்கினாத்தான் உண்டு. இன்னிக்கி இனிமே தூக்கம் வராது. மனசெல்லாம்  வாசல்ல இருக்கிற முருங்கமரத்து மேலயே இருந்துச்சி. சமீபகாலத்துல தெருவுல போற வர்ற ஜனங்களோட கண்ணெல்லாம் முருங்கமரத்து மேலதான் இருக்குதுன்னும் அவளுக்குத் தெரியும்.

        முருங்கமரந்தான் முறிஞ்சிருக்குமோ, இல்ல, வேலி ஓரத்துல இருந்த பூவரசமரம் முறிஞ்சிருக்குமோ தெரியல. பூவரசு மரத்துல போறை இருந்துச்சி. அதனால அது முறிஞ்சிருந்தாலும்  இருக்கலாம். அதவிட்டா முருங்கமரந்தான். கொல்லையில வேற மரமெல்லாம் இல்ல. இருக்குற இத்திணியூண்டு எடத்துல எங்க மரம் வளக்குறது? நல்ல சாதி நாட்டு முருங்கன்னு சொல்லி முருகந்தான் எங்கிருந்தோ ஒரு போத்து வாங்கியாந்து நட்டு வச்சான். சிலபேரு கைராசிக்குதான் மரம், செடிகொடியெல்லாம் தழைக்கும். சிலருக்கு வெளங்கவே வெளங்காதுன்னு சொல்லுவாங்க. முருகன் கைராசிக்காரன்னு சொல்லி, அவனத்தான் நெறயபேரு, செடிவைக்கவும், மரக்கன்றுகள் நடவும் கூப்பிடுவாங்க.

        லட்சுமிபுரத்துல எல்லாமே புதுசா வந்த வீடுகள். முப்போகம் செழிப்பா வெளஞ்ச வயல்களெல்லாம் இப்போ காங்கிரீட் வீடுகள் ஆயிட்டிருக்கு. வயல்கள்ள மம்முட்டி புடிச்சி வேலை செஞ்ச ஆட்களெல்லாம், இப்ப கட்டட வேலைக்கி செங்கல் சுமக்கவும், கலவைச்சட்டி தூக்கவும் போய்க்கிட்டு இருக்காங்க.

       வாழ்க்கையில முன்னேறணும்னா ஒவ்வொரு அடியாத்தான் எடுத்து வைக்கணும்னு சொல்லுவாங்களே அதுமாதிரி, லட்சுமிபுரத்துலயும் வீடுகள் ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சுது. இப்ப ஓரளவு பெரிதான புறநகரா மாறிட்டுது. ஐநூறு வீடுகள் கட்டிட்டாங்க. ஒவ்வொருவூட்டுலயும்  மிஞ்சியிருக்குற எடத்துல, வாழை, தென்னை, கொய்யா, பலான்னு நட்டு வளக்குறாங்க.சிலபேரு பூச்செடிங்க, குரோட்டன்ஸ் மாத்திரம் அழகுக்காக பராமரிக்கிறாங்க. சிலர் வெண்டை, கத்தரின்னு காய்கறி செடி போடுறாங்க. சிலர் முருங்கை நட்டு வைப்பாங்க. நெறயபேரு, முருங்கைக்கு கோடைகாலத்துல மொசுக்கட்டைப்பூச்சி வரும்னு விரும்பமாட்டாங்க. மொசுக்கட்டைக்கி பயந்துக்கிட்டு ஒரு வீட்டுல மரத்த வெட்டிப்போடச் சொல்லிட்டாங்க. அதிலேருந்து  ஒரு போத்து கொண்டுவந்து நட்டுவச்சான் முருகன்.  அதுக்கும் இப்ப,  சின்னவ அபி வயச்சாச்சு. அபி கைப்புள்ளயா, பாலு குடிச்சிக்கிட்டு இருக்கும்போது நட்டது. அவளுக்குந்தான் இப்ப பத்து வயசாயிட்டுதே!

         “முருங்கமரந்தான் முறிஞ்சிவுழுந்திருக்குமோ?. மரமே அடியோட சாஞ்சிறுக்குமா? கிளைகள் மட்டும் முறிஞ்சிருக்குமா?  நெறமாச கர்ப்பிணி போல தழைய தழைய காய்ச்சி நின்னுச்சே!”

