மின்கிறுக்கல்

முகங்கள்

ஏழாம் வகுப்பு ‘C’ பிரிவு முதல் நாள் வகுப்பாசிரியர் அனைத்து மாணவர்களையும் உயரப்படி வரிசையில் நிற்க வைத்துக்கொண்டிருந்தார். முதல் பெஞ்சில் மட்டும் அமர்ந்து விடக்கூடாது என்ற குறிக்கோளோடு அப்படி இப்படி உயரத்தை மாற்றி இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். பக்கத்தில் என்னைவிட ஒரு சென்டிமீட்டரோ அரை சென்டிமீட்டரோ உயரம் குறைந்த நண்பன் ஒருவன் அமர்ந்தான். சுண்டினால் இரத்தம் வரும் நிறம் என்பார்களே அப்படி ஒரு நிறம் அவன். கைகளை அழுத்திப் பிடித்தால் உள்ளே ஓடும் பச்சை நரம்புகள் எல்லாம் வெளியில் தெரியும். முன் பற்கள் கொஞ்சம் எடுப்பாக இருக்கும். சிரித்தால் உதடுகளுக்கு வெளியில்  கொஞ்சம் எட்டிப்பார்க்கும். அவனை அறிமுகம் செய்யும் போதே நண்பன் என்று ஏன் அறிமுகம் செய்தேன் என்றால் அவன் உண்மையிலேயே நண்பன். எந்த எதிர்பார்ப்புகளுமற்ற நண்பன். இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நட்பு என்பது பள்ளி நாள்களில் மட்டுமே அமையும் என்று நினைக்கிறேன். அவன் என்னிடம் அதிகபட்சமாக எதிர்பாத்தது கொஞ்சம் அன்பை மட்டும் தான். இருவரும் அருகருகில் அமர்ந்தோம். 

முந்தைய ஆண்டு ஆறாம் வகுப்பு, விடுதியில் தங்கிப்படித்தேன். அப்போது பொங்கல் விடுமுறை சென்று பத்து நாள்கள் வீட்டிலேயே தங்கிவிட்டதாலும், சிலமுறை விடுதியில் இருந்து தப்பிக்க வழிதேடியதாலும், ஒருமுறை மண்டை உடைந்து மருத்துவமனை சென்று தையல் போட்டுக்கொண்டு பல நாள்கள் விடுப்பெடுத்து வீட்டுக்குச் சென்றுவிட்டாதாலும், விடுதி வார்டனான அருட்தந்தை என் அப்பாவை அழைத்து.

“உன் மகனுக்கு கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லை. இப்படிப்பட்ட ஒழுங்கீனத்தை எல்லாம் ஹாஸ்ட்டல்ல வச்சிருக்க முடியாது அடுத்த வருஷம் கூட்டிட்டு போயிடு” என்று மரியாதையாகச் சொல்லி விட்டாதாலும். நான் ஏழாம் வகுப்பு முதல் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கினேன்.

அந்த அருட்தந்தை உணமையிலேயே மிக நல்லவர். அவரைப் போலவே அவரிடம் பேசிக்காட்டி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறேன். ஒருமுறை எண்பது சதவீதிற்கு மேல் அரையாண்டில் மதிப்பெண் எடுத்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண என் அறைக்கு வரலாம் என்றார் அவர். இச்சலுகை ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு மட்டும். அவருக்கு அருகிலேயே சென்று அமர்ந்துகொண்டு கிரிக்கெட் பார்த்திருக்கிறேன். விடுதியில் இருந்து இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற போது பேருந்தில் அவர் மடியில் படுத்துறங்கி இருக்கிறேன். இப்படி ஒரு பாசக்காரர் என்னைப் பற்றி ஏன் அப்படிச் சொன்னார் என்று இப்போதும் புரியவில்லை. மண்டை உடைந்து விடுப்பெடுப்பது ஒரு குற்றமா?

சரி அவரைவிடுங்கள். நம் நண்பனுக்கு வருவோம். விடுதியில் இருந்து வெளியேறியிருந்ததால் நான் ஏழாம் வகுப்பிலிருந்து “பாண்டியன் போக்குவரத்து கழகத்தின்” உதவியோடு வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. நானும் என் நண்பனும் ஒரே ஊராக இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரே பேருந்தில் பயணிப்போம். இந்தப் பயணம் மதுரை தெப்பக்குளம் வரை இருக்கும் அதன் பின் வெவ்வேறு பேருந்து பிடித்து அவரவர் வீட்டிற்குச் செல்வோம். இடையில் ஏதாவது பேருந்து நடத்துனர் என்னைப் பிடித்து

“என்னடா விரகனூர் போக வேண்டியவன் அனுப்பானடி பஸ்ல ஏறியிருக்க? உன்  பாஸ் இந்த பஸ்ல செல்லாது தெரியும்ல?” என்றாலோ

அல்லது அவனைப் பிடித்து “இந்தப் பஸ் அனுப்பானடி போகதேடா” என்றாலோ

“ஐயய்யோ! அப்படியாண்ணே.. தெரியாமா ஏறிட்டேண்ணே அடுத்த ஸ்டாப்ல இறங்கிறேன்” என்று கூறி இருவருமே இறங்கிவிடுவோம்.

