இப்படிக்கு நான்
அன்புள்ள லலிதாவிற்கு
நானும் நகரச்சத்தங்களும்
நலம்.
எனது பெருவெளியின்
இரைச்சல்கள்
நலமுடன் இருக்க
வாழ்க்கையிடம் மண்டியிட்டு
வேண்டிக்கொள்.
கடைவீட்டிற்குக் கீழ்
எப்பொழுதும் உலாவும்
கரும்பூனையும் எனது பசியும்
உன்னை நலம் விசாரித்தன.
மாதக்கடைசியில்
சேகரிக்கப்படும் சில்லறை
காசுகளைப் போல்
உனது சிரிப்பை
நினைத்துப் பார்க்கிறேன்.
பதில் எழுதி விடாதே.
உன் கடிதங்களைத் தாங்கும்
பெட்டி என்னிடம் இல்லை.
குறிப்பாக முகவரியற்று
நீ நினைப்பது போன்ற
எந்த உலகச் சடங்கும்
இல்லாத என்னிடம்
உன் கடிதங்கள் சேர்வதில்லை.
அடுத்த மடலில்
சந்திக்கும்வரை
உறக்கமற்ற
என் கனவிலிருந்து
விடைபெறுவோம்.
– கே.பாலமுருகன்