          காத்து மழையில, சட்டுன்னு கரண்டு போயிடுச்சி. ஒத்தலைட்டுல வாழ்க்கையை ஒட்டுறவளுக்கு அதுவும் இல்லாம போச்சு. ஒரே கும்மிருட்டு குடிசையைச் சூழ்ந்துடுச்சி. சிம்னி வெளக்கை ஏத்தினா காத்துல நிக்குமான்னு தெரியல. கரண்டு வருமோ, வராதோ? அடிக்கிற காத்து மழயில, லயன்மேனுங்க எப்புடி வந்து பாப்பாங்க? பாவம், அவங்களும் மனுசங்கதானே! இந்த பேய் மழைல வெளியில வந்து அவங்களுக்கு ஒன்னு ஆயிட்டுதுன்னா, அவங்க பொண்டாட்டி, புள்ளய யாரு காப்பாத்துவாங்க? சிம்னியை ஏத்தாமலேயே, இருட்டுலயே பாயில குத்துக்காலிட்டு ஒட்கார்ந்துக்கிட்டா. குளிருக்கு இடுப்பு பொடவயோட முந்தானய இழுத்து போத்திக்கிட்டா. சரண்யாவும், அபியும் எதுவுமே தெரியாம தூங்கிக்கிட்டு இருக்குதுங்க. அதுங்க ரெண்டுபேரோட தலையையும் கையால வருடிவிட்டா. மனசுக்குள்ள  பலவிதமான நெனப்புகள் தாறுமாறா ஓடிக்கிட்டிருந்துச்சி.

     முருகனோட வாழ்ந்தபோதே,  வள்ளி தெனமும் காலைல நாலு மணிக்கே எழுந்திரிச்சுடுவா. அரைமைலு நடந்து போயி லட்சுமிபுரத்துல, ஆறு வீட்டுல  மொறவாசல் வேல செய்யணும். பொழுது விடியறதுக்குள்ள ஆறுவூட்டுலயும் செய்து முடிக்கணும். இல்லேன்னா, ‘எனக்கு செஞ்சுட்டு, அடுத்தவூட்டுக்கு போ’ன்னு ஒவ்வொரு வூட்டுலயும் சொல்லுவாங்க.{நகர வாசிகளுக்குள் அம்புட்டு ஒத்தும.}  எல்லாவூட்டு வாசல்லயும் குப்பைகளைக் கூட்டி, தண்ணி தெளிச்சு, கோலம் போட்டு முடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் ஆயிடும். அதுக்குள்ள நல்லா பொழுது விடிஞ்சிடும். அதுக்கப்புறம் வீட்டு வேலை பாத்திரம் கழுவுறது, துணி தோய்க்கிறது, வீடு, கொல்லைக் கூட்டுறதுன்னு நாலு வூட்டுல செய்வா. மத்தியானமோ, சாய்ங்காலமோ ஆயிடும். அன்னன்னிக்கி இருக்குற வேலயப் பொறுத்துதான் வீட்டுக்குத் திரும்புறது.பள்ளிக்கொடம் இல்லாததால சின்னவ அபினயா அம்மா வேலை செய்யுற வீடுகளுக்கு தேடிக்கிட்டு வந்துடுவா. முருகன் வேலைக்கிப் போகும்போது கொண்டுவந்துவுட்டுட்டுப் போவான்

