மின்கிறுக்கல்

பூனைகள் நகரம்

பூனைகள் நகரம் – ஹாருகி முரகாமி
தமிழில் – ஜி.குப்புசாமி
வெளியீடு – வம்சி பதிப்பகம்

ஜப்பானின் மிக முக்கியமான எழுத்தாளர் ஹாருகி முரக்காமி. அவருக்கு ரசிகர்கள் உலகம்முழுவதும் இருக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள். அவரது ஒவ்வொரு கதையிலும் தேடலே மையப் பொருளாக இருக்கிறது. அதில் வரும் கதாபாத்திரங்கள் ஒன்று தொலைந்து போகிறார்கள் இல்லை முடிவில்லாத் தேடுதல் நிகழ்த்துகிறார்கள். கதைகளுக்கு மிகுந்த கவர்ச்சியளிப்பது அவர் லாவகமாகப் பின்னும் மாயயதார்த்த வலைதான். நகமும் சதையுமாக மனிதர்கள் உலவும் அதே உலகில் பேசும் குரங்கும், பூனைகள் குடியேறிய நகரமும் இருக்கின்றன. தொடக்கத்தில் கதைகள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினாலும் போகப் போக அவை மனதிற்கு நெருக்கம் கொள்கின்றன.

தொகுப்பின் முதல் சிறுகதை ‘ஆளுன்னும் பூனைகள்’. திருமணத்தை மீறிய உறவில் உள்ள கதைசொல்லியும் இசுமி என்கிற பெண்ணும், தங்கள் இணைகளுக்கு தங்களின் உறவு பற்றித் தெரிந்த பின் ஜப்பானிலிருந்து வெளியேறி கிரீசில் தங்குகின்றனர். பூனைகள் பற்றிய மூன்று கதைகள் அவர்களுக்குள் வருகின்றன. சிறுவயதில் அவன் பார்க்க மறைந்த போன பூனையைப் போலவே இசுமியும் திடீரென காணாமல் போகிறாள்.

“என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம். பிற்கால முதலாளித்துவத்தின் ஒரு முன் சரித்திரம்” சிறுகதையில் கதைசொல்லி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

//இது அவர்கள் கதை. இது ஒரு சந்தோஷமான கதை அல்ல. இப்போது அதைத் திரும்பிப் பார்க்கையில் அதில் எந்தப் பாடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் இது அவர்களது கதை; அதே நேரத்தில் எங்களது கதை. நான் சேகரித்து வைத்த ஒருவகை நாட்டார் இலக்கியம்.// அறுபதுகளில் ஜப்பான் இளைஞர்களின் மனநிலையைப் படம் பிடிக்கும் சிறுகதை இது.

‘தேடுதல்’ சிறுகதையில் ஒரு தன்னார்வலத் துப்பறிவாளனிடம் வரும் பெண்மணி, இருபத்தி நான்காவது மாடியில் வசித்த தனது தாயாரைப் பார்த்துவிட்டு இருபத்தி ஆறாவது மாடியில் இருந்த தனது வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கையில் காணாமற்போன தனது கணவனைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்கிறாள். அவனும் அவள் வசித்த குடியிருப்புக்கு வந்து அவள் கணவன் மாடிக்கு ஏறிய படிகளைத் தினமும் பார்வையிடுகிறான். அங்கே அவன் சந்திக்கும் ஒரு சிறுமியுடனான உரையாடலின்போதுதான் அவன் அந்த பெண்மணியின் கணவனை மட்டும் தேடவில்லை என நமக்குத் தெரிய வருகிறது. இறுதியாக அவள் கணவன் கிடைத்துவிட்டாலும் அவனது தேடுதல் முற்றுப்பெற்றதா என்ற கேள்வியோடு முடிகிறது கதை.