எத்தனை பஸ் மாறினால் என்ன அதான் இலவச பஸ் பாஸ் இருக்கிறதே. அடுத்த பேருந்தின் நடத்துனர் “என்னடா தப்பான ஸ்டாப்ல ஏறியிருக்கீங்க ” என்றாலும் அதிக பட்சம் அதற்கு அடுத்து இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது. இப்படி பேருந்து நடத்துனரிடம் திட்டு வாங்கி இறங்குவதில் கூட ஒரு மகிழ்ச்சி இருந்தது அப்போது. எல்லாமே ஜாலி தான் அந்த வயதில். 

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. என்னிடம் நெருங்கிப்பழகுபவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடித்துக்கொண்டே இருப்பது. அப்படி என்னிடம் அடி வாங்குவதற்கென்றே அருகில் வந்து அமர்ந்தவன் இவன். திடீர் திடீரென்று முதுகில் ஓங்கி அடித்துவிடுவேன். சில சமயம் வலியால் சுருண்டு விடுவான். ஆனால் ஒரு முறை கூட என்னைத் திருப்பித் தாக்க முற்பட்டதில்லை. 

எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் வகுப்பை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அதாவது இந்த வருடம் நம் வகுப்பில் இருக்கும் அனைவரும் அடுத்த வருடம் வர மாட்டார்கள். ஒரு பெரிய குலுக்கு குலுக்கி வெவ்வேறு வகுப்புகளில் போட்டுவிடுவார்கள். நானும் என் நண்பனும் அப்படித்தான் எட்டாம் வகுப்பில் பிரிந்தோம். ஆனாலும் எங்கள் நட்பும் பேருந்து பயணமும் தொடர்ந்துகொண்டே தானிருந்தது.

எட்டாம் வகுப்பு முடிவில் நடந்த பெரிய குலுக்கல் எங்கள் இருவரையும் ஒன்பதாம் வகுப்பில் இணைத்தது. அடிவாங்க மறுபடி ஆள் சிக்கிவிட்டான்.

“என்னடா உன்னை இப்படி அடிக்கிறேனே. உனக்கு கோபமே வரலையா?” என்று நான் ஒரு முறை கேட்டதற்கு.

“உன் வயசு அப்படி… உனக்கு யாரைப் பார்த்தாலும் அடிக்கத் தோணுது… எனக்கு அப்படியில்ல…” என்று அறிவுரை எல்லாம் வழங்கினான்.

அவனுக்கும் என் வயது தானே? இப்போது நினைத்துப்பார்க்கும் போது எல்லாம் வேடிக்கையாகத் தானிருக்கிறது. அவனால் அந்த வயதில் எப்படி அவ்வளவு “மெச்சூரிட்டியோடு” பேச முடிந்தது. ஒவ்வொரு செயலிலும் அவ்வளவு நிதானம் இருக்கும்.

பள்ளியில் இருந்து திரும்பும்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதுரை முனிச்சாலையில் இருக்கும் பெருமாள் கோவில் ஒன்றிற்குச் செல்லத் தொடங்கினேன். என் நண்பன் ஒரு இஸ்லாமியன். அவனும் என்னோடு எப்போதும் கோவிலுக்கு வருவான். நான் சுற்றும்போது என்னோடு சுற்றுவானே தவிர கடவுகளை வணங்கவோ திருநீறு குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடவோ மாட்டான்.

“இதே நானா இருந்தா உங்க மசூதிக்கு வந்து நீ என்ன சொல்றியோ செய்வேன். எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் நீ ஏன் திருநீறு கூட பூச மாற்ற” என்று ஒருநாள் கேட்டேன்.

“எனக்கு நம்பிக்கை இல்லாத விசயத்தை நான் செஞ்சா என்ன செய்யாட்டி என்ன?” என்றான் அவன்.

ஆனாலும் எனக்கு அவனை எப்படியாவது திருநீறு குங்குமம் இட்டுக்கொள்ள செய்துவிட வேண்டும் என்ற ஒரு குரூர எண்ணம் தோன்றியது.