     மொறவாசல் வேலக்கி போறதுக்கு முன்னாடி, கொல்லைப்புறம் வேலிகருவக்காட்டுல ஒதுங்கிட்டு  கால் கழுவிக்கிட்டு வர்றதுதான் மொதவேலை. நல்லா விடிஞ்சுட்டா,ஆம்பளைங்க நடமாட்டம் அதிகமாயிடும். ஒதுங்கமுடியாது. பாத்ரூம், லெட்ரினெல்லாம் அவ குடிசைக்கு ஆடம்பரமான விசயங்கள். கூரையின் எரவானத்தில் மடித்து வச்சிருக்கிற கோபால் பல் பொடியை எடுத்து இடது உள்ளங்கையில் துளியூண்டு கொட்டுவா. வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டு பற்களை இடமும் வலமும் மேலும் கீழுமாக வெளக்குவா. பற்களின் வழவழப்பில் ‘கொய்ங்,,, கொய்ங்’ என்ற மெல்லிய இசை வரும். சின்னப் பெண்ணாக இருந்தபோது அடுப்பு சாம்பலை வைத்துத்தான் பல்லு வெளக்குறது. அப்போதெல்லாம் அந்த ‘கொய்ங்…. கொய்ங்’ இசையை ரசித்துக்கொண்டெ பல்லு வெளக்கிக் கொண்டிருப்பாள். “எம்மா நேரம் பல்லு வெளக்குவ”ன்னு அம்மா சத்தம்போட்டாதான் வாய்க்கொப்புளிச்சிட்டு உள்ளே வருவா. இப்பல்லாம் அதையெல்லாம் ரசிச்சு செய்யுற நெலமயில இல்ல. காலையில எழுந்திரிச்ச ஒடனே,கொல்லைக்கு ஒதுங்கறதும், பல்லு வெளக்குறதும்  ஒரு கடமைன்னு ஆயிடுச்சி.. குளிக்கிறதுங்கிறது பொழுது சாயுறதுக்குள்ள எப்ப நேரம் கெடைக்குதோ அப்பத்தான். சிலசமயத்துல, வெளக்குவச்சப்புறம், இருட்டுல தேய்ச்சது பாதி, தேய்க்காதது பாதின்னு காக்கா சிலுப்பு சிலுப்பிக்கிட்டு வர்றதும் உண்டு, எல்லாமே ஏதோ கடமையேன்னுதான் செய்ய வேண்டியிருக்கு.

         நேத்திவரைக்கும் குடிசையின் வடகெழக்கு மூலையில வாசல் பக்கத்தில இருந்த முருங்கமரத்தில் சடைசடையாய் காய்கள். தொங்கிக்கொண்டிருந்தன இத்தினி வருசத்துல இப்புடி ஒரு காய்ப்பு காய்ச்சதேயில்ல. வீட்டுல சாவு வர்றது மரங்களுக்கு தெரியுமாம். அது மாமரமா இருந்தாலும், முருங்கமரமா இருந்தாலும் மரமே முறிஞ்சி விழுந்துடுமோன்னு பயப்படுறமாதிரி காய்ச்சிடுமாம். முருகன் சாவுக்கு வந்தவளுக, ஒரு பாட்டம் ஒப்பாரி வச்சிட்டு, மூக்கசிந்தி மண் செவுத்துல தொடச்சிட்டு,குடிசையவிட்டு வெளில வந்து முருங்கமரத்தையே பாத்துக்கிட்டு நின்னாளுக. மரம் முழுக்க வெள்ளைப்புடவையைப் போத்தினது மாதிரி பூவும் பிஞ்சுமா நின்னுச்சி.இனிமே ஒனக்கு வெள்ளைப்புடவதான்னு சொல்லாம சொன்னுச்சோ, என்னமோ தெரியல. வந்தவளுக “சாவுகாய் எப்புடி காய்ச்சிருக்கு பாரேன்னு” நீட்டி மொழக்கி பேசிக்கிட்டுப் போனாளுக.

    புருசன் போயிட்டான்னு எத்தினி நாளக்கி வூட்டுலயே மொடங்கிக் கெடக்க முடியுது? மூனு சீவன் பசியாறணுமே! பாத்திரம் பண்டம் வெளக்கி, துணி தோய்ச்சி குடுக்குற வீடுகள்ளக்கூட, முப்பதுநாள் தீட்டு கழியாம வேலைக்கி வராதன்னு சொல்லிப்புட்டாங்க. அதனால, முப்பது முடியுறவரைக்கும் வூட்டுலயே மொடங்கிக்கெடந்தா. அங்காளி பங்காளிங்க ஏதோ ஆபத்துக்கு ஒதவுனாங்க. ரேசங்கட அரிசியும், பருப்பும், எண்ணெயும் இல்லன்னா, வயித்துப்பொழப்பு இன்னும் மோசமா போயிருக்கும்.ஏதோ அந்த மட்டிலாவது. ஏழை பாழைங்க கஷ்டத்த ஒணந்துபாத்து அரசாங்கம் எலவச அரிசியாவது போடுதேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.பெரியவ எதப்போட்டாலும் சாப்பிட்டுடுவா. சின்னவதான், பூச்சி இருக்கு, புழு இருக்குன்னு ஏதாவது நொட்ட சொல்லு சொல்லிக்கிட்டே இருப்பா.

        முருகன் நல்லா இருந்தவரைக்கும் எந்த  வேலை கெடைச்சாலும் போவான். வேலைக்கிப் போகலைன்னு சொல்லி சொணங்கி ஒட்கார்ந்திருக்கவே மாட்டான்.வயல்ல கொத்துறது, அண்டை போடுறது, நாத்து பறிக்கிறதுன்னு எல்லா வேலைகளும் அவனுக்கு அத்துபடி. அவன் தினசரி பாடுபட்டு ஒழச்ச, பண்ணையாரின் அஞ்சு வேலி நெலம், பணத்தாசையால், அவர் மனைவி லட்சுமி பேருல லட்சுமிபுரமா மாறிடிச்சி. கூலி வேலை செய்யுறவங்களுக்கு அதை எதிர்த்து நிக்கிற திராணியெல்லாம் இல்லை.

      “மாற்றம் ஒன்றே மாறாததாமே” என்னமோ சொல்லிக்கிறாங்க. ஆனால்,வயல்களில் கூலி வேலை செய்தவர்களும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, வயல் வேலையை மறந்துட்டு, கட்டட வேலைக்கு செல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. அதுவரை வயல்வெளி வேலைகளை மட்டுமே செய்து பழகிய முருகனுக்கு, சித்தாள் வேலையே கெடைச்சுது. மேஸ்திரி கமிசன் எடுத்துக்கிட்டுதான் மீதிய குடுப்பாரு. ஒவ்வொரு நாள்ள, இஞ்சினியர்களும், மேஸ்திரிகளும் பொழுது சாயுறச்சதான் புதுசா ஒரு மூட்டை கலவைப்போடுன்னு சொல்லுவாங்க. வேற வழியே கெடையாது. செஞ்சுத்தான் ஆவணும்.. மறுத்தாலோ,முணகினாலோ மறுநாள் வேலை கெடைக்காது. அதுபோன்ற நாட்களில் வீடு திரும்ப ராத்திரி எட்டுமணியாயிடும்.

      அன்றும் அதுபோலத்தான் நடந்துச்சி. வேலை முடிச்சிட்டு, புள்ளைங்களுக்கு பட்சணம் வாங்கிக்கிட்டு எட்டுமணியளவில் பழைய அட்லஸ் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது எதிரே  வந்த சரக்கு வாகனம் மோதியதில், சாலையோர புளியமரத்தின் மீது தூக்கியெறியப்பட்டான். பின் மண்டையில் பலத்த அடிபட்டு  மயங்கிப்போனான். அவன் தலையிலிருந்து பீரிட்ட ரத்தம் ஆறுபோலத் தொடங்கி சிறு வாய்க்காலாய் குறுகி ரோட்டில் நீண்டிருந்தது. சைக்கிள் எங்கோ ஒரு மூலையில் உருண்டு கிடந்தது. பட்சணங்கள் சிதறிக்கிடந்தன.  விளக்கில்லா சாலையில், கரிப்பூசிய இருட்டில், அவன் அடிபட்டுக் கிடந்ததே யாருக்கும் தெரியவில்லை.

       நீண்ட நேரமாகியும் கணவன் வீடு திரும்பாததனால், பதற்றமான வள்ளி அவனைத் தேடிக்கொண்டு சென்றபோது, உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவசரமாய் ஆட்டோ பிடித்து அள்ளிப் போட்டுக்கொண்டு, பெரியாஸ்பத்திரி போவதிற்குள் பிணமாகிவிட்டான் முருகன். யாரு அடிச்சுப்போட்டுட்டுப் போனதுன்னு கண்டுபுடிக்கவே முடியல.