‘ஷினாகவா குரங்கு’ என்ற கதையில் வரும் நாயகி, தனது பெயரை மறந்து போகிறாள். யாரேனும் அவளது பெயரைக் கேட்கும் போதெல்லாம் தனது அடையாள அட்டையை எடுத்துப் பார்த்தே அவளால் சொல்ல முடிகிறது. பெயரைத் தவிர மற்ற அனைத்துவிஷயங்களும் அவள் நினைவில் இருக்கின்றன. இது ஒரு வினோத மன நோயின் தொடக்க நிலையாக இருக்கலாம் எனக் கருதி மனநல ஆலோசகரிடம் செல்கிறாள். அவரின் துணை கொண்டு தனது பெயர் மறந்ததன் காரணத்தைக் கண்டுகொள்கிறாள். அந்தக் காரணம் நம்ப முடியாததாக இருந்தாலும் ரசிக்கும்படியாக உள்ளது. இச்சிறுகதையைப் படிக்கும் முன்னரே அதன் தொடர்ச்சியாக வந்த ‘ஷினாகவா குரங்கின் வாக்குமூலம்’ சிறுகதையைப் படித்துள்ளேன். அந்தக் கதையின் பிளாஷ் பேக்கைப் படிப்பது போல் இருந்தது. புதிதாகப் படிக்கும் போது இருக்க வேண்டிய சில ஆச்சர்யங்களை அதனால் இழக்கும்படி ஆகிவிட்டது.

‘பூனைகள் நகரம்’ சிறுகதையில் வரும் டெங்கோ தந்தையிடம் வளர்கிறான். தாயைப் பற்றிய அவனது ஒரே ஞாபகம், அவள் ஒரு ஆடவனோடு நெருக்கமாக இருக்கிறாள். ஆனால் அது அவன் தந்தை அல்ல. தானே தன் தந்தைக்குப் பிறக்கவில்லையோ என்ற சந்தேகம் அவனுக்குண்டு. அவன் தந்தை அவனிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்கிறார். இருவருக்குமிடையே ஒரு பாசமற்ற உறவே நீடிக்கிறது. கதைக்குள்ளே ஒரு ஊடு கதையாக ‘பூனைகள் நகரம்’ கதை வருகிறது. மனிதர்களால் கைவிடப்பட்ட ஒரு நகரத்தில் பூனைகள் குடியேறி வாழ்ந்து வருகின்றன. அந்த நகரைப் பற்றித் தெரியாத ஒருவன் அங்கே வந்து மாட்டிக் கொள்கிறான். இனி தான் அங்கிருந்து திரும்பிப் போக வழி இல்லை எனத் தெரியும்போது, தான் அங்கே தொலைந்து போகவே வந்திருப்பதாக அறிகிறான். அவனைப் போலவே கதையில் வரும் டெங்கோவும் அவன் தொலைந்து போவதற்கான ஒரு வாழ்க்கையை சிருஷ்டித்துக் கொள்கிறான்.

தொகுப்பில் உள்ள பிற கதைகளும் இதே போன்று வினோதமான கதைப் பின்னல்களைக் கொண்டவை. ஆனால் அலாதியான வாசிப்பனுபவம் தருபவை.

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஜப்பானைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவற்றை ஹாருக்கி வடிவமைத்திருக்கும் விதத்தில் அவை எவரும் தொடர்புபடுத்திக் கொள்கிற universal தன்மையோடு விளங்குகின்றன. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பெறும்பாலும் அகவயமானது. உலகத்தில் எந்த மூலையில் இருந்து ஒருவர் படித்தாலும் அந்தக் கதாபாத்திரங்களில் தன்னைக் காணலாம்.

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு இத்தொகுப்பிற்குப் பெரும் பலமாக அமைகிறது. மிகச் சரளமாக தெளிவான் நடையில் கதைகள் இயல்பாக நகர்கின்றன.

உலக ரசிகர்களின் ரசனையில் சிறு துளியேனும் சுவைக்க விரும்பும் வாசகர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

-இந்துமதி மனோகரன்

Exit mobile version