“அதான் உனக்கு நம்பிக்கை இல்லை. வச்சாலும் வைக்காட்டியும் ஒன்னு தானே? அப்போ நீ வை..” என்றேன்

ஓரிரு வற்புறுத்தலுக்குப் பின் திருநீறையும் குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். 

“இதை என் நெத்தில வச்சாக்கூட இது வெறும் சாம்பல் தானே தவிர இதுக்கு என்கிட்ட வேற எந்த அர்த்தமும் இல்லை. நீ ரொம்ப நம்பிக்கையா பெருசா நினைக்கிற விசயத்தை நான் பேருக்கு என் நெத்தில வச்சா அது உன் நம்பிக்கைய அவமதிக்கிற மாதிரி தானே?” என்று ஏதோ பெரிய தத்துவத்தை சொல்ல விழைந்தான். எனக்கு அதல்லாம் ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. நான் நினைத்த காரியம் வென்றுவிட்டது. எங்கள் பேருந்து பயணம் முடியும் வரை அப்படியே தானிருந்தான். அவன் வீட்டிற்குச் செல்லும் முன் அழித்துவிடுவதாகக் கூறினான்.

பள்ளி நாட்களில் உடைந்த பெஞ்சின் காலோ அல்லது நல்ல நீளமான வேறு கட்டையோ கிடைத்துவிட்டால் உடனே ஐந்து ரூபாய்க்கு ஒரு இரப்பர் பந்தை வாங்கிக்கொண்டு பந்தயம் கட்டி கிரிக்கெட் விளையாடச் சென்றுவிடுவோம். அந்தக் கட்டைகளை முடிந்த அளவு பத்திரமாக பள்ளிக்குள்ளேயே பதுக்கி வைப்போம். பொதுவாக பந்தய ஆட்டங்கள் ஆட எங்கள் பள்ளியின் வெளி மைதானத்திற்கு சென்றுவிடுவோம். 

அந்த வெளி மைதானம் பள்ளியில் இருந்து ஒரு எழுநூறு மீட்டர் தள்ளி தனியாக இருக்கும். பள்ளி நேரம் முடிந்த பின் அங்கே பெரிதாக வாத்தியார்கள் நடமாட்டம் இருக்காது. அது மிகப்பெரிய மைதானம். இரண்டு கால் பந்தாட்ட மைதானம் மற்றும் ஒரு ஹாக்கி மைதானத்தை உள்ளடக்கியது. வெளியில் மூன்றாள் உயர மிகப்பெரிய தகரக் கதவால் மூடியிருப்பார்கள். என்னதான் கதவு மிகப்பெரியதாக இருந்தாலும்  அதற்கு உள்ளே பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தாலும் அவற்றால் அங்கே பயனேதும் இல்லை. உள்ளே நுழைய பல வலிகள் இருக்கின்றன. ஒரேயொரு வயதான காவலர் மட்டும் தான் உள்ளே இருப்பார். எங்கள் பள்ளி அல்லாத அந்தப் பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். அந்தக் காவலருக்கு அந்தப் பகுதிக்காரர்களை கண்டால் கொஞ்சம் பயம் அதனால் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார். பள்ளிச் சீருடையைப் பார்த்தால் தான் வந்து விரட்டுவார். நாங்கள் அனைவரும் அங்கு விளையாடச் செல்லும்போது சட்டையை மாற்றிவிடுவோம்.

அப்படி ஒருநாள் இரு அணிகள் மொத்தம் இருபத்தி இரண்டு பேர் விளையாடிக்கொண்டிருந்தோம். எப்போதுமில்லாமல் அன்று நான் அடித்த பந்து பௌண்டரியை தாண்டிச் சென்றது. நான் நாளா? ஆறா? என்று நடுவருடன் விவாதித்துக்கொண்டிருந்தேன். நான் அடித்த பந்தை எடுக்கப் போன எங்கள் எதிரணிக்காரன் தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பகுதி சிறுவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒருவன் பந்தை எடுக்கப் போனவனை கன்னத்தில் அறைந்தான். அதைப் பார்த்த நான் கோபம்கொண்டு கையில் இருந்த கட்டையோடு ஓடினேன். 

ஓடும்போதே என் மனதிற்குள் எதிரே இருப்பவர்களை கணக்குப்போட்டேன். அவர்கள் எட்டுப்பேர் இருந்தார்கள் அவர்களில் இருவர் எங்கள் பள்ளியில் படிப்பவர்கள். நாங்கள் இருபத்திரண்டு பேர். 22 Vs 8 அவர்களை அடித்து துவைத்து கால் பந்தாட்ட ‘கோல் போஸ்ட்டில்’ தொங்கவிட்டு விட வேண்டும். என்று வெறியோடு சென்று பந்தெடுக்க போனவனை அறைந்தானே ஒருவன் அவன் காலில் கட்டையால் ஒரு போடு போட்டேன். 

இமை மூடித்திறக்கும் முன் என் மீது பல ஸ்டெம்ப் கட்டைகளும் குச்சிகளும் மட்டைகளும் வந்து மோதின. நான் சுதாரிக்க சில வினாடிகள் பிடித்தன. என்னோடு வந்த இருபத்தியொரு பேரில்  இருபது பேர் அவரவர் பைகளைத் தூக்கிக்கொண்டு துண்டைக்காணாம் துணியைக்காணோம் என்று ஓட்டம்பிடிக்கத் தொடங்கியிருந்தனர். யாரை அறைந்ததை தட்டிக்கேட்க நான் ஓடி வந்தேனோ அந்த அறை வாங்கியவனே ஓடிவிட்டான்.

என்னோடு இருந்து அடிபட்டது என் நண்பன் ஒருவன் மட்டுமே. என்னை அடித்துக்கொண்டிருக்கும் அந்த எட்டில் இருவர் எங்கள் பள்ளி மாணவர்கள் என்று கூறியிருந்தேனே அவர்கள் இருவரும் பள்ளியில் தங்களை பெரிய இரவுடிகள் என்று காட்டிக்கொண்டிருப்பவர்கள். நான் அவர்களை ஒடுக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்து ஓடினேன். என்னோடு இருந்த நயவஞ்சகர்களை கணிக்கத் தவறிவிட்டேன். 

அடி என்றாலும் அடி அப்படி ஒரு அடி. நானும் என் கையில் இருக்கும் கட்டையை சுழற்றி சிக்குபவனை அடித்தேன். ஆனால் அவர்களின் அடி மழை கொட்டுவதைப் போல் சரமாரியாக அடித்துத் துவைத்த தர்ம அடி. அந்த இரண்டு ரவுடிகளில் ஒருவன் என் நண்பனுடன் எட்டாம் வகுப்பில் ஒன்றாகப் படித்திருக்கிறான் ஆதலால் என் நண்பன் ஒருவாறு கெஞ்சிக்கூத்தாடி என்னைக் காப்பாற்றினான். ஆனாலும் “டேய் ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாங்கடா… நாளைக்கு இதே இடத்துக்கு வரேன்டா…” என்று மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டேன்.

மற்ற இடங்களில் விழுந்த அடி கூட ஓரிரு நாள்களில் சரியாகிவிட்டது. குறுக்கு எலும்பில் விழுந்த அடி ஒரு மாதத்திற்கும் மேல் வலித்தது. வீட்டில் கூட சொல்ல முடியாத நிலை. சொன்னால் வீட்டிலும் தர்ம அடி விழும். பின்னாளில் அந்த இரண்டு ரவுடிகளும் கூட என் நண்பர்களாகிப் போனார்கள்.

மதுரையில் ஒரு ரம்ஜானுக்கு ஒட்டக விருந்து நடந்தது. ஒட்டகம் வெட்டியவர் என் நண்பனின் தந்தைக்கு வேண்டியவர் என் நண்பன் வீட்டிற்கும் ஒரு பங்கு ஒட்டகம் வந்தது. என் நண்பன் இதை முன்னமே கூறி எனக்கு அழைப்புவிடுத்திருந்ததால். ஒட்டகக் கறி உண்ணும் பாக்கியம் எனக்கு கிட்டியது.

பத்தாம் வகுப்பு முடிந்த பின் அவனுடைய மதிப்பெண் சற்று குறைந்துவிட்டதால் அவனுக்கு எங்கள் பள்ளியில் முதல் குரூப் கிடைக்கவில்லை. வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டான். அப்போதும் அடிக்கடி என்னை வந்து எங்கள் பள்ளியில் சந்திப்பான். இன்லேன்ட் போஸ்ட் கார்டு வாங்கி அதில் லெட்டர் எழுதி அனுப்புவான்.

காலம் யாரையும் எப்போதும் ஒன்றாகவே வைத்திருப்பதில்லை. கல்லூரி விடுதிக்குச் சென்ற பின் எங்களுக்குள் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது. இப்போதும் ஒவ்வொரு முறை இந்தியாவிற்குச் செல்லும்போதும் அவன் இன்னுமும் அதே பழைய வீட்டில் தான் இருப்பானா? ஒருமுறை போய் எட்டிப்பார்க்கலாமா? என்றெல்லாம் தோன்றும் ஆனால் அவன் பழகிய அளவிற்கு அவன் வீட்டில் நான் யாருடனும் பழகியதில்லை. எப்படி தெரியாத மூஞ்சியை வைத்துக்கொண்டு எட்டிப்பார்ப்பது? 

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -13

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

Exit mobile version