       “நாம ரெண்டுபேருந்தான், படிக்காம கூலி வேலைக்கும், வீட்டு வேலைக்கும் போறோம். நம்ம புள்ளைங்களையாவது நல்லா படிக்கவச்சி , நல்ல வேலைக்கி அனுப்பிடணும். அதுங்க சொந்தக்கால்ல நிக்கணும். அதுக்குப்பொறவுதான்  கல்யாணபேச்சே எடுக்கணும்.” பெரியவ சரண்யா வயசுக்கு வந்ததிலேருந்து, முருகன் சொல்லிக்கிட்டே இருந்தான். அவளுக்கும் பதினஞ்சி வயசாயிடுச்சி. பத்தாவது படிக்கிறா. எப்படியாச்சும் காலேஜுல சேர்த்து படிக்கவச்சிட்டாப் போதும். அவ கதைய அவ பாத்துப்பா. அதுவரைக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அவ படிப்ப நிறுத்திடப்புடாது. கனவுகளும்,வைராக்கியமும் வள்ளியின் மனதைக் கல்லாக்கின.

      வழக்கமாக எழுந்திரிக்கும் நேரமான நாலு மணியாகிவிட்டது என்பதை  சேவல்களின் “கொக்கரக்கோ” கூவலோசை அறிவுறுத்தியது. நடு ராத்திரியிலேருந்து   தூக்கம்புடிக்காத கண்களில் அயர்ச்சியும் எரிச்சலுமே மிச்சமிருந்தன. எழுந்து வாசல் தட்டியைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தாள். மழை முழுசா விடல.  லேசாகத் தூறிக்கிட்டிருந்துச்சி. மழைவிட்டாலும் தூவானம் விடலைன்னு இதைத்தான் சொல்லுறாங்க போலும்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டா. தட்டிய முழுசாத் தொறந்துக்கிட்டு வெளியில வந்தா. மனசு ‘பக்’குன்னு ஆயிடுச்சி.முருங்கமரத்துல இருந்த பெரிய கிளை அடுகடையா முறிஞ்சி வாசல்ல கெடந்துச்சி. அதிலேருந்த சின்னச்சின்ன கிளைகளிலும் கூட ஒரு கை நீளத்திற்கு காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. விழுந்து கெடக்குற காய்களைப் பறிச்சா எப்புடியும் எரநூறு காய்க்கு கொறயாமத் தேறும். எல்லாத்தயும் பறிக்கணும். பறிச்சா மட்டும் பத்தாது வித்து காசாக்கணும். இருட்டுல தடுமாறிவுழுந்துடாம பறிக்கணுமே! புள்ளைங்கள எழுப்பலாமா?  சின்னவ சரிப்பட்டு வரமாட்டா. பெரியவள மட்டும் எழுப்பிக்கிட்டு வருவம்னுட்டு மீண்டும் குடிசையின் உள்ளே போனாள் வள்ளி. இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிக்கிட்டு இருந்தா சரண்யா.

       “சரண்யா! எழுந்திரிம்மா” லேசாக உலுக்கியதுமே துடித்துப்பிடித்து எழுந்தாள் அவள்.

       ராத்திரி அடிச்ச காத்துமழைல முருங்கக்கெள முறிஞ்சிக்கெடக்கு சரண்யா. அது கொள்ளாத காயா இருக்கு. ஆடு மாடுங்க வந்துச்சுன்னா, போட்டு மிதிச்சி துவம்சம் பண்ணிடும். தெரு சனங்க கூடுச்சுன்னாலும், ஆளாளுக்குப் பறிச்சிக்கிட்டு போயிடுவாங்க.  அதனால, சீக்கிரம் வா, முடிஞ்சவரைக்கும் பறிச்சிடுவம். நாம குடுத்தா வூட்டுக்கு ரெண்டு குடுத்தா போதும். அவுங்களா பறிச்சா, பத்துப் பதினஞ்சின்னுப் பறிச்சிக்கிட்டு போயிடுவாங்க. ‘அண்டவூட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ன்னு ஓசியில கெடைச்சா,வூட்டுல கொண்டுபோயி சேக்கத்தான் பாப்பாங்க. காசும் கேக்க முடியாது. பறிச்சி எடுத்துக்கிட்டுப் போனோமுன்னா, லட்சுமிபுரத்துல பத்து ரூவாய்க்கி ரெண்டுன்னு வித்துடலாம். ஒங்க ரெண்டு பேருக்கும்  கொறச்ச வெளயில ஆளுக்கு ஒரு சுடிதாரு எடுக்கணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தன். நீங்களும் எம்மா நாளக்கிதான் வெளுத்துப்போனதயே போட்டுக்கிட்டு வெளியில போவீங்க.

