மின்கிறுக்கல்

மாமழையே

அனல் பறக்கும் நிலத்தில்

என் குழந்தையின் கண்ணீர்

ஆவியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

சமாளிப்பதற்கு வழி தேடுகிறேன்.

வறண்டு கிடக்கும்

நிலத்துண்டைக் குழைத்து

பொம்மையாக்க வேண்டும்.

முரண்டுபிடிக்காமல் நீ வருவாயா மழையே…

**********

விலகிச் சென்றாலும்

தேடி வந்து நனைக்கும்

மழைச் சாரல் நீ.

விலகுவதற்கு மாறாக

நனைந்து பார்க்கிறேன்.

வெம்மையின் கொடுமையில்

காய்வதைக் காட்டிலும்

கூதளில் நடுங்கிக் கிடப்பதை

சொன்னால் புரியாது

வா சேர்ந்து நனைவோம்!

***********

மழைப் பொழுதொன்றில்

சாளரத்திற்குள்ளே நான்.

கண்ணாடியில் வழியும் நீர்த்துளியாய் நீ.

கலங்காமல் காத்திரு

அடுத்த நிறுத்தம் வரைதானே

இப்பேருந்து

நம்மைப் பிரிக்க முடியும்!

Exit mobile version