       “சரிம்மா! வாம்மா, விடியிறதுக்குள்ள பறிச்சிடுவம். ஆனா, கரண்டு வேற இல்லியே! ஒரே இருட்டாக் கெடக்கே! பறிச்சிட முடியுமாம்மா?” கேள்வியெழுப்பினாள் சரண்யா.

      “சிம்னி வெளக்க வாசல்ல கொளுத்தி வக்கிறன். அந்த வெளிச்சத்துல முடிஞ்சவரைக்கும் பறிச்சம்னா, அதுக்குள்ள விடிஞ்சிடும். மழ தூறிக்கிட்டு இருக்கு. தலக்கி  ஜவுளிக்கட சௌதாள் பைய கவுத்துப் போட்டுக்க. மழயில நனைஞ்சி ஒடம்புக்கு வரவழச்சிக்கப்புடாது எனக்கும் ஒரு பையி எடு. எரவானத்துல சொருகியிருக்குப் பாரு. எடுத்து வாசல்ல வச்சி ஒதறு. பூச்சிப் பொட்டுங்க இருக்கும்”

      ஆளுக்கொரு சௌதாள் பையை சுருட்டி மடக்கி தலையில் குல்லா போல போட்டுக்கிட்டு, வாசலுக்கு வந்தனர் இருவரும். ‘மடக்…மடக்’கென்று காம்புகளை முறித்து  காய்களை மளமளவென்று பறித்துக் குமித்தனர். முருங்கைக் கீரைகளில் அப்பியிருந்த ஈரம்,சரண்யாவின் நைட்டியை நனைத்தது. ஆனால், வள்ளியோ பொடவய தூக்கி செருகியிருந்தா.அதனால அவ  பொடவ ரொம்ப ஈரமாகல.அவசரம் அவசரமா ரெண்டுபேரும் எல்லாக் காயையும் பறிச்சி முடிச்சு எண்ணிப்பாத்தாங்க. முந்நூத்திப்பத்து காயிங்க இருந்துச்சி.

     “அம்மா! ஓசியில குடுக்கிறதுக்கு அறுவது காய ஒதுக்கி வச்சுடும்மா. மீதி எரநூத்தம்பது காய வித்துடலாம்மா.ஒரு காயி அஞ்சு ரூவான்னா, ஆயிரத்தி எரநூத்தம்பது ரூவாய்க்கி விக்கலாம்மா.அந்தக்காசுல எங்க ரெண்டு பேருக்கும் சுடிதாரு எடுத்துடலாம்மா”

     “கண்டிப்பா எடுத்துடலாம்டா கண்ணு. எப்படியாச்சும் இந்தக் காய்கள இன்னிக்கி காசாக்கிடணும்” சொல்லிக்கொண்டே முருங்கைக்காய்களை வீட்டினுள்ளே கொண்டுபோய் அடுக்கினாள் வள்ளி.

      “என்னா வள்ளி, காத்துல முருங்கமரம் விழுந்துட்டுதா? காயெல்லாம் என்ன பண்ணின? ஒரு காயக்கூட வெளியில காணும்” கேட்டுக்கொண்டே வந்தாள் தவணைக்காரர் பொண்டாட்டி சகுந்தலா.

      “இப்பதாங்க்கா பறிச்சு உள்ள வச்சன். விக்கிறதுதான்”

      “எனக்கு இருவது காய் கொடு”

      இருவது காய்களையும் ரெண்டு முறை எண்ணி வாங்கிக்கொண்ட சகுந்தலா, இருவது ரூவாய் நோட்டை எடுத்து நீட்டிவிட்டு நடையைக் கட்டினாள்.

Exit